43 ஆன்மீக வழியில் அமைதி

அத்தியாயம் – 43
ஆன்மீக வழியில் அமைதி
எழுத்தாளர் பூ.சுப்ரமணியன்


நமது அறிவுக்கும் உணர்வுக்கும் அப்பாற்பட்டது ஆத்மா ஆகும். ஆத்மா என்பது உயிரா, உடலா, உணர்வா என்று சிந்தித்துப் பார்த்தால், ஆத்மா என்பது உடல் என்று கூற முடியாது. உடல் முதுமையின் காரணமாகவோ நோயின் காரணமாகவோ இந்த மனித உடல் அழியக்கூடியது. ஆத்மாவிற்கு அழிவில்லை என்று ஆன்மீக ஞானிகள், சித்தர்கள் கூறியுள்ளனர். ஆத்மா என்பது அறிவு என்றும் கூற முடியாது. மனிதனுக்கு மனிதன் அறிவு நிலையில் வேறுபாடுகள் குறைபாடுகள் போன்றவை காணப்படுகிறது.

ஆத்மாவிற்கு வளர்ச்சி, வளர்ச்சியின்மை, வேறுபாடுகள், மாறுபாடுகள் குறைபாடுகள் போன்ற நிலைகள் இருப்பது இல்லை. ஆத்மா என்பது நம்மிடையே காணும் உணர்வா? என்று சிந்தித்துப் பார்த்தால், உணர்வு என்றும் கூற முடியாது. ஏன் என்றால் மனித உணர்வுகள் மனிதனுக்கு மனிதன் பலவிதங்களில் உணர்வுகள் மாறுபட்டு வெளிப்படுகிறது. ‘உடல் அழிவதைப்போல் ஆத்மா அழிவது இல்லை. குடம் உடையும்போது குடத்தில் இருக்கும் காற்றும் ஆகாயமும் உடையாமல் இருப்பது போன்றது’ என்று ஆத்மா பற்றி வடலூர் வள்ளல் பெருமான் கூறியுள்ளார்.

ஒவ்வொரு மனிதனுடைய உணர்வுகளும் கணம்தோறும் அடிக்கடி சூழ்நிலைக்குத் தக்கவாறு மாறுதலுக்கு உட்பட்டது. ஆத்மா என்பது உயிரா என்று சிந்தித்துப் பார்த்தால், உலகில் காணப்படும் உயிரினங்கள், அனைத்தும் அழியக்கூடியது. எனவே ஆத்மா என்பது உயிராகவோ, உடலாகவோ, உணர்வாகவோ, அறிவாகவோ, எண்ணங்களாகவோ இருக்க முடியாது. ஆத்மா என்பது அழிவில்லாதது, ஆத்மாவுக்கு உயர்வு தாழ்வு போன்ற மாறுதல்கள் இல்லாதது. ஆத்மாவுக்கு பிறப்பு, இறப்பு, இளமை, முதுமை, நோய்நொடிகள், வண்ணங்கள், குணங்கள் போன்றவை இல்லாதவை ஆகும்.

ஆத்மா என்பது நமது ஸ்தூல, சூக்ம, காரண சரீரங்களுக்கு அப்பாற்பட்டது. ஆத்மாவை நமது கண்களால் காணமுடியாது. ஆன்மீக குருவின் மூலம் பயிற்சியை மேற்கொண்டால் நாம் ஆன்மீக வழியில் சென்று ஆத்மாவை உணர முடியும். ஆத்மாவை உணர்ந்த அறிந்த ஆன்மீக ஞானிகள் காட்டிய வழியில் தியானம், தவம், மன ஒருமைப்பாடு, மனப்பயிற்சி, மூச்சுப்பயிற்சி போன்றவற்றில் ஈடுபடுவதன் மூலம், நாம் ஆத்மாவை உணர முடியும். ஸ்தூல சரீரம் என்பது நாம் காணும் உடல் ஆகும். சூக்ம சரீரம் நமது கண்ணுக்குத் தெரியாத உடலாகும். மனதுக்குக் காரணமாக இருப்பது, ஐந்து கோஷங்களுக்கு வேறுபட்டுக் காணப்படுவது காரண சரீரம் ஆகும்.

உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் மூன்று விதமான அவஸ்தைகளில் அவஸ்தைப்படுகிறான். அவை விழிப்பு நிலை, கனவு நிலை மற்றும் ஆழ்ந்த உறக்க நிலை ஆகும். இந்த மூன்று நிலைகளுக்கும் சாட்சியாக இருப்பது கண்ணுக்கும் கருத்துக்கும் தெரியாதது புரிந்து கொள்ள முடியாதது இந்த ஆத்மா ஆகும்.

சத் என்றால் நித்தியம். நித்தியம் என்றால் அழிவில்லாதது என்று பொருளாகும். சித் என்றால் அறிவு ஸ்ரூபம். ஆனந்தம் என்றால் மகிழ்ச்சியுடன் இருப்பது ஆகும். சத்சித்யானந்தம் என்பது ஸ்தூல, சூக்ம, காரண ஆகிய மூன்று சரீரங்களுக்கு வேறுபட்டு இருப்பதாகும். விழிப்புநிலை, கனவுநிலை, கனவுநிலையற்ற ஆழ்நிலை என மூன்றுவிதமான மனித அவஸ்தைகளுக்கும் வேறுபட்டும் மாறுபட்டும் ஆனந்த சொரூபமாக எது இருக்கிறதோ அதுவே ஆத்மா எனப்படும்.

ஸ்தூல சரீரம் என்பது நமது கண்களுக்கு தெரியும் உடலாகும். எது அழியக்கூடிய தன்மையுடையதோ, நமது துன்ப இன்பங்களை அனுபவவிப்பதற்கு இருப்பிடமாக இருப்பது இந்த ஸ்தூல உடலாகும். சுகம், துக்கம் கோபம், சாந்தம் போன்றவைகளை அனுபவவிப்பதற்கு இருப்பிடமாக இருப்பது இந்த ஸ்தூல உடல் ஆகும். பலவிதமான அனுபவங்களைக் கொண்டது, நம் கண்ணுக்குத் தெரியும் இந்த ஸ்தூல சரீரம் ஆகும். அதாவது பலவிதமான இன்ப துன்பங்களை அனுபவவிக்கக்கூடியது நாம் காணும் ஸ்தூல உடலாகும். இந்த ஸ்தூல உடல் என்பது நாம் குடியிருக்கும் வீட்டைப் போன்றது..

இந்த உலகம் ஐந்து பூதங்களால் ஆனது. நிலம், நீர், காற்று, ஆகாயம், அக்னி போன்ற ஐந்து பூதங்களால் ஆனது. அதேபோல் ஆன்மீக வழியில் சிந்தித்துப் பார்த்தால் நாம் காணும் இந்த உடலும் ஐந்து பூதங்களை தன்னகத்தே கொண்டது. இந்த உடல் பஞ்ச பூதங்களில் நிலம், உடலில் ஓடும் இரத்தம் நீர், நாசி மூலம் நாம் வெளிவிடும் மூச்சு, காற்றாகவும், உடலில் இருக்கும் வெப்பம் அக்னியாகவும் இருக்கிறது. நமது உடல் ஐந்து பூதங்களால் ஆனது. மனிதன் மரணம் அடையும்போது இந்த உடல், இரத்தம், காற்று, வெப்பம் போன்ற ஐந்து பூதங்களும் அழிந்து மண்ணுக்குள் தீயில் ஐக்கியமாகி விடுகிறது.

சூக்ம சரீரம் என்பது நம் கண்களுக்குத் தெரியாத மனம் என்று கூறலாம். நம் கண்ணுக்குத் தெரியாத மனம் குடியிருக்கும் இந்த சூக்ம உடல் ஆகும். மனிதனுடைய மனம் இந்த சூக்ம சரீரத்தின் மூலமாகத்தான் இன்ப துன்பங்களை அனுபவவிக்கிறது. பஞ்சபூதங்கள் அனுபவவிக்கக்கூடிய இன்ப துன்பங்கள் சூக்ம நிலையில் இருந்து ஸ்தூல நிலைக்கு ஆனது என்று சாஸ்திரம் கூறுகிறது. எடுத்துக்காட்டாக ஒரு ஓவியன் ஓவியத்தை தன்னோட மனதில் முதலில் உருவாக்கி, அதன் பிறகுதான் அந்த ஓவியத்தை வரைந்து ஓவியத்திற்கு உயிர் கொடுக்கிறான். அதாவது சூக்மமாக (கற்பனையில்) ஓவியன் மனதில் தோன்றிய ஓவியத்தை ஓவியன் வரைந்து, அந்த ஓவியத்தை நம்முடைய கண்களுக்கு உயிரோட்டமாகத் தெரியும் ஓவியமாக வரைகின்றான்.

அதேபோல் சூக்ம உடல், ஸ்தூல உடலாக மாறி விடுகிறது. ஸ்தூல நிலை இல்லாத நிலை சூக்ம நிலையாகும். இந்த சரீரம் நீர், நெருப்பு, காற்று போன்ற ஐந்து பூதங்களால் உருவாக்கப்பட்டது. நாம் உண்ணும் உணவு, அருந்தும் நீர் உடலை வளர்க்கிறது. அதாவது நாம் உண்ணும் உணவானது, சூக்குமமாக இரசாயன மாற்றமாக மாறி, அதன் மூலம் நமது ஸ்தூல உடலை வளர்ச்சியடையச் செய்கிறது. மனித உடல்கள் மட்டுமல்ல உலகில் காணும் விலங்குகள், பறவைகள் மரம் செடிகொடிகள் போன்றவை அனைத்தும் இந்நிலையில்தான் செயல்படுகிறது. அவைகளும் பஞ்சபூதங்களால் ஆனது.

மனிதர்கள் பலவிதமான உடல்களை அவர்களையும் அறியாமல் விரும்பியும் விருப்பமில்லாமல் பெற்றுள்ளார்கள். குழந்தை, இளமை, முதுமை, பிணி, மூப்பு மரணம் என்ற நிலைகளில் இந்த மனித உடல், மாறிக்கொண்டே இருக்கிறது. முடிவில் நாம் காணும் ஸ்தூல உடல் மரணத்தை தழுவி இறந்து விடுகிறது. உலகில் காணும் மனிதர்களில் உடல் ஊனமுற்றவர்களைக் காணலாம். மனிதனுக்கு கண்கள் தெரியவில்லையெனில் குருடன், கால்கள் நடக்க முடியாமல் இருந்தால் நொண்டி, காதுகள் கேட்கும் சக்தியை இழந்து விட்டால் செவிடன், பேசும் சக்தியை இழந்து விட்டால் ஊமை என்று அழைக்கப்படுகிறார்கள்.

ஒவ்வொரு மனிதனும் முன்ஜென்மத்தில் அவன் செய்த கர்மபலன்களின் மூலம் மனிதன் ஸ்தூல உடலைப் பெறுகிறான். மனிதன் தான் செய்த தர்ம அதர்ம செயல்களினால் ஸ்தூல உடலை பெறுகிறான். எடுத்துக்காட்டாக ஒரு மனிதன் தனது வருமானத்தில் சிக்கனப்படுத்தி வீடு கட்டுதல் போன்றது இந்த மனித உடலைப் பெறுவது ஆகும். உலகில் தர்மம் போன்ற நற்செயல்களைச் செய்தால் அவன் முழுமையான குறைபாடுகள் எதுவுமின்றி, நல்ல முழுமையான மனித உடலைப் பெறுகிறான். உடலில் இருக்கும் ஜீவாத்மா செய்த கர்மபலன்களினால் நாம் பெறக்கூடியது இந்த மனித உடலாகும்.

எடுத்துக்காட்டாக தாய்தந்தையார் ஈட்டிய சொத்துக்களை எல்லாம் அவன் பெற்ற மகனே அழிக்கிறான் என்றால், அவன் தாய் தந்தை செய்த கர்மபலன்கள்தான் அதற்கு காரணம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். கர்ம பலன்களின் அடிப்படையில் அமைகிறது என்றால், மனித உடலில் குடியிருக்கும் ஜீவாத்மா செய்த கர்ம பலன்களின் அடிப்படையில், இந்த மனித ஜென்மம் கிடைக்கிறது. அதனால்தான் மனிதப்பிறவியைக் குறிப்பிடும்போது தமிழ் மூதாட்டி ஒளவையார் ‘அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது. அதனினும் கூன் குருடு நீங்கிப் பிறத்தல் அரிது’. என்று கூறியிருப்பது கர்மபலன்கள் அடிப்படையில் மனித ஜென்மம் அமையும் என்பதை அவர் நமக்குத் தெளிவுபடுத்தியுள்ளார்.

உலகத்தில் காணப்படும் உயிர்கள் அனைத்தும் மகிழும்படி நன்மை தரக்கூடிய செயல்களை நாம் செய்வது புண்ணிய கர்மங்கள் ஆகும். அதற்குமாறாக உலகில் காணப்படும் உயிர்கள் துன்பம் அடையும்படியாக தீமைகள் தரக்கூடிய செயல்களைச் செய்வது பாவ கர்மங்கள் ஆகும். நாம் செய்யக்கூடிய புண்ணிய கர்மங்கள் பலனாக மறுபிறவியில் மனிதனாக பிறக்க வைக்கும். நாம் அறிந்தும் அறியாமல் செய்யக்கூடிய செயல்கள் அனைத்தும் பாவகர்மங்கள் எனப்படும். பாவகர்மங்கள் பலனாக மறுபிறவியில் மனிதப்பிறவி அல்லாத உயிரினங்களான மரம், செடிகொடிகள், பறவைகள், மிருகங்கள் போன்றவையாக பிறப்பெடுப்பார்கள் என்று சாஸ்திரம் கூறுகிறது.

நாம் அனுபவிக்கும் துன்பங்கள் அனைத்துக்கும் முக்கியக் காரணம் மற்றவர்கள் மீது வீணாகக் குற்றம் சாட்டுவது ஆகும். எனவே துன்பங்களில் இருந்து விடுதலை பெற வேண்டுமானால் பிறர் மீது வீண் பலி சுமத்துவதை நிறுத்த வேண்டும். அவ்வாறு குற்றம் சாட்டாமல், நாம் அறிந்தும் அறியாமல் செய்த கர்ம பலன்கள்தான் நாம் துன்பம் அடைவதற்குக் காரணம் என்பதை நன்கு உணர்ந்து செயல்புரிய வேண்டும். இதனைத்தான் புத்த பகவான் ஆசையே துன்பத்துக்குக் காரணம் என்று போதித்துள்ளார். துன்பத்துக்குக் காரணம் ஆசை என்னும் கர்மம்தான் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். அவ்வாறு நாம் உணர்ந்து செயல்புரியும்போது நாம் விரும்பும் தேடும் அமைதி கிடைக்கும். அப்படிப்பட்ட புண்ணிய பாவகர்ம பலன்கள் பற்றி விளக்கமாகக் கூறி நம்மையெல்லாம் பந்தபாசங்களிலிருந்து கரையேற்றுவது ஆன்மீகம்தான். ஆன்மீக வழியில்தான் நாம் விரும்பும் தேடும் அமைதியைக் காணமுடியும். (அமைதி தொடரும்)

எழுத்தாளர் : பூ.சுப்ரமணியன்
வட்டாட்சியர் (பணி நிறைவு)

எழுதியவர் : பூ.சுப்ரமணியன் (27-Sep-22, 9:07 am)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
பார்வை : 165

மேலே