பாசத்துள் இட்டு விளக்கினுங் கீழ்தன்னை மாசுடைமை காட்டி விடும் – நான்மணிக்கடிகை 98

நேரிசை வெண்பா

மாசு படினும் மணிதன்சீர் குன்றாதாம்
பூசிக் கொளினும் இரும்பின்கண் - மாசொட்டும்
பாசத்துள் இட்டு விளக்கினுங் கீழ்தன்னை
மாசுடைமை காட்டி விடும் 98

- நான்மணிக்கடிகை

பொருளுரை:

அழுக்குப் பட்டாலும் நன்மணி தன் பெருமை குறையாது; கழுவி எடுத்துக்கொண்டாலும் இரும்பினிடத்தில் அழுக்குச் சேரும்;

கீழான மனப்போக்குள்ள மக்களைத் தளையிலிட்டு ஒறுத்தாலும் கீழ்மை இயல்பையே காட்டி விடுவான்; அல்லது அறிவு கூறி விளக்கினாலும் கீழ்மையான குணத்தையே காட்டுவான்.

விளக்கவுரை:

மணிக்குச் சீரென்றது ஒளி; இரும்புக்கு மாசென்றது துரு. அசை; பூசுதல், கழுவுதல்;

பாசத்துள் இடினும், விளக்கினுமென இரண்டாய்ப் பிரித்துரைத்துக் கொள்க.

அன்றி நான்மணிக்கடிகையில் ஒவ்வொரு செய்யுளினும் நந்நான்கு பொருள்களே சொல்ல வேண்டுமாயினும், ஒரோவொரு செய்யுளில் மூன்று பொருள்கள் காணப்படுதலை நலிந்து பொருள் கொள்ளாது, நூற்பெயர், மிகுதிபற்றி யமைந்ததெனவுங் கொள்ளலாம்.

கீழ்க்கு மாசென்றது அறியாமை!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (1-Oct-22, 10:00 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 40

மேலே