அவள் ஒரு பிச்சைக்காரி

மாயா ஒரு அரசாங்க உத்தியோகத்தில் இருப்பவள். வீட்டில் இருந்து அலுவலகம் செல்ல பேருந்தில் குறைந்தது ஒரு மணி நேரம் ஆகும்.
பேருந்து நிலையத்தில் ஏறுவதால் உட்கார சீட் கிடைக்கும். தினசரி ஒரு குறிப்பிட்ட நேரத்திலே அதே பேருந்தில் செல்வதால் ஓட்டுனரும் நடத்துனரும் அவளிடம் சுமுகமானப் பேசி நலன் விசாரிப்பதும் உண்டு. அன்று காலை பேருந்தின் ஜன்னலோர இருக்கையிலே அமர்ந்து குளிர் காற்றின் சிலிர்ப்பில் கதைப் புத்தகத்தில் பக்கங்களைப் புரட்டிக் கொண்டிருந்தாள். மாயா இறங்கும் இடம் வந்து விட்டது என நடத்துனர் அறிவித்ததும், கைப்பையினுள் புத்தகத்தை வைத்து விட்டு அவசரமாக இறங்கினாள். கூட்ட நெரிசலுக்குள் ஒருவன் தன் கையால் அவளை தவறுதலாக இடித்து விட்டான் "சாரி அக்கா" என அவன் கூற "பரவாயில்லை" என சொல்லிவிட்டு மற்ற பயணிகள் இறங்கும் பொழுது லாவகமாக இறங்கி நடந்தாள். ஐந்து மணி வெயில் முதுகை எரித்தது. பையினுள் கையை விடடாள் குடையில்லை. அடக்குடையை எடுக்க மறந்து விட்டேனே ' என மனதில் தன்னைத் திட்டிக்கொண்டே வேகமாக மண்ணில் நடந்தாள்.
கோவிலுக்கு போய்விட்டு இன்றைக்கே கடைக்கும் போகவேண்டும் நாளைக்கு நேரமில்லை, யாரையாவது வேலைக்கு வைத்தால் நன்றாக இருக்கும் என்று அவள் தனக்குள்ளே யோசித்தபடி கோவிலை அடைந்தாள். கால்களை மடக்கி அமர்ந்து கண்களைமூடிக் கொண்டாள் "கடவுளே எனக்கு நல்லதொரு வழியைக் காட்டு, கல்யாணமாகி ஆறு வருடங்கள் ஆகிவிட்டது,குழந்தைப் பாக்கியம் இல்லாமல் மனது மிகவும் நொந்து போய் இருக்கிறது.அடுத்த வருடத்துக்குள்ளே குழந்தையோட உன்னைக் காணும் பாக்கியத்தை அளித்திடு என மனம் உருக வேண்டினாள். நீ தான் இந்த மனக் குறையைப் போக்கணம் என்று வேண்டியபடி ஒரு நெடிய பெருமூச்சு விட்டு கண்களில் கண்ணீர் நிறைந்திட உண்டியலுக்குள் காசைப் போட்டு விட்டு அங்குள்ள கடையில் ஒரு தொட்டிலை வாங்கிக் கட்டி விட்டு தீபத்தை ஏற்றி வைத்தாள்.
மாயா கோவிலை சுற்றி விட்டு வெளியே வரும் பொழுது ஐயா,அம்மா தர்மம் பண்ணுங்கோ, பிள்ளைக்குப் பசிக்குது என்று ஒரு கையில் குழந்தையுடன் ஒரு கையை நீட்டிய ஒட்டி ஒடுங்கி அழுக்குப் படிந்த ஆடையுடன் கலைந்த தலையுமாய் அழகிழந்த அந்த பிச்சைக்காரியை பார்த்தும் பாராமல் சிலர் கடந்து சென்றார்கள். சிலர் முணுமுணுப்புகளுடன் ஐந்து, பத்து ரூபாக்களை கொடுத்து சென்றனர்.ஒரு வயது முதிர்ந்தவர் கை கால் ஒழுங்காத்தானே இருக்கு, வேலை செய்து வாழ ஒரு வழியப் பார் என்றபடி ஐம்பது ரூபா காசை நீட்டிட, அந்த பெண் கையெடுத்துக் கும்பிடடாள். எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டே நின்ற மாயா பாவம் இவளுக்கு ஏன் இந்த நிலை, கடவுள் ஏன் இப்படியெல்லாம் மனிதரைச் சோதிக்கிறார் என்று தனக்குள்ளே நினைத்தபடி பையில் இருந்து காசை எடுத்து அவளிடம் கொடுத்து விட்டு அவள் கையணைப்பில் இருந்த குழந்தையின் தலையைத் தடவினாள். எல்லோரும் மாயாவை ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். அழகும்,அந்தஸ்தும் , பணமும் தான் உலகம் என்று, இந்த உலகம் மாறிக்கொண்டு போவதால் தான் மனிதாபிமானம் மரணித்து வறுமையும், ஏழ்மையும் வாழ்க்கை என்று சிலர் தள்ளப்பட்டு விட்டார்கள். ஏழைகளின் வயிற்றுப் பசியில் தான் பணத்தின் ஆதிக்கமும் தலை விரித்தாடுகிறது.
குழந்தை பசியால் அழத் தொடங்கியது, அவள் குழந்தையுடன் வெளியே வந்தாள். மாயாவுக்கு அவளுடன் பேச வேண்டும் என்ற ஆவல் பேசியதும் அவளது பிரச்சனையைக் கேட்டதும் அவளுக்கு தூக்கி வாரிப் போட்டது. நிலை தடுமாறி நின்றாள். காதல், கல்யாணம், கள்ளக்காதல், வேறு திருமணம் என்று சமூகம் சீரழிந்து போகிறது எனப் பேசித்தான் கேட்டிருக்கிறாள், இப்பொழுது இந்த பெண் கண் எதிரே உண்மையாக வாழ்க்கையை இழந்து நிற்கிறாள். பள்ளியில் படிக்கும் பொழுதே வாழ்க்கையை இழக்கும் இந்த நிலைக்கு இன்றைய சமூகம் அவளை தள்ளியிருக்கிறது.
பள்ளி வாழ்க்கையில் தவறான வழியில் தன்னிலை மறந்து காதல் வலையில் சிக்குண்டு ஏமாற்றப்பட்டு குழந்தையை வளர்க்கக் கூட முடியாமல் அவள் வழி தேடி அலைவதை நினைத்து கோபப்படுவதா பரிதாபப் படுவதா என்ன செய்வது என்று தெரியாமல் அவளுக்கு நடந்ததையே நினைத்து கொண்டிருந்தவளை இந்த உலகத்திற்கு கொண்டு வந்தது அந்த குழந்தையின் அழுகை.
அவள் கூறினாள் அக்கா நானும் நிறைய இடத்திலே வேலை கேட்டு சென்றேன் குழந்தையைக் காரணமாக்கி எனக்கு யாரும் வேலை தரவில்லை.வயிற்றுப் பசி குழந்தையின் உணவு ஆகியவை என்னை இந்த நிலைக்கு ஆளாக்கி விட்டது. எனக்குப் பிடிக்காமல் தான் இதை செய்கிறேன் எனக் கூறி விம்மினாள். அக்கா எனக்கு ஒரு வேலை கொடுத்தா நல்லபடியா செய்வேன் குழந்தைக்கும் வேளைக்கு உணவும் ஒரு பாதுகாப்பும் கிடைக்கும் என அவள் கூற, ஒன்றும் சொல்லாமல் மாயா அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள்.
மாயா ஒரு சராசரி குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவள். தந்தை அவளை நன்றாகப் படிக்க வைத்த திருப்தியோடு மறைந்து விட, அம்மா மாயாவின் சகோதரனோடு வெளியூரில் இருந்தாள்.
மாயாவும் ஆனந்தும் காதலித்து மணம் முடித்தவர்கள். ஆனந்துக்கு வெளியூரில் வேலை அடிக்கடி வந்து போவான். மாயாவுக்கும் அரசாங்க வேலை. நல்ல வருமானம். மாயாவுக்கு குழந்தை பாக்கியம் இல்லாத குறை. ஆனாலும் வாழ்க்கை மகிழ்வோடு தான் இருந்தது . சமூகத்தின் பார்வை அவளுக்கு சஞ்சலத்தை ஏற்படுத்தியது. கடவுள் மேல் பாரத்தைப் போட்டு, அவள் தனது வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தாள்
வீட்டிற்கு வந்து சமையல் அறைக்கு சென்று இருந்தவற்றை சூடாக்கி உண்ண உட்கார்ந்தாள்.கைகள் சாதத்தை பிசைந்தது மனம் ஒரு நிலையில் இல்லாமல் தவித்தது. சாப்பாடு உள்ளே செல்ல மறுத்தது. அவள் முகமும் குழந்தையின் அழுகையும் மறக்க முடியாமல் எதோ நினைத்தவளாய் சிறிது உணவை விழுங்கி விட்டு மற்றவைகளை குப்பையில் போட்டு விட்டு கைகளைக் கழுவி ஹாலுக்குள் வந்தவுடன் அழைப்பு மணி அடித்திட கதவை திறந்தாள்.ஆனந் நின்றிருந்தான்.மகிழ்ச்சி போங்க நீங்களா என ஆச்சர்யத்தை தெரிவித்தபடி வாங்கோ என அழைத்தவளை கட்டி அணைத்துக் கொண்டான்.போய் குளித்து விட்டு வருகிறேன் ஏதாகிலும் செய்து வை பசி உயிர் போகிறது என்றான்.
மாயா இதோ இப்பொழுதே எல்லாம் செய்கிறேன் சீக்கிரம் வாங்கோ எனக் கூறி சமையல் அறைக்கு சென்றாள்.அவன் குளியலறைக்குச் சென்றவுடன் அவனிடம் எவ்வாறு அவளை பற்றிக் கூறுவது அவளை வேலைக்கு வைப்பதைப் பற்றி முடிவெடுப்பது.வீட்டிலேயே தங்க வைக்கலாமா என்ற பல எண்ணங்களுடன் அவள் வேலை செய்தாள்.
ஆனந் வெளியே வந்தவுடன் அவனுக்குப் பிடித்தமான கொத்தமல்லி துவையல் தோசையுடன் அவனை சாப்பாட்டு மேஜையில் அமர வைத்தாள். அவன் உண்ண அவனிடம் மெல்ல அவளைப் பற்றி கூற அவன் உடனே மாயா உன் சந்தோஷம் தான் எனக்கு முக்கியம்.நீ என்ன செய்தாலும் எனக்கு அது சம்மதம். அவனையே பார்த்துக்கொண்டிருந்த மாயாவைக் கைகளில் அள்ளிக்கொண்டான். மாயாவின் கண்களில் ஆனந் ஒரு நன்றி அறிவித்தலை கண்டான். நாளைக்கு மருத்துவ பரிசோதனை முடிந்தவுடன் அவளை பார்த்து இந்த நல்ல செய்தியை கூறி அவளை அழைத்து வரலாம் என்றான்.
மாயா தலையை அசைத்து விட்டு அவனுடன் படுக்கையறைக்கு சென்றாள். மறுநாள் மருத்துவரிடம் சென்று ஆகவேண்டிய டெஸ்டுகளை எடுத்து மருத்துவ அறையில் வந்தவுடன் டாக்டர் ஒரு குழப்பமும் இல்லை இன்னும் சில மாதங்கள் கழியட்டும் உனக்கு குழந்தை பெற ஒரு தடையும் இல்லை எனக் கூற அவர்கள் அவருக்கு நன்றி தெரிவித்து வெளியே வந்தனர். மருத்துவர் மருந்து சீட்டில் சில மருந்துகளை எழுதி அதை சாப்பிடுமாறு கூறினார்.மகப்பேறு கிடைக்கும் என்ற சொல் இருவர் மனதிலும் இனிமையாய் ஒலித்துக் கொண்டிருந்தது. குழந்தை உண்டாகும் என்ற சொல் மனதில் ஒரு புதிய தெம்பை விளைவித்தது. மாயாஆனந்திடம் மருந்து வாங்கிய பிறகு கோவிலுக்கு சென்று அவளை பார்க்கலாம் எனக் கூறினாள்.
அவளைக் காண ஒரு பரபரப்புடன் கோவிலுக்கு இருவரும் சென்றனர்.அங்கு அவளைக் காணவில்லை.அங்குள்ள கடைக்கு சென்று விசாரித்ததில் அந்த பெண்ணை ஒரு கிறித்துவ சிஸ்டர் வந்து அழைத்துச் சென்றது தெரிய வந்தது.மிக ஏமாற்றத்துடன் மாயா ஆனந்திடம் அதை தெரிவிக்க அவன் எப்பொழுதும் போல வா மாயா வெளியே சாப்பிட்டு விட்டு வீட்டிற்குச் செல்லலாம் என அவளை அணைத்தபடி காருக்கு சென்றான்.
மாயாவிற்கு அவளை பற்றிய கவலை முகத்தில் தெரிந்தது. ஆனந் ஆவலாய் பேசியது ஏதும் தெளிவாக புரியவில்லை. மாயா அப்ப நான் இரண்டு நாளிலே கிளம்பட்டுமா எனக் கூறியவுடன் ஒரு வாரம் இருங்களேன் அப்புறம் போகலாம் என்றவளை நோக்கி அப்ப நான் சொன்னது எதுவும் கேட்கலையா நீ என்றான். திடுக்கிட்டு என்ன சொல்லிக்கொண்டிருந்தாய் நான் அவளை பற்றிய நினைவிலேயே இருந்தேன்.நீ கூறியவை காதில் விழுந்தது மனதில் நிற்கவில்லை என மாயா சொல்ல,ஆனந்த் சிரித்துக் கொண்டே தான் நாளை சாயங்காலம் ஊருக்குச் செல்வதை விளக்கி அடுத்த சிலநாட்கள் அவன் அங்கு இருப்பதன் அவசியத்தையும் உரைக்க மாயா சாரி ஆனந் நாம் உடனே சாப்பிட்டு விட்டு வீட்டிற்குச் செல்லலாம் எனச் சொல்லி பேச்சை முடித்தாள்.
இருவரும் வீட்டிற்கு சென்று மருத்துவர் கூறியபடி மருந்தை உட்கொண்டு உறங்க சென்றனர்.
நாட்கள் உருண்டோடி மாதங்களாகி இரண்டு வருடங்களும் ஓடி விட்டன மருந்தினால் எந்த மாற்றமும் காண வில்லை.
ஆனந்த் அவ்வப்பொழுது வந்து தங்கி பின் செல்வது வழக்கமாகி பின் அவன் அலுவலகம் அவனை பதவி உயர்வளித்து மேலும் பொறுப்புகளை கொடுத்தது.
அவன் அந்த நல்ல செய்தியை கூற, அவன் கூற வந்திருந்த அந்த மகிழ்ச்சி வேளையில் மாயா தன் மனதில் உள்ள ஒரு ஆசையை வெளியிட்டாள். அவள் அனாதை இல்லத்தில் இருந்து ஒரு குழந்தையை தத்து எடுத்து நம் குழந்தையாக வளர்க்கலாம் என்ற எண்ணத்தை சொல்ல,ஆனந்த் உடனே மாயா உன் ஆசைப்படி செய் என்றான்.
இருவரும் அனாதை இல்லத்திற்கு தொலை பேசியில் தொடர்பு கொண்டு தங்கள் விருப்பத்தை தெரிவிக்க.அதன் தலைவி அவர்களை இல்லத்திற்கு அழைத்தாள்.
இருவரும் அங்கு சென்றனர் அங்கு பல குழந்தைகள் வந்து தலைவியிடம் வணக்கம் கூறிச் சென்றனர்.மாயாவும் ஆனந்தும் பக்கத்தில் உள்ள அறையில் அமர்ந்து அவர்களை பார்த்து கொண்டிருந்தனர். மாயாவிடம் தலைவி எந்த குழந்தையைப் பிடித்தாலும் அதை எடுத்து கொள்ளலாம் எனக் கூறினாள்.
மாயா அங்கு ஒரு முடிவை எடுக்க முடியாமல் தவிக்கும் பொழுது அரவிந்த் என்ற ஒரு குழந்தை ஓடி வந்து அவளை கட்டிக்கொண்டு அம்மா எனக் கூற அவனை பார்த்ததும் அவள் மனது படபடத்தது. அந்தப் பையனிடம் அவளிடம் சில வருடங்களுக்கு முன் பார்த்த அதே முகச் சாயல் தெரிந்தது. தலைவியிடம் அரவிந்தைப் பற்றி விசாரிக்க,அவள் கூறியது மாயாவிற்கு மிக ஆச்சர்யமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது.
தலைவி அரவிந்திடம் இவர்களுடன் நீ செல்கிறாயா என வினவ சிறிய விரல்களை நீட்டி யார் இவர்கள் அவன் கேட்க தலைவி இது உன் அம்மா அப்பா எனக் கூறினாள்.உடனே அவன் கண்களில் வியப்பு, நிஜமாவா எனக் கூவலுடன் அம்மா என்று மீண்டும் மாயாவை கட்டி பிடித்தான்.
தலைவி உடனே வேலையாள் கூப்பிட்டு அரவிந்தை புதுஆடை அணிய செய்து முகம் கழுவி கொண்டுவர பணித்தாள்.
அவர்கள் சென்றவுடன் தலைவி இந்த பையனை இரண்டு வருடத்திற்கு முன் ஒரு கிறித்துவ சிஸ்டர் கொண்டு வந்து அவளிடம் கொடுத்ததாகவும் அவனது தாய்க்கு மனநிலை சரியாக இல்லை அவளை தர்ம ஆஸ்பத்திரியில் சேர்த்திருப்பதாகவும் அவள் நன்றாக ஆனவுடன் வருவதாகவும் கூறிவிட்டு சென்றதாகவும் தெரிவித்தாள்.
மாயாவிற்கு எல்லாம் புரிய ஆரம்பித்தது தான் யாரை கொண்டு வரவேண்டும் என நினைத்தாளோ அவள் தான் குழந்தைக்குத் தாய்.
ஆண்டவனை மனதார வாழ்த்தி தலைவியிடம் தங்கள் விலாசத்தை கொடுத்து விட்டு அவர்கள் வெளிவர அரவிந்த் அம்மா என்ற படி ஓடி வந்தான்.
அவனை ஆனந்தும் மாயாவும் சேர்ந்து வாரி அணைத்து காருக்குள் உட்காரவைத்தனர்.தலைவி அரவிந்த் அம்மா வீட்டிலே சமத்தா இருக்கனும் என கூறி கையசைக்க அரவிந்தும் காரில் இருந்து கொண்டே கையை ஆட்டியவாறே இருக்க கார் நகர ஆரம்பித்தது. தலைவியின் பார்வையில் இருந்து மறைத்தான்.
ஆனந்த் அடுத்த சில நாட்கள் அரவிந்துடன் விளையாடி பொம்மைகள் பல வாங்கி வைத்து விட்டு வெளியூருக்கு பயணமானான். அரவிந்த் மாயாவிடம் காட்டிய பிரியம் மாயாவை திக்கு முக்காட செய்தது.வேலைக்கு செல்லும் பொழுது அவனை ஒரு சிறுவர் பள்ளியில் விட்டு விட்டு செல்வாள். வேலையில் இருந்து வீட்டிற்கு வரும் பொழுது அவனை நினைத்து கொண்டு எதையாவது வாங்கி கொண்டு தான் செல்வாள்.அரவிந்த் ஆவலுடன் காத்திருப்பான்.
அவனை ஒரு நாள் கோவிலுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என முடிவு செய்து அன்று வேலையில் இருந்து சிறிது முன்னதாக வந்து அவனுக்கு புது ஆடை உடுத்தி அவனை அழைத்து சென்றாள். கோவிலில் தொழுது முடித்து விட்டு ஆண்டவனுக்கு நன்றி தெரிவித்து அரவிந்தின் கையை பிடித்து வெளியே வரும் பொழுது தலை விரிகோலமாக ஒரு பெண் அவளை நோக்கி வந்து தர்மம் கொடுங்கள் எனக் கேட்க,மாயாவிற்கு அந்த குரலும் பெண்ணின் முகமும் மனதில் ஒரு பயத்தை தூண்டியது.இது அவள் தான் என உள்மனம் கத்தியது,அதை பொருள்படுத்தாமல் அவசரமா கையில் வந்த காசை அவளிடம் கொடுத்து வேகமாக திரும்ப அரவிந்த் இவங்க யாரும்மா என வினவ அவள் ஒரு பிச்சைக்காரி எனக் கூறி விரைவாக தங்களது காரை நோக்கி நடந்தாள்.
அரவிந்த் அவள் கையைப் பற்றி கொண்டிருந்தாலும் அந்த பிச்சைக்காரி என்ற பெண்ணை திரும்பி திரும்பி பார்த்தபடியே நடந்தான். மாயா அவனிடம் பிச்சைக்காரிகளிடம் மிகவும் கவனமாக இருக்கவேண்டும் அவர்கள் பிள்ளை பிடிப்பவர்கள் என பல விதமான அனுபவக் கதைகளைக் கூறிட, அம்மா இனிமே இந்த கோயில் வேண்டாம் என்று அரவிந்த் கூறியது அவளுக்கு உள்ளே தைத்தது. மனதில் எதோ ஒரு இனம் புரியாத சங்கடம்,தான் செய்வது சரியா என உள்மனம் வினவ அதை கவனிக்காதது போல் சரி ராஜா இனி இந்த கோவிலுக்கு வர வேண்டாம் என அவனை அணைத்துக்கொண்டு டிரைவரை உடனே வண்டி எடுக்கச் சொன்னாள்.
வீட்டிற்கு வந்ததும் அரவிந்துக்கு உணவு ஊட்டிவிட்டு படுக்கையில் உறங்க வைத்தாள். அவளுக்கு தன்னையே நம்பமுடியவில்லை நானா இவ்வாறு செய்தேன் என நினைத்தவாறே இருந்தவளை ஆனந்தின் தொலைபேசி அழைப்பு ஒரு ஆறுதலாக இருந்தது. ஆனந்திடம் தொலைபேசியில் அழுத்தவாறே நடந்ததை கூறினாள்.
அவன் அவளை சமாதானப்படுத்தி அரவிந்தின் நல்ல வாழ்க்கையை பார் அவளிடம் அவனை கொடுத்தால் அவனை அவள் பிச்சை எடுக்க வைப்பாள்.கடவுள் நமக்கு இவனை வளர்க்கும் பொறுப்பை அளித்திருக்கிறார்.இவன் எதிர்காலம் நன்றாக அமையும் எனக் கூறி தேற்றினான்.மாயா குற்ற உணர்வில் இருந்து மெல்ல வெளியே வந்து அறையில் அரவிந்த் தூங்குவதை பார்த்தவாறு கண்களை துடைத்து கொண்டாள்.

எழுதியவர் : கே என் ராம் (12-Sep-22, 1:56 am)
சேர்த்தது : கே என் ராம்
பார்வை : 125

மேலே