நான் ஒண்ணு நெனைச்சேன்

நான் ஒண்ணு நெனைச்சேன் அது நடக்கவில்லை, நான் ஒண்ணு தொலைச்சேன் அது கிடைக்கவில்லை, நான் ஒண்ணை கண்டேன் ஆனால் அகப்படவில்லை, நான் ஒன்றை செய்தேன் முடியவில்லை, நான் ஒன்றை புரிந்துகொண்டேன் ஆனால் அது என்னை புரிந்துகொள்ளவில்லை, நான் எவ்வளவோ செய்ய நினைத்தேன், நினைத்தது நூறு என்றால் செய்தது ஒன்று, மழை எனக்கு பிடித்தது நனைந்தால் ஜலதோஷம் பிடிக்குது, எனக்கு சிலருடன் பேச உறவாட மிகவும் பிடிக்கும், ஆனால் அப்படி பேசவும் உறவாடவும் யாரும் இல்லை. விதி இவ்வளவு சதி செய்தும், கதி கலங்கினாலும் நான் மதி இழக்கவில்லை. வெகுமதி, நிம்மதி குறைந்து கூடினாலும், திருமதியின் அன்பு துளியும் குறையவில்லை. அதிகம் கூப்பாடு போடமுடியவில்லை என்றாலும் நன்றாக ருசித்து சாப்பாடு சாப்பிடுவதில் எந்த குறையும் இல்லை. எனக்கு என் குறைகள் அதிகமாக பட்டாலும், பலர் குறை என்று என்னிடம் வருகையில், நான் முடிந்த அளவு உதவ தயங்குவதில்லை. இந்த வார்த்தைகளை நான் தயக்கமின்றி கூற இயலும்.

நான் பலரை கோபத்தில் கடிந்துகொண்டிருக்கிறேன் .நான் பலரை வெறுத்திருக்கிறேன். சிலரை பழித்திருக்கிறேன். இதனால்தான் என்னவோ அவ்வப்போது இரவில் விழித்திருக்கிறேன். இந்நாளில் என்னுள் விழிப்புணர்வும் ,தன்னுணர்வும் ஒன்று சேர்ந்து அதிக நேரம் செயல்படுவதை என் மனக்கண்களால் நன்கு காண்கிறேன். முன்பு நான் ஒவ்வொரு முறையும் கீழே விழுந்தால் ,ஐயோ, வலிக்குதே வலிக்குதே என்று முறையிடுவேன். அன்று கீழே விழுந்தது அவ்வளவு வலித்ததே என்று நினைத்து பின்னாளில் வருத்தம் கொள்வேன். என்னை அவமானப்படுத்திய நபர்களை அவ்வப்போது நினைத்து, மனதில் அவர்களை வெறுத்து தள்ளுவேன். அது அந்த காலம். இப்போது நான் கீழே விழுந்தால் மீண்டும் எழுந்துகொள்ள பழகிவிட்டேன். விழுந்தால் வலியில்லாமல் இருக்குமா என்ன, இதை உணர்ந்துகொண்டு வலி குறைந்தபிறகு அந்த வலியை மீண்டும் நினைவு கூர்வதில்லை. இனி வாழ்வில் நிச்சயம் அவ்வப்போது விழுவேன் என்பதையும் அறிவேன். ஆனால் நிச்சயம் வலியை தாங்கிக்கொண்டு மீண்டும் எழுந்து நடப்பேன் என்பதையும் நான் மனமார அறிவேன். எனக்கும் இறைவனுக்கும் இடையில் இயற்கை என்ற ஒரு பெரும் சக்தி இருக்கிறது. இயற்கை என் கண்ணுக்கு தென்படும் இறைவனின் ஸ்வரூபம். இந்த சக்தி நிச்சயம் என்னுடைய கஷ்டத்திலும் நஷ்டத்திலும் கைகொடுத்து எனது சுகதுக்கங்களை நிச்சயம் சமப்படுத்துகிறது. உடம்பில் புண் பட்டால் மருந்து உண்டு. மனம் புண்பட்டால் தைரியம் என்பது உண்டு. எனவே இனிவரும் நாட்கள் எனக்கு பொன்னான நாட்களே.

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (25-Jul-22, 7:21 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 53

மேலே