நன்றேகாண் மான முடையார் மதிப்பு – நாலடியார் 294
நேரிசை வெண்பா
இம்மையும் நன்றாம் இயல்நெறியுங் கைவிடா(து)
உம்மையும் நல்ல பயத்தலால், - செம்மையின்
நானம் கமழுங் கதுப்பினாய்! நன்றேகாண்
மான முடையார் மதிப்பு 294
- மானம், நாலடியார்
பொருளுரை:
கத்தூரி மணக்குங் கூந்தலுடைய பெண்ணே! நடுநிலையாக நோக்குமிடத்து மானமுடையார் நடக்கை, புகழும் இன்பமுந் தருதலால் இம்மையிலும் நன்றாகும்; உண்மை நெறியும் வழுவுதலின்றி மேலுலகிலும் இன்பமாவன உண்டாக்குதலால் மறுமைக்கும் நல்லதேயாம்.
கருத்து:
மானமுடையார் ஒழுக்கம் இருமைக்கும் இன்பந் தரும்.
விளக்கம்:
இயல்நெறி வீடு பயப்பதாகலின், இயல்நெறியுமென்று உம்மை தந்தார்; உம்மையென்றது, மேலுலகம். மதிதொழுகும் ஒழுக்கம், மதிப்பெனப்பட்டது

