சிறப்பு நேர்காணல்ஹைக்கூ’ கவிஞர் இராஇரவி

மகாகவி பாரதியார் ஆசிபெற்ற உலகம் போற்றும்
‘ஹைக்கூ’ கவிஞர் இரா.இரவி

சிறப்பு நேர்காணல்
உபன்யாஸ் சரவணகுமார், ஆசிரியர் அறிவின் குரல்,

புதுக்கவிதையின் தந்தை என்பவர் மகாகவி பாரதியார். அந்த பாரதியே ஹைக்கூ கவிதையை அறிமுகப்படுத்திய முதல் கவி. ஹைக்கூ என்பது ஜப்பானிய மொழியிலான வார்த்தை. இதன் பொருள் சுருங்க சொல்லி விளங்க வைப்பதாகும். அந்த வகையில் மதுரையில் பாரதியார் பணி செய்த சேதுபதி பள்ளியில் படித்ததால் பாரதியின் ஆசியால் உலகம் போற்றும் ஹைக்கூ கவிஞராக இருந்துவரும் திரு, ஹைக்கூ கவிஞர் இரா. இரவி அவர்களிடம் அறிவுசார் நேர்காணல்…

வணக்கம் சார். மதுரை வடக்குமாசி வீதியே நான் பிறந்து வளர்ந்த ஊர் என்பேன். ஆனால் எங்க மூதாதையர் செஞ்சி தான்.

வரலாற்று பாரம்பர்யம்

எங்க குடும்பம் 4 தலைமுறை தாண்டி மதுரையில் வசிப்பதில் வரலாறும் உண்டு. அதாவது என் தாத்தா. M.R. ராதாவோடு நடித்த அப்போதைய திரைப்பிரபலம் அணுகுண்டு அய்யாவு அவர்களின் தம்பி செல்லையா அவர்களே என்னுடைய தாத்தா அவர். விடுதலைப் போரட்ட வீரர்.

அப்பாவின் அப்பா வீரராகவன் பள்ளி ஆசிரியர். அம்மா சரோஜினி. இவர் கவிக்குயில் சரோஜினி நாயுடுக்காக அம்மா பேரு சரோஜினி ஆயிற்று. அதன் காரணமாக நான் பிரபல கவிஞரானதாக மேடைகளில் பேசப்படுவதுண்டு.

என் மனைவி ஜெயசித்ரா இல்லத்தரசி. இரண்டு பையன்கள்.
மூத்தவர் பிரபாகரன் MCA முடித்துள்ளார். இளையவர் கௌதம் B.Tech. முடித்துள்ளார். என்து தம்பி கண்ணன், தங்கை கலையரசி ஆகியோர் என் குடும்பம்.

இளமைக்காலம்

மதுரை வடக்குமாசி வீதி அருகே உள்ள அவ்வை மாநகராட்சி ஆரம்ப பள்ளி தான், அப்போ மெட்ரிக் பள்ளி என்ற வார்த்தையே கேள்விப்படாத காலம். இதுபோக 6 முதல் 10 வரை, பாரதி பணி செய்த சேதுபதி பள்ளி. +1. +2 ஷெனாய் நகர். இளங்கோவடிகள் பள்ளியில் 1st Batch +2 மாடல் நாங்க தான். B.Com. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் அஞ்சல்வழியில் படித்தேன்.

கவிதை நூல் படைப்புகள் :

சாதாரணமாக கவிதை எழுதி வந்த எனக்கு கவியரசு கண்ணதாசன், மு. முருகேஸ், பொன்குமார், மித்ரா, ஈரோடு தமிழன்பன், வைரமுத்து,
மு. மேத்தா ஆகிய எல்லாருமே ரோல்மாடல் தான். அந்த வகையில் எனது முதல் கவிதை புத்தகம் ‘கவிதைச்சாரல்’ எனும் பெயரில் வெளிவந்தது. தற்போது 26 ஆவது நூலாக ‘இளங்குமரனார் களஞ்சியம்’ எனும் நூலும் 27ஆவது நூலாக கலைமாமணி கு. ஞானசம்பந்தன் முன்னுரையுடன் ‘அம்மா அப்பா’ எனும் நூலும் வெளிவர உள்ளன.

ஆயிரம் ஹைக்கூ எனும் நூல் என் கவிதை படைப்பின் உச்சம் என்பேன். அதாவது காரைக்காலை சேர்ந்த பெண் கவிஞரும், ஆசிரியருமான டாக்டர் மரிய தெரசா அவர்கள் எனது 1000 ஹைக்கூ நூலினை இந்தியில் மொழிபெயர்த்து அதனை வானதி பதிப்பகம் வெளியீடு செய்தது.

ஆயிரம் ஹைக்கூ நூல் எல்லா தமிழக நூலகத்தில் இருப்பது எனக்கான அறிவுசார் அடையாளம் என்பேன்.

அமரர் தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்களை நடுவராகக் கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட பட்டிமன்றங்கள் பேசி உள்ளேன். அமரர் கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட கவியரங்குகளில் கவிதை பாடி உள்ளேன்.

முதல் அரசு விருது

நான் உலகப்புகழ் ஹைக்கூ கவிஞராக இருந்தாலும் நான் சுற்றுலாத் துறையில் பணிசெய்த அரசு ஊழியர் என்பேன்.

அதாவது 26/01/1992ல் அப்போதைய மதுரை மாவட்ட ஆட்சியர் திருமதி கிரிஜா வைத்தியநாதன் ஐஏஎஸ் அவர்களிடம் சிறந்த அரசு பணியாளர் விருது பெற்றேன். பின்னர் அவர் தலைமைச் செயலர் ஆனார்.

அப்துல் கலாமின் ஆசி

அப்துல் கலாம் அவர்களோடு கடித தொடர்பில் துவங்கி, திருச்சி வந்த அவர், என்னை நேரில் வரவழைத்து என் கவிதை நூல்களில் இரண்டினை நேரில் பெற்று என்னை வாழ்த்தியதோடு அதனை படித்து வாழ்த்தும் அனுப்பிய வித்தியாச அறிவு நெகிழ்ச்சி, மகிழ்ச்சி.

முதுமுனைவர் இறையன்பு ஐஏஎஸ் தந்த ‘புலிப்பால்’

இறையன்பு ஐஏஎஸ் அவர்கள், நான் சுற்றுலாத் துறையில் பணி செய்யும்போது சுற்றுலாத் துறை இயக்குனராக, செயலராக இருந்தபோது, அவரோடு கூடுதலான பழக்கமும் நெருக்கமும் ஏற்பட்டது. அவர் எப்போது மதுரை வந்ததும் எனக்கு அவருடனான நிர்வாக ரீதியான நட்பு கூடுதலாக்கியது.

ஒருசமயம் இறையன்பு படைப்புலகம் விழாவில் பேசிட அப்துல்கலாம் அவர்கள் இறையன்பு புத்தகங்கள் இறையன்புவிடம் வேண்டினார். விழாவிற்கு ஒரு வாரமே இருந்தது. இந்நிலையில் இறையன்பு சாரோட புத்தகங்களை ஒரே நாளில் அப்துல்கலாம் சாருக்கு விமானம் மூலம் டெல்லி சுற்றுலாத் துறை நண்பர் மூலமா கையில் கிடைக்க செய்தேன். இறையன்பு நூல்களை பெற்ற கலாம் ஆச்சர்யப்பட்டு இறையன்பை வாழ்த்தினார்.

இந்த செய்தியை கேள்விப்பட்ட என்னை, இறையன்பு அவர்கள் ‘புலிப்பால் இரவி’ எனும் அடைமொழியால் அழைக்கலானார்.

அதாவது ஐய்யப்பன் கதையில் வரும் புலிப்பால் கேட்பது போல் புலிப்பால் கேட்டா கூட வாங்கித் தருவார் என்பதை போல என்னை பார்த்ததும் புலிப்பால் இரவு என்றே அன்போடு அழைப்பார்.

இணையத்தில் இணையற்ற சாதனை

2003 முதல் கடந்த 19 வருடங்களாக என் கவிதை சம்பந்தப்பட்ட இணையதளம் நடத்தி வருகிறேன். இதில் லட்சக்கணக்கான வாசகர்கள், அறிஞர்கள் என்னோடு தொடர்பில் உண்டு. இதில் தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகளில் க்கூ உள்ளன.

இதுபோல் வலைப்பூ எனும் இணையதளமும் புது கவிஞர்களை ஊக்குவிக்க எனது கவிதைக்கு அடையாளமாயிற்று.

எனது கவிதைக்கு அங்கீகாரம்

கோவை பாரதியார் திருச்சி பாரதிதாசன், மதுரை காமராஜர் பல்கலைக்கழகங்கள் என ஹைக்கூ கவிதைகளை பாடத்திட்டத்தில் சேர்த்துள்ளது எனக்கான அங்கீகாரம் என்பேன். குறிப்பாக மதுரை தியாகராசர் கலைக்கல்ரியில் படிக்கும்போது என் மகனுக்கே 10 ஹைக்கூ கவிதைகள் மனப்பாட பகுதியாக வந்தது எனக்கு இன்னோர் அடையாளம் என்பேன்.

மதுரை தியாகராசர் திருச்சி புனித சிலுவை கல்லூரி விருதுநகர் வன்னியபெருமாள் கல்ரியில் என் ஹைக்கூ கவிதைகளை பாடத்திட்டத்தில் சேர்த்து பெருமை பெற்றது.

முதல் கவிதை … காதலி சிரிக்க தடை

கடற்கரையில் வீற்றிருந்த
காதலி
சிரிக்க தடை விதித்தேன்!
கலங்கரை விளக்கம் என்று கருதி
உன் சிரிப்பொலிக்கு
கப்பல் வந்துவிடும்
என்பதால் தடை விதித்தேன்!

கவிஞரான நான் அடைந்த விருதுகள்

25 ஆண்டுக்கு மேலான எனது கவிதைப் பயணத்தின் விருது பட்டியல் ஏராளம். இதை எல்லாத்தையும் சொல்லிட எழுதிட இடமிருக்காது என்பதால் சுருக்கமாக சிலவற்றை சொல்கிறேன்.

கவியருவி, ஹைக்கூ திலகம், கவிமுரசு என்பன அறிஞர் பெருமக்கள் வழங்கியது.

கலைமாமணி கு.ஞானசம்பந்தன் அவர்களிடம் வளரும் கலைஞர் விருது.

நீதியரசர் வள்ளிநாயகத்திடம் கலைமாமணி விக்கிரமன் விருது.

தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பினிடம் எழுத்தோலை விருதும்,

சென்னை உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் அமைச்சர்
க. பாண்டியராசனிடம் பாரதி விருது.

மணிமலரில் முதல் கவிதை …

இளம் வயதிலேயே என் அறிவு கவிதை பக்கமே சிந்தனையை செலுத்திய. அதில் என்னை அதிகம் ஈர்த்தவர்களில் மகாகவி பாரதியும் ஒருவர். அவரின் கொள்கையை பின்பற்றி முதன்முதலாக எழுதியது மதுரை மணி நாளிதழில் வரும் மணிமலரில் இரா. இரவி என என் பெயரிட்டு வெளியாகி என் கவித்திறமைக்கு அடையாளமாயிற்று.

இன்னும் பல விருதுகள் தனது கவிதை நூல்களுக்காக பெற்று சத்தமின்றி சாதித்த கவிஞரை வாழ்த்திட 98421 93103-ல் வாழ்த்தலாமே.

சிறப்பு நேர்காணல்
உபன்யாஸ் சரவணகுமார்,
ஆசிரியர், அறிவின் குரல்.

எழுதியவர் : கவிஞர் இரா.இரவி (27-Sep-22, 1:02 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 88

மேலே