ஆற்ற முடியா தெனினுந்தாம் ஆற்றுவார் மாற்றார் மறுமைகாண் பார் – அறநெறிச்சாரம் 171

நேரிசை வெண்பா

கொடுத்துக் கொணர்ந்தறம் செல்வங் கொடாது
விடுத்துத்தம் வீறழிதல் கண்டார் - கொடுப்பதன்கண்
ஆற்ற முடியா தெனினுந்தாம் ஆற்றுவார்
மாற்றார் மறுமைகாண் பார் 171

- அறநெறிச்சாரம்

பொருளுரை:

தாம் முற்பிறப்பில் செல்வம் பெற்ற காலத்து வறியோர்க்கு வழங்கியதால் விளைந்த அறம் கொண்டு வந்து கொடுத்த செல்வத்தினை வறியோர்க்குக் கொடாது விடுத்து தம் பெருமை யழிகின்ற பிறரைக் கண்ட பெரியார், வறுமையால் இரந்தோர்க்கு வள்ளன்மையோடு மிகுதியும் வழங்கமுடியாதெனினும் தம் செல்வ நிலைக்கு ஏற்றவாறு கொடுத்துதவுவார்,

இரந்தவர்கட்கு இல்லை என்று கூறார்; மறுமையின்பத்தை யடையுமவர்.

குறிப்பு:

கொணர்தல் - கொண்டு வருதல்; வீறு - மற்றொன்றற் கில்லாச் சிறப்பு.

கொணர்ந்த + அறம் = கொணர்ந்தறம்: அகரந் தொகுத்தல். 'அறங் கொணர்ந்த செல்வம்' என பிரித்துக் கூட்டுக

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Sep-22, 12:19 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 33

சிறந்த கட்டுரைகள்

மேலே