மறந்திடுக செல்வர் தொடர்பு – நாலடியார் 293

இன்னிசை வெண்பா

யாமாயின் எம்மில்லங் காட்டுதும் தாமாயின்
காணவே கற்பழியும் என்பார்போல் - நாணிப்
புறங்கடை வைத்தீவர் சோறும் அதனால்
மறந்திடுக செல்வர் தொடர்பு 293

- மானம், நாலடியார்

பொருளுரை:

வறியேமாகிய நானாகின் செல்வர்கட்கு உண்ணவும் இளைப்பாறவும் எம் இல்லத்தை இடமாக உதவுகின்றோம்.

ஆனால் அச்செல்வர்களோ நாம் பார்த்தாலே தம் மனைவியரின் கற்புக் கெடும் என்று கருதுவார் போல் மனங்கூசிச் சோறும் வாயிலின் வெளியில் வைத்துப் போடுவர்;

ஆதலால் பிறரைப் பொருள் செய்யாத செல்வர்களின் தொடர்பை மறந்துவிடுங்கள்.

கருத்து:

தாம் வறியராயினும் தம்மை மதியாத செல்வர்களின் தொடர்பை மானமுடையோர் மறந்து விடுதல் வேண்டும்.

விளக்கம்:

நாணி என்றார், அச்சோறிடுதலுந் தகாததொன்று செய்தலாக அவர் கருதுதலின். சோறும் என்னும் உம்மை,

உள்ளே இருந்து உண்ணுதற்குரிய உணவும் என்னும் பொருள் தந்து உயர்வு சிறப்பாய், இனிச் சற்று இளைப்பாறும் பொருட்டுப்படுத்தலும் புறக்கடைக் கண்ணதே என்னும் பொருள் பெறுவித்து எதிரது தழீஇயதாய் நின்றது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Sep-22, 6:59 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 21

மேலே