என்பாய் உகினும் இயல்பிலார் பின்சென்று தம்பாடு உரைப்பரோ தம்முடையார் – நாலடியார் 292
நேரிசை வெண்பா
என்பாய் உகினும் இயல்பிலார் பின்சென்று
தம்பா(டு) உரைப்பரோ தம்முடையார்; - தம்பாடு
உரையாமை முன்னுணரும் ஒண்மை யுடையார்க்(கு)
உரையாரோ தாமுற்ற நோய் 292
- மானம், நாலடியார்
பொருளுரை:
தன்மானமுடையோர், தாம் எலும்பாகித் தசை உருகிச் சிதைந்தாலும், குணமில்லாதவர் பின் சென்று தம்முடைய இடுக்கண்களைச் சொல்லிக் கொள்ள மாட்டார்;
தம்முடைய துன்பங்களைத் தாம் எடுத்து உரையாமைக்கு முன்பே அவற்றை உணர்ந்து உதவும் அறிவு விளக்கமுடைய குணசாலிகட்கும் தாம் அடைந்த இன்னல்களை அவர் உரையார் போலும்! (மானமுடையார் இயற்கை அத்தகைத்து)
கருத்து:
மானமுடையார் தம் துன்பங்களைப் பிறர்க்குப் புலப்படுத்தார்.
விளக்கம்:
உகுதல் - தசை வீழ்தல்; இயல்பு - இயற்கையான நற்குணம். தம் என்றது, தம் உயிரியல்பாகிய மானத்தை உணர்த்தியது