என்னோடு பயணிக்கும் மரணம்

"வண்டிய ஓரமா நிறுத்துய்யா..."
போக்குவரத்து போலீஸ்காரரின் குரல் அதட்டலாக இருந்தது.

என் ஹீரோ ஹோண்டா டூவீலர் புது வண்டியை ஓரமாக நிறுத்தினேன்.

"என்ன சார் வேணும்? நான் அவசரமா போயிட்டு இருக்கேன்"

"நீ அவசரமா போ... இல்ல ஆட்டிக்கிட்டு போ.. RC புக், டிரைவிங் லைசென்ஸ், இன்சூரன்ஸ்... எல்லாம் காட்டிட்டு போ..."

"சார்..இது புது வண்டி... எல்லாம் இருக்கு சார்"

"வண்டி புதுசு தான் ஆனால் நீ பழசு தானே..."

"அப்ப நீங்க மட்டும் இளைஞரா? பார்த்தால் ரிடையர்ட் போலீஸ் மாதிரி இருக்கு"

"ஆமாம் ரிட்டையர்ட் போலீஸ் தான்... ரொம்ப பேசுனா ஆபீசர் கிட்ட கூட்டிட்டு போயிடுவேன். அவரு ஆயிரக்கணக்கா பைன் போடுவார். பரவாயில்லையா?
என்று தூரத்தில் நின்று பில் போட்டுக்கிட்டு இருக்கும் ஒரு போலீஸ்காரரை காட்டினார்.

"இங்க கொடுத்தால் ரூபாய் 100... அங்க கொடுத்தால் ரூபாய் 1000.. எப்பூடி?"

சரி நூறு ரூபாயோடு போகட்டும் என்று பர்ஸை திறந்து எடுத்தபோது.....

அதிலிருந்த தூக்கமாத்திரை அட்டையும் கீழே விழுந்தது....
அதை நான் குனிந்து எடுக்கும் முன் அந்த போலீஸ்கார் எடுத்துவிட்டார்.

"என்னய்யா... இது தூக்க மாத்திரைகள் மாதிரி இருக்கு... எதுக்கு இதை கூடவே வச்சிருக்க...?" என்று கேட்டார்.

"அதெல்லாம் உங்களுக்கு எதுக்கு? இந்தா புடிங்க நீங்க கேட்ட நூறு ரூபாய்.."

இல்ல தம்பி..ம் உன்னை பார்த்தால் எனக்கு வேற மாதிரி தோணுது... துட்டும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம் போய்கிட்டே இரு... போற வழியில இத குப்பைத்தொட்டியில் போட்டுட்டு போ... நீ போட மாட்ட..ம் நானே வசிக்கிறேன்" என்றவர் அந்த தூக்க மாத்திரை அட்டையை தனது பேன்ட் பாக்கெட்டில் சொருகிக் கொண்டார்.

எதுக்கு இந்த தூக்க மாத்திரை அட்டையை என்னோடு வைத்திருந்தேன் என்பது எனக்கு மட்டுமே தெரியும்.
தேவைப்படும்போது என்னையே நான் முடித்துக்கொள்ளத்தான்.

மரணம்....

நான் கண்ட மரணங்கள் சதாரணமானவை அல்ல...

எனக்கு 18 வயது இருக்கும்போது என்னை பெற்ற தாய் நரம்பு மண்டல கேன்சரில் பாதிக்கப்பட்டு கால்கள் வீங்கி புண்ணாகி துடித்துடிக்க வலியில் இறந்தார்கள்...

அதே சோகத்தில் எனது தந்தையார் துக்கத்தை மறக்க முடியாமல் சாராயத்துக்கு அடிமையாகி போதையிலேயே மரணம் அடைந்தார்கள்

நான் எதிர்பாராத வகையில் என் துணைவியாரும் ஓராண்டுகள் குடல் புற்றுநோயால் அவஸ்தை பட்டு மரணம் எய்தினார்கள்.

இதுபோன்றே ..
எனது சிறிய தந்தையார் தான் காதலித்த பெண் தன்னோடு வாழவில்லை என்று வருத்தத்தில் தற்கொலை செய்து கொண்டார்...

தான் ஆசையாக வளர்த்த மகள் தன் காதலனுடன் ஓடிப்போனதால் தூக்கு போட்டு செத்துப்போன தாயும்...
அந்த அவமானத்தை தாங்க முடியாமல் யாரிடமும் பேசாமல் இறந்து போன அவளது தந்தையும்....

இதுபோன்றே என் உறவினர்கள் பலரின் மரணம் இருக்க....

இப்படி ஏகப்பட்ட விபத்துக்கள் இல்லாத மரணங்களை பார்த்த நான்...

எனது மரணம் எப்படி இருக்கும்? என்று ஒருநாள் சிந்தனை செய்தபோதுதான்....

எனது நண்பர் மருந்துக்கடையில் இந்த தூக்க மாத்திரைகளை வாங்கி வைத்துள்ளேன்.

எனது சாவு தூக்கத்தில்தான் போகவேண்டும்.

எனது சாவை எந்த ஆண்டவனும் ஏன் அந்த எமன் கூட தீர்மானிக்க கூடாது.

எனது மரணத்தை தீர்மானிப்பவன் நான் நானாகவே இருக்க வேண்டும்... இருப்பேன்.

எழுதியவர் : பரிதி. முத்துராசன் (6-Oct-22, 3:09 pm)
சேர்த்தது : பரிதிமுத்துராசன்
பார்வை : 216

சிறந்த கவிதைகள்

மேலே