பஞ்சபூதங்கள் - நிலம்

பூமியே ....எங்களைத் தாங்கும்
சாமியே...
உன்னை வணங்குகிறோம்.
உன்னிடம் இருந்து
கற்றுக்கொள்ள வேண்டிய
பாடங்கள் அதிகமே....!
உன் பொறுமைக்கு
எல்லையே இல்லையா?
உன்னை
கீறி...காயப்படுத்தி...
குத்தி....குதறி....
ஆழ குழி நோண்டினாலும்
அரிசியாய்...கோதுமையாய்...
மலர்களாய்....காய்களாய்...
கனிகளாய்...கனிமங்களாய்...
எங்களுக்குப் பரிசளித்து
சிரிக்கிறாய்.
நீரை உன் கருவறையில்
சேர்த்து வைத்து
வேர் மூலம் பயிர்களுக்கு
உயிரோட்டம் தருகிறாய்...
அதே நீரை தாகம் தீர்க்க
நிலத்தடி நீராய் இனிக்கிறாய்.
நீர்வீழ்ச்சியாய் இடியென வீழ்ந்து
உன்னை தாக்கினாலும்
அதை தாங்கி தாலாட்டி...
நதியாய்...ஓடையாய்...
உன் மேனியெங்கும் ஓடவிட்டு
ஓடும் பாதை எங்கும்
பசுமை போர்வை போர்த்திவிடுகிறாய்...

நீரையும் தாங்குகிறாய்...
பாறையையும் தாங்குகிறாய்...
உன் வயிற்றுக்குள் நீ
ஒளித்து வைத்திருக்கும்
அதிசயங்கள்...
ஆச்சரியங்கள்....
புதையல்கள்...
எத்தனை எத்தனை...
புத்தாய் நீ எழுந்து
விஷம் கக்கும்
பாம்புக்கு வீடானாய்...
புழுக்களாய் உன்னை
குடைய வைத்து
வளமான பயிருக்கு உரமானாய்...

சில இடத்தில் நீ மெழுகாய் இளகுகிறாய்...
பலஇடத்தில் இரும்பாய் இறுகுகிறாய்...
வலுவான அஸ்திவார ஆதாரமாய்
நீ இருக்க ...
சொகுசாய் வாழ பல மாடி
கட்டிடங்கள் தாங்குகிறாய்...
சில சமயம் உன் பொறுமை
எல்லை மீறும்போது
பூகம்பமாய் வெடித்துச் சிதறி
கோபத்தால் பேரழிவை
உண்டாக்கி விடுகிறாயே...
உன்னை
பூமித்தாய் என்று வணங்குகிறோம்.
பொறுமை....சகிப்பு....
தியாகம்...நேயம்...
விலைமதிப்பற்ற பாடங்களை
உன்னிலிருந்து
கற்றுக்கொள்கிறோம்.

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (1-Sep-22, 7:57 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 71

சிறந்த கவிதைகள்

மேலே