தீப்போற் கனலுமே மானம் உடையார் மனம் – நாலடியார் 291
நேரிசை வெண்பா
திருமதுகை யாகத் திறனிலார் செய்யும்
பெருமிதங் கண்டக் கடைத்தும் - எரிமண்டிக்
கானத் தலைப்பட்ட தீப்போற் கனலுமே,
மானம் உடையார் மனம் 291
- மானம், நாலடியார்
பொருளுரை:
செல்வம் வலிமையாகக் கயவர் செய்யும் வரம்பு கடந்த செயல்களைப் பார்த்த பொழுது மானமுடைய நன்மக்களின் மனம் எரிதல் மிகுந்து காட்டில் உண்டான காட்டுத் தீப்போல் அனல் கொள்ளும்.
கருத்து:
தகாத செயல்களைக் கண்டால் மானமுடையார் மனம் அழல் கொள்ளும்.
விளக்கம்:
மதுகை - வலிமை; திறனிலார் என்றது கயவரை:
பெருமிதம் - பெருமிதம் போன்ற பொருந்தாச் செயல்கள்,
கண்டக் கடைத்தும் என்னும் உம்மை, பிற பொருந்தாச் செயல்களை அறிந்தவிடத்துங் கனல் போல் என்பது விளக்கி இறந்தது தழீஇயது.