கூற்றம் குதித்துய்த் தறிவாரோ இல் - பழமொழி நானூறு 183

இரு விகற்ப நேரிசை வெண்பா

வளமையும் தேசும் வலியும் வனப்பும்
இளமையும் இற்பிறப்பும் எல்லாம் - உளவாய்
மதித்தஞ்சி மாறுமஃ தின்மையால் கூற்றம்
குதித்துய்த் தறிவாரோ இல். 183

- பழமொழி நானூறு

பொருளுரை:

செல்வமும், புகழும், வலிமையும் அழகும் இளமையும், குடிப்பிறப்பும் என்றிவை யெல்லாம் உளவாக அவற்றை மதித்துப் பயந்து நீங்குந்தன்மை கூற்றத்திற்கு இல்லாததால் யமனினின்றும் பிழைத்துச் சென்றாராக அறியப்படுவார் ஒருவரும் இல்லை.

கருத்து:

வளமை, தேசு, முதலியவற்றின் நிலையாமை நோக்கித் துறந்து நல்வழியில் செல்க.

விளக்கம்:

தேசாவது ஒளி. உடையானைப் புகழ் விளக்கி நிற்றலின் புகழ் இங்கே ஒளியெனப்பட்டது. இவற்றின் மிகுதி கண்டு கூற்றம் அஞ்சுதலில்லை..

'கூற்றம் குதித்துய்ந் தறிவாரோ இல்' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Sep-22, 8:29 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 38

மேலே