பறவை மேல் பயணம்

சத்தம் கேட்டு
எட்டிப் பார்த்தது, 
தொட்டு விடும் தூரத்தில்
கிட்டவே இப்போ !

மேகத்தில் மறைந்து
கண்ணாமூச்சி ஆடிய
மின்மினி பூச்சி,
கண்களை நிரப்பி
பிரம்மாண்டமாய் இங்கே !

நெடுநாள் ஆசை
நிறைவேறும் கணமா,
இல்லை
வென்மேகம் துளைத்து
விண் போகும் பயமா,
நெஞ்சம் துடிக்கிறது
கொஞ்சம் வேகமாய் !

உனக்குள் வரும் முன்
ஓய்வுக்குக் கிடைத்த
சில மணி நேரத்தில்
சாட்சிக்கு ஒரு செல்ஃபீ - ஊர்
காட்சிக்கு ஒரு ஸ்டேட்டஸ் என
முக்கால் வாசி கழிய,
கடைசி நிமிடங்கள்
துடிப்பைக் கூட்டின
படுவேகமாய் !

காவித் துண்டு
போட்டவர்
கந்தா கடம்பா என,
கருப்புத் துண்டு
போட்டவரும்
கடவுளே கடவுளே என,
சிலுவைகளும்
தொழுகைகளும் சேர்ந்து
உன்னை
சமத்துவக் கோவில் ஆக்கி,
ஆடி அடங்கியது
அத்தனை உயிரும்
புறப்பட்ட
அரை நிமிட நேரத்தில் !

வெள்ளைப் பஞ்சின் மேல்
மிதந்து வந்த அனுபவம்
காட்சி வழியிலும் சரி
உணர்வின் வழியிலும் சரி !

நான் எத்தனை முறை
ஏறி இறங்கினாலும்
உன் மீதுள்ள மோகம்
தீருவதில்லை !

நீ அத்தனை முறை
ஏறி இறங்கும் போதும்
அந்த பயம் தான்
குறைவதுமில்லை !!

மீண்டும் வருவேன்
ஏந்திச் செல், பறவையே!

- நா முரளிதரன்

எழுதியவர் : நா முரளிதரன் (31-Aug-22, 12:01 pm)
சேர்த்தது : நா முரளிதரன்
Tanglish : paravai mel payanam
பார்வை : 65

மேலே