பெற்றியான் ஊட்டிப் பெரும்பயன் கொள்வதே கற்றறிந்த மாந்தர் கடன் – அறநெறிச்சாரம் 137

நேரிசை வெண்பா

புகாப்பெருக ஊட்டிற் புலன்கண்மிக்(கு) ஊறி
அவாப்பெருகி அற்றந் தருமால் - புகாவுமோர்
பெற்றியான் ஊட்டிப் பெரும்பயன் கொள்வதே
கற்றறிந்த மாந்தர் கடன் 137

- அறநெறிச்சாரம்

பொருளுரை:

வயிற்றினுக்கு மிக்க உணவை ஊட்டினால் ஐம்பொறிகளும் அடங்காது எழுதலால் ஆசையானது வளர்ந்து அழிவினைப் பயக்கும்;

ஆதலால், உணவையும் கரணங்கள் தொழிற்படுதற்கேற்ற நிலையில் சிறிதளவு வயிற்றினுக்கு ஊட்டி இவ்வுடம்பால் வீடு பேற்றினுக்குரிய காரியங்களைச் செய்துகொள்வதே அறிவு நூல்களைக் கற்றுத் தெளிந்த பெரியோர் கடமையாகும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (25-Jul-22, 5:58 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 19

மேலே