இன்மை தழுவப்பட் டார்க்கு சிறந்ததங் கல்வியும் மாயும் - நாலடியார் 285

நேரிசை வெண்பா

பிறந்த குலமாயும்; பேராண்மை மாயும்
சிறந்ததங் கல்வியும் மாயும் - கறங்கருவி
கன்மேற் கழூஉங் கணமலை நன்னாட!
இன்மை தழுவப்பட் டார்க்கு 285

- இன்மை, நாலடியார்

பொருளுரை:

பாய்ந்து ஒலிக்கின்ற அருவிநீர் கற்களின் மேற்புறத்தைக் கழுவுகின்ற கூட்டமான மலைகளை உடைய சிறந்த நாடனே!

உலகத்தில் வறுமை பொருந்தியவர்க்கு அவர் பிறந்த குலத்தின் பெருமை கெடும்; அவருடைய பேராற்றல் கெடும்; எல்லாவற்றிற்கும் மேலான அவர்தம் கல்வி நிலையும் கெடும்!

கருத்து:

வறுமை பொருந்தியவர்க்கு இருமை நலங்களுங் கெடும்

விளக்கம்:

குலமென்றது ஈண்டுக் குடி; ஆண்மை – திறமை;

கல்வி எழுமையும் ஏமாப்புடைத்தாகலின்1 ‘சிறந்த கல்வி'யெனப்பட்டது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Sep-22, 2:07 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 16

மேலே