பேனாவின் முனை குத்துகிறதா

சிவாஜி படத்தில் ரஜினிகாந்த் ஒரு வசனம் கூறுவார் “ பராசக்தி ஹீரோடா, பேரை கேட்டதுமே சும்மா அதிருதுள்ள” என்பார். ஆம் இன்றளவும் அந்த பெயர்கள் எல்லாம் சிலருக்கு கேட்டவுடன் பதற்றம் வருகிறது. நா வறட்சி ஏற்படுகிறது, குரலில் நடுக்கம் ஏற்படுகிறது, டென்ஷன் ஏற்படுத்துகிறது. அப்படிபட்ட பெயர்கள் தான் பெரியார், அண்ணா, கலைஞர்.
இந்த மூணு பேரும் செய்த சம்பவத்தால் இன்றளவும் அந்த கதறல் சத்தத்தை கேட்க முடிகிறது. தலைமையில் இருந்து அதிகார அறிவிப்பு கூட வரவில்லை பேச்சு தான் எழுந்துள்ளது. அந்த பேச்சுக்கே மூச்சு போகும் வரை ஏன் முந்தியடித்துக்கொண்டு போராட்டம் என்பது இங்கு கேள்வி. சரி உண்மையில் பிரச்னை என்னவென்றால் பேனா குத்தவில்லை, அது கலைஞரின் பேனா என்பதால் தான் குத்துகிறது. பேனா அனைவருக்கும் தான் கிடைக்கும் ஆனால் அதை யார் வளைந்து கொடுக்கிறார்.யார் வாளாக மாற்றுகிறார் என்று இருக்கிறது அல்லவா. அது போல தான் கலைஞரின் பேனா செய்த இன்றளவும் மாற்ற முடியாத விஷயங்களைபார்க்கலாம்.

1951ம் ஆண்டு திரைப்படப் பணி , கட்சிப்பணி ஆகியவற்றிற்கு இடையேயும் பத்திரிக்கைத்துறையில் தீராக் காதல் கொண்ட கலைஞர் அவர்கள் ‘மாலைமணி’ இதழின் ஆசிரியராக பொறுப்பேற்றார்.

1962 சட்டமன்ற தேர்தலில் தஞ்சைத் தொகுதியில் வெற்றி பெற்ற கலைஞர் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

18.09.1966 கட்சிப்பணி, மொழிப்போர், சிறைவாசம் போன்ற பல இன்னல்கள் இருந்தபோதும் தன்னுடைய ‘காகிதப்பூ’ எனும் நாடகத்தை அரங்கேற்றினார்.

06.03.1967 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதன்முறையாக அமைக்கப்பெற்ற திமு கழக ஆட்சியில் அண்ணாவின் அமைச்சரவையில் கலைஞர் பொதுப்பணித்துறை அமைச்சராக பதவியேற்றார்.

03.02.1969 திராவிட இனத்தின் ஒப்பற்ற தலைவராக விளங்கிய பேரறிஞர் அண்ணா அவர்கள் மறைந்தார். அண்ணாவின் மறைவையொட்டி கலைஞர் அவர்கள் இதயத்தை இரவலாகத் தாருங்கள் அண்ணா என்று கசிந்துருகி கவிதை எழுதியிருந்தார்.

09.02.1969 அண்ணாவின் மறைவை தொடர்ந்து சட்டமன்றக் கட்சித் தலைவராக திராவிட முன்னேற்றக்கழக உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவோடு கலைஞர் அவர்கள் தேர்வு செய்யப்பட்டு 10.02.1969 அன்று முதலமைச்சராக பதவியேற்றார்.

24.12.1973 திராவிட இயக்கத்தின் தூணாக விளங்கிய பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்கள் மறைந்த பொழுது, சட்டத்தில் இடமில்லை என்ற போதும் அரசின் அறிவிக்கையாக வெளியிட்டு தனது ஆசான் பெரியாரின் உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய ஆணை பிறப்பித்தார்.

1974 சுதந்திர தினமான ஆகஸ்டு 15 அன்று கோட்டைக் கொத்தளத்தில் மாநில முதல் அமைச்சர்கள் தேசிய கொடி ஏற்றும் உரிமையை மத்திய அரசிடம் போராடிப் பெற்றுத் தந்தார்.

28.03.1989 சமூக நீதிக் காவலராக விளங்கிய கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்த பொழுது மிகப் பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கினார்.

25.05.1990 தென்பாண்டிச் சிங்கம் நூலுக்காகத் தஞ்சைத் தமிழ் பல்கலைக் கழகத்தின் ‘மாமன்னன் இராஜராஜன் விருது குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா அவர்களால் வழங்கப்பட்டது. மேலும் அவர் தங்கப் பேனா ஒன்றைப் பரிசாக அளித்து, முத்தமிழறிஞர் எனப் பட்டம் வழங்கினார்.

07.08.1990 கலைஞர் அவர்கள் சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின்படி மண்டல் கமிஷன்அறிக்கை ஏற்கப்பட்டு மத்திய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டது.

1997– ஊரும் சேரியும் பிரிந்து கிடப்பதை ஒழிக்க வேண்டும் என்ற பெரியாரின் கனவை நினைவாக்கும் வகையில் ” சமத்துவபுரம்” உருவாக்கினார், ஊரக வளர்ச்சியை ஊக்குவிக்க “அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்”, நமக்கு நாமே திட்டம் தொடங்கப்பட்டது.

1.1.2000. முக்கடல் சங்கமிக்கும் குமரி முனையில் சாதி, மத, இன, வேறுபாடு அற்ற உலகப் பொதுமறையாம் திருக்குறள் கொடுத்த ‘அய்யன் திருவள்ளுவர் சிலை’ நிறுவி, தமிழர் தத்துவத்தை உலகுக்கு பறைசாற்றினார் கலைஞர்.

16.5.2006 பெரியார் நெஞ்சில் நீங்காமல் தைத்திருந்த முள்ளை அகற்றும் விதமாக “அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்!” தீர்மானத்தின் முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே தீர்மானம் நிறைவேற்றினார் பெரியார் வழிவந்த கலைஞர்.

15.7.2006– எதிர்க்கட்சியாக இருந்தாலும் காமராசரை பெருந்தலைவர் ஆகவே உள்ளார மதித்த தலைவர் கலைஞர் “காமராசர் பிறந்தநாள்! கல்வி வளர்ச்சி நாள்!” என அறிவித்தார், அத்துடன் ஏழை எளிய பிள்ளைகள் ஊட்டச்சத்துடன் கல்வி கற்க “சத்துணவுடன் வாரம் இரண்டு முறை முட்டை” திட்டம் தொடங்கினார்.

17.9.2006 ஆண்டான் அடிமை முறை வேரோடு ஒழிக்க, பொருளாதார ஏற்றத்தாழ்வை குறைக்க, நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு இலவச நிலம் வழங்கும் திட்டம்! அறிவித்தார் தலைவர்.
மேற்கூறியவை சில உதாரணம் தான். சரி கலைஞர் என்றால் வேறு என்ன பிரச்னை. சர்க்காரியா ஊழல் சர்க்காரியா ஊழல் என்று சிலர் கதறுவார்கள்.அது சர்க்காரியா ஊழல் அல்ல சர்க்காரியா கமிஷன்.
1972-ம் ஆண்டு நவம்பர் மாதம், எம்.ஜி.ஆரும் கம்யூனிஸ்ட் கல்யாணசுந்தரமும் தி.மு.க மீது புகார்ப் பட்டியல்களைத் தயார் செய்து, அதனை ஒரு பெட்டியில் வைத்து ஊர்வலமாக எடுத்துச் சென்று ஆளுநரிடம் அளித்தனர். அந்தப் பட்டியலை உடனடியாக குடியரசுத் தலைவருக்கு அனுப்புமாரு கேட்டுக்கொண்டனர். பட்டியலில் என்ன உள்ளது, யார் மீதெல்லாம் புகார் உள்ளது என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியபோது, எம்.ஜி.ஆர் பதில் கூற மறுத்துவிட்டார்.

புகார்ப் பட்டியலில் உள்ளது என்ன என்று கூறினால், அவதூறு வழக்கு பதிவு செய்யப்படும் என்ற பயத்தின் காரணமாக எம்.ஜி.ஆர் வாய் திறக்கவில்லை. மூடப்பட்ட அந்தப் பெட்டியில் என்ன இருந்தது என்பது மர்மமாகவே இருந்தது. ஆளுநரிடம் அளித்தப் புகார் மனுவை அரசுக்கு அனுப்பித்தான் பதில் பெற முடியும் என ஆளுநர் தெரிவித்த நிலையில், அந்த மனுவை எடுத்துக்கொண்டு டெல்லி சென்று குடியரசுத் தலைவரிடம் அளித்தனர். அப்போதும், மனுவில் என்ன இருந்தது என்று எம்.ஜி.ஆரோ, கல்யாணசுந்தரமோ பொதுமக்களுக்குக் கூறவில்லை. தி.மு.க மீது ஆதாரமற்ற ஊழல் புகார்களைக் கூறி அவதூறு பரப்பவேண்டும், அதை மக்கள் மனதில் அழுந்தப் பதிவு செய்யவேண்டும் என்பது மட்டுமே அவர்களது நோக்கம்.

விசாரணைக் கமிஷன் தலைவரான நீதிபதி சர்க்காரியாவிடம் வழக்கறிஞர் சாந்திபூஷன் மனு ஒன்றைக் கொடுத்தார். கலைஞர், நாவலர் நெடுஞ்செழியன், ப.உ.சண்முகம், அன்பில் தர்மலிங்கம், மாதவன் மற்றுமுள்ள அமைச்சர்கள், கழகத் தலைவர்கள் மீது குற்றச்சாட்டுப் புகார்களைக் கொடுத்துள்ள எம்.ஜி.ஆரையும், கமிஷனில் சாட்சியாகச் சேர்க்கப்பட்டவர்களையும் குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும் என மனுவில் கேட்கப்பட்டிருந்தது. ஆனால், நீதிபதி சர்க்காரியா இந்த கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டார். சாட்சிகளைக் குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்காவிட்டால் விசாரணையில் பங்கேற்பதே பயனற்றது எனக்கூறி, விசாரணையைப் புறக்கணித்து சாந்திபூஷன் வெளியேறிவிட்டார்.

எம்.ஜி.ஆரை குறுக்கு விசாரணை செய்யவேண்டும் என்று சாந்திபூஷன் கேட்டபோது, சர்காரியா கமிஷனிடம் எம்.ஜி.ஆர் எழுத்து மூலம் ஒரு வாக்குமூலம் கொடுத்திருந்தார்.

அதில், “புகார்கள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. சேலம் கண்ணன் என்ற வழக்கறிஞர் கூறியதைத்தான் நான் புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தேன்” என்று எழுதப்பட்டிருந்தது.

எந்தப் புகார் மனுவைப் பெரும் விளம்பர வெளிச்சத்தோடு ஏடுகள் எல்லாம் கொட்டை எழுத்தில் தி.மு.க மீது எம்.ஜி.ஆர் ஊழல் புகார் எனத் தலைப்புச் செய்திகள் வெளியிட்டனவோ, அந்தப் புகார் மனு குறித்துத் தமக்கு எதுவும் தெரியாது என்று அந்தர் பல்டி அடித்துவிட்டார் எம்.ஜி.ஆர். யாரோ எழுதிய கற்பனை நாடகத்தில், வேடம் கட்டி ஆடியது அம்பலமாகிவிட்டது.
கலைஞர் குறித்த ஒவ்வொரு சம்பவமும் குத்திக்கொண்டு தான் இருக்கும். இந்த பட்டியலும் நீண்டுக்கொண்டு தான் செல்லும்.

எழுதியவர் : சேவற்கொடி செந்தில் (25-Jul-22, 7:32 pm)
சேர்த்தது : செந்தில் குமார்
பார்வை : 180

மேலே