நல்கூர்ந்தக் கண்ணும் பெருமுத் தரையரே செல்வரைச் சென்றிரவா தார் – நாலடியார் 296
நேரிசை வெண்பா
மல்லன்மா ஞாலத்து வாழ்பவ ருள்ளெல்லாம்
செல்வ ரெனினும் கொடாதவர் - நல்கூர்ந்தார்;
நல்கூர்ந்தக் கண்ணும் பெருமுத் தரையரே,
செல்வரைச் சென்றிரவா தார் 296
- மானம், நாலடியார்
பொருளுரை:
வளப்பமிக்க இப் பெரிய உலகில் உயிர்வாழ்பவர் எல்லாருள்ளும் பொருளுடையராயினும் பிறர்க்கொன்று உதவாத இயல்புடையார் வறியரேயாவர்;
வறுமையுற்ற விடத்தும் பொருளுடையாரிடம் சென்று ஒன்று இரவாதவர் பெருமுத்தரையரை யொத்த பெருஞ் செல்வரேயாவர்
கருத்து:
உலகத்தில் ஒன்று உதவும் நிலையும் இரவா நிலையுமே செல்வ நிலையாகும்.
விளக்கம்:
பெருமுத்தரைய1ரென்பார், இவ்வாசிரியர் காலத்தில் விளங்கிய பெருஞ் செல்வராவார்; பெருமுத்தரையரே என்னும் ஏகாரத்தை நல்கூர்ந்தார் என்பதற்கும் ஒட்டுக.
கொடாதவர் செல்வத்தாற் பயன் பெறாமையின், ‘நல்கூர்ந்தா' ரெனவும், நல்கூர்ந்தக் கண்ணும் மானத்தோடு மனவமைதியாய் வாழ்தலின் பிறரை இரவாதவர் பெருமுத்தரையரே யெனவுங் கூறப்பட்டனர்.