சொர்க்கம் அல்லவா

புலரும் காலை பொழுதில்
கீச்...கீச்....என்று
பூங்குருவிகள் என்னை
மெல்ல எழுப்பி
' விடியும் இந்த நேரம்
வானில் மாயாஜாலம்
மாறும் வண்ணக்கோலம்
ரசித்திட துயில் எழு'
என கிச்சுகிச்சு மூட்டியதே...

அண்டங் காக்கையோ
கா..கா..என்று
கட்டை குரலில்
வீட்டுக்கு விருந்து
வருகிறதென்று
வாசலில் நின்று
கட்டியம் கூறியதே ....

மேனி தழுவிய
தெக்கத்தி காத்தும்
தூக்கத்தை தொடர
தூண்டினாலும்
சுடும் வெயில்
தொடர்கிறதென்று
எச்சரிக்கை விடுத்ததே....


'அல்லா ஹு அக்பர்...அல்லா ...'
தூரத்து துவாவின் ஒலியும்,
'அம்மா பால்' என்று
பால்காரரின் பழைய சைக்கிளின்
கடமுட சத்தமும்
கூடவே பால் அளந்து
ஊத்தும் பொது
பாத்திரங்கள் மோதும்
கலகல சத்தமும்

அடுக்களையில் வேலைக்காரி
பாத்திரம் கழுவி
உருட்டும் சத்தம்
குருஷேத்திர போரில்
வாளும் கேடயமும்
உரசிக்கொள்ளும்
டபடப சத்தம் போல்
காதை சூடாக்கியதே...

விடிந்து இத்தனை நேரமாகிறது
தூக்கத்தைப் பார் தூக்கத்தை
காளி அவதாரமாய்
ஓங்கி நின்ற
மனையாளின்
அதிகார குரல் மிரட்டியதே....

இத்தனை நடந்தும்
போர்வைக்குள் முகம் புதைத்து
கண் சொருகித் தூங்கும்
அந்த அதிகாலை
சிறிதுநேர "சொக்கல்"
சொர்க்கமல்லவா...!
அதை அனுபவிக்காது
விட்டுவிட்டால் வாழ்வில்
எதையோ இழந்ததல்லவா...?

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (13-Aug-22, 10:17 pm)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : sorkkam allavaa
பார்வை : 130

மேலே