காக்கை சிறகினிலே நந்தலாலா

அன்று மதியம் வீட்டுக்கு சாப்பிட வரும்போது வழக்கம் போல் வீட்டு முன் இருக்கும் மரத்தடியில் என் இரு சக்கர வாகனத்தை நிறுத்தினேன்.
அப்போது மரத்தடியில் அரைகுறையாக சிறகு முளைத்து பறக்க முடியாத ஒரு காக்கா குஞ்சு மரத்தடியில் கிடந்ததை கண்டேன்.

எனக்கே உள்ள இறக்க குணத்தால் அதை காப்பாற்ற நினைத்தபோது....
என் பிடரி மண்டையில் யாரோ அடித்ததை உணர்ந்தேன்..
அவைகள் அந்த காக்கா குஞ்சின் இரண்டு பெற்றோர்கள். அதற்குள் வாட்ச்மேன் ஓடிவந்து...
"சார் அங்கே வண்டிய நுப்பாட்டாதீங்க... அங்க காக்க குஞ்சு பறக்க முடியாமல் விழுந்து கிடப்பதால் எல்லோரையும் காக்கா விரட்டி அடிக்குது" என்று கூவிய படி ஓடிவந்து என்னை அந்த காக்காக்களிடமிருந்து காப்பாற்றினார்.
மறுநாள் காலையில் வாக்கிக்கிங் செல்ல வீட்டு வாசலிருந்து நான் வெளியே வந்து செருப்பு மாட்டி திரும்பியபோது....
மறுபடியும் என் பிடரியில் நறுக்கென்று யாரோ அடித்தது போலவிருந்தது....
திரும்பி பார்த்தேன்...

அதே அந்த இரண்டு பெற்றோர் காகங்கள்....
என்னை மாடியிலிருந்து இறங்க விடாமல் துரத்தி துரத்தி அடிக்க வந்தன.

மறுபடியும் வீட்டிற்குள் சென்று ஒரு ஒட்டடை குச்சியை எடுத்து கொண்டு அவைகளை விரட்டிய படியே நடை பயிற்சி சென்றேன்.
நடை பயிற்சி முடிந்து வீட்டிக்கு திரும்பிய போது...
மீண்டும் ஒரு பெரிய போராட்டத்திற்கு பிறகே வீட்டிற்குள் சென்றேன்.

மீண்டும் ஆபிஸ் செல்லும் போது தலையில் ஹெல்மெட் போட்டுக்கொண்டு வெளியே வந்து வண்டியை எடுத்துக்கொண்டு சென்றேன்.

ஆபிஸில் இந்த காக்கா கதையை சொன்னபோது...
எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள் தவிர முடிவு யாரும் சொல்லவில்லை.

இந்த நிகழ்வு 3 நாட்கள் தொடர்ந்தது. ஆனால் வாட்ச்மேனோ...

"இப்பல்லாம் காக்கா யாரையும் விரட்டுவதில்லை. அதன் குஞ்சை நாய் தூக்கிட்டு போச்சுன்னு நினைக்கிறேன். ஆனால் உங்களை மட்டும் தான் விரட்டுது" என்றார்.

என்னடா இது கொடுமைன்னு மனதில் வேதனையுடன் இருந்தபோது...
எதிரில் இருந்த பூக்காரம்மா...

"தம்பி... காக்காக எல்லாம் சனி பகவான் வாகனம். அவங்க கடவுளை கூட விட்டு வைக்க மாட்டான்க... இவங்க உன் முன்னோர்கள் அவதாரம். செத்துப்போன உன் அம்மா, அப்பா...இல்ல பொண்டாட்டியாக கூட இருக்கலாம். அவங்களுக்கு சோறு போடு... எல்லாம் சரியாயிடும்" என்று சொன்னார்.

'சரிம்மா' என்றபடியே எதிரிலிருந்த அண்ணாச்சி மளிகை கடையில் ஒரு பிரட் வாங்கி துரத்திக் கொண்டு வந்த காகங்களுக்கு வீட்டு வாசலில் சில துண்டுகளை வைத்தேன்...
அடடா...
"ஹேப்பி அண்ணாச்சி"னு அவங்களும் திண்ணுட்டு நன்றி சொல்லிட்டு போனாங்க...

இப்பல்லாம் அந்த இரண்டு காக்கைகள் மட்டுமல்ல.... அந்த தெருவில் உள்ள அனைத்து காக்கைகளும் என் நண்பர்கள் ஆயிட்டாங்க... என் வருகைக்காக மதில் மேல் விழி வைத்து காத்திருக்காங்க...

பிரட் அவங்களுக்கு பிடிக்கலயாம் இட்லி, கேக், சமோசானு விதவிதமா வாங்கிக்கொண்டு என் வீட்டு வாசலில் வைக்கிறேன்...

எதிரிகள் நண்பர்களான சந்தோசம்..

(இது கதையல்ல நிஜம்)

எழுதியவர் : பரிதி.முத்துராசன் (12-Sep-22, 4:42 pm)
சேர்த்தது : பரிதிமுத்துராசன்
பார்வை : 200

மேலே