திருட்டுக்கு திருட்டு

திருட்டுக்கு திருட்டு

“மொட்டாச்சி குட்டியை” காணவில்லை, சூரியன் சாய ஆரம்பிக்கும் போதே மயிலாவின் காலடிக்கு வந்து கொஞ்சி கொஞ்சி காலை உரசி கொண்டிருக்கும் ஆட்டு குட்டியை காணவில்லை.
அவளின் அம்மா “மொன்னை ஆடு” கூட ம்மே ம்மே.. கணைத்தபடி வந்து விட்டது. மொட்டாச்சி ஆட்டு குட்டி மட்டும் வரவில்லை. அவள் அம்மாவுடன் மேய போயிருப் பாள் என்று நினைத்திருந்த மயிலா மொன்னை மட்டும் வர மொட்டாச்சியை காணாமல், “மொட்டாச்சி மொட்டாச்சி” சத்தமாய் கூவியபடி அந்த காட்டுக்குள் சுற்றி சுற்றி வருகிறாள். இருள் சூழவும் ஆரம்பித்து கொண்டிருந்தது.
மயிலாவுக்கு பொழுதே மொட்டாச்சியோடுதான். காலை மேய்ச்சலுக்கு எல்லா ஆடுகளையும் அழைத்துக்கொண்டு இந்த காட்டுக்கு வந்து விட்டால், மாலை வரை இதுகளோடுதான். மதியம் பசித்தால் “சோத்து போசியில்” கொண்டு வரும் சோறு. கூட்டாளிகளாய் அங்கங்கு மேய்ச்சலை பார்த்து கொண்டிருக்கும் எல்லாரும் கூடி விடுவார்கள். இவர்கள் ஓடி ஆடி விளையாண்டு கொண்டிருக்க அவரவர்கள் கூட்டி வந்த ஆடுகள் அதுகள் பாட்டுக்கு மேய்ச்சலை பார்த்து கொண்டிருக்கும்.
மொட்டாச்சி குட்டியை மட்டும் இவள் அருகேயே வைத்திருப்பாள். அவ்வப்பொழுது அதை எடுத்து முத்தம் கொடுப்பதும், அதோடு முட்டி விளையாடுவதும், இவளுக்கு பெரும் பொழுது போக்கு. படிப்பை நிறுத்தி அம்மா இவளை ஆடு மேய போட்டு விட்டாளே என்னும் கவலையை எல்லாம், அவளோடு ஸ்கூலுக்கு ஒன்றாய் போகும் மொட்டாச்சி கூட்டாளி பேரை இந்த ஆட்டுகுட்டிக்கு வைத்து ஸ்கூலுக்கு போகும் ஏக்கத்தை இந்த குட்டியுடன் பேசி தன் துக்கத்தை மறைத்து கொள்ளுவாள்.
பாவாடை சட்டை போட்டு தோல் பையை மாட்டி ‘வாத்தியாரு அடிப்பாரு’ என்று தலை தெறிக்க ஸ்கூலுக்கு ஓடி கொண்டிருந்த,மயிலாவை, அப்பன் இறந்து இரண்டு மூணு நாளிலேயே அம்மா வள்ளி “இனி நீ ஸ்கூலுக்கு போக வேண்டாம்” ஆடுகளை மேய்ச்சுகிட்டு இரு” பள்ளி கூடத்துக்கு தடா போட்டு விட்டாள்.
“மயிலு மயிலு” வள்ளியின் சத்தம் இருள் சூழ்ந்திருந்த அந்த காட்டுக்குள் கேட்கவும் மயிலின் உள்ளம் நிம்மதிக்கு வந்திருந்தாலும் மொட்டாச்சியை காணவில்லை என்று எப்படி சொல்வது?
அப்பா.டி .இங்கியிருக்கியா? என்னாச்சு டீ, உன்னைய காணாம பதறியடிச்சு ஓடியாறேன். ஆட்டை பத்திட்டு வராம இங்கனயே நின்னுகிட்டிருக்கே? நானு பதறியடிச்சு ஓடியாறேன், அம்மா “ஹை ஹை” ஆடுகளை பத்தியபடி இவள் அருகில் வந்தாள்.
அம்மாவ் அம்மாவ் கண்ணை கசக்கியபடி அழுதாள் மயிலா. என்னாடி என்னாச்சு?
பதட்டத்துடன் கேட்டாள் வள்ளி.
மொட்டாச்சிய காணலை, இங்கனதான் இருந்துச்சு.,
நல்லா தேடி பார்த்தியாடி, குரலில் பதட்டம், நல்ல குட்டி, இன்றைக்கு சந்தைக்கு போனாலும் மூணாயிரம் நாலாயிரம் தேறும்.
அம்புட்டு எடத்திலயும் தேடிட்டேன், மீண்டும் குரல் கொடுத்தாள்.
சரி, வா மற்ற ஆடுகளை பத்திக்கொண்டு இவளையும் இழுத்தபடி விரசலாக நடந்தாள். இருள் சூழ சூழ அந்த பாதை வழி தெரியாதவாறு கண்ணை கட்டியிருந்தது. சீக்கிரம் நடடி, ஹை..ஹை..ஆடுகளை பத்திக்கொண்டு நடந்தாள். நடக்க நடக்க இவளை வையவும் தவறவில்லை. ஆட்டுக் குட்டிய பாத்துக்க துப்புல்லை, தட்டுவானீ, இன்னும் ஏதேதோ வார்த்தைகளை அரற்றியபடி வந்தாலும் மகளை அருகிலேயே இழுத்து கொண்டு அவ்வப்போழுது “சூதானமா காலை வச்சு வாடி”, பூச்சி புழு இருக்கப்போவுது, இப்படியும் சொல்லியபடி விரசலாக நடந்தாள்.
குடிசையை அடையும்போது நன்றாக இருள் சூழ்ந்து விட்டது. மள மளவென ஆடுகளை பட்டிக்குள் போட்டு அடைத்து விட்டு கதவை திறந்து வந்தவள், போய் கைய காலை கழுவிட்டு வா அவசரமாய் அடுப்பை பற்ற வைத்தாள்.
இருவரும் அருகருகே படுத்து கொண்டாலும். வள்ளி மட்டும் தூங்கவே இல்லை, புலம்பியபடியே இருந்தாள். இத்துணூண்டு புள்லைய காட்டுக்கு அனுப்பிச்சா இப்படித்தான் ஆகும், யாரு களவாண்டுட்டு போனானோ, அவன் நல்லாவே இருக்க மாட்டான், அங்கன யாராச்சும் உன் கூட பேச்சு கொடுத்தாங்களாடி? மகளிடம் திடீரென்று திரும்பி கேள்வி கேட்டாள்.
தூக்கம் கண்ணை சுழற்றினாலும் அம்மா கேட்டது அவளுக்கு புரிந்தது, அச்சினி அக்கா, ராசண்ணன், அப்புறம்..அப்புறம்.. ம்..நம்ம பாரி அத்தை கூட வந்துச்சு.
சட்டென எழுந்து உட்கார்ந்து கொண்டாள் அம்மா, நல்லா தெரியுமாடி, அந்த பாரி கழுதை அங்கன வந்துச்சா?
ஆமா ஆமா..கண்ணை விழித்து சொன்னவள், அவங்க கூட நான் மடியில வச்சு கொஞ்சிகிட்டிருந்த மொட்டாச்சிய தொட்டு பார்த்துச்சே..
அவ போனப்புறம் குட்டி இருந்துச்சா?
இருந்துச்சு, சொன்னாலும் அவளால் உறுதிபடுத்தி சொல்ல முடியவில்லை. இவள் மொட்டாச்சியை காணோமென்று தேடும்போது மாலை ஆகியிருந்தது, அத்தை வந்தது மூணு நாலு மணி இருக்குமே.
இவளும் கல்லு தூக்கி விளையாட்டில் இருந்ததால் அவளால் சரியாக சொல்ல முடியவில்லை.
சரி..படுடீ… அம்மா மீண்டும் படுத்து கொண்டாள்.
திடீரென விழிப்பு வர அம்மாவை தேடினாள், அம்மா காணவில்லை. எங்கு போனாள்? எழுந்து பார்த்தாள். குடிசைக்குள் இல்லை. கதவு சாத்தி வைத்தது போலத்தான் இருந்தது. எழுந்து போக பயந்து மீண்டும் அப்படியே படுத்து விட்டாள்.
காலை அம்மா தட்டி எழுப்பினாள், எந்திரிடீ, “மேவுக்கு” நேரமாச்சு, அரக்க பரக்க எழுந்தவள் போம்மா..சிணுங்கினாள். போடி போய் மூஞ்சிய கழுவு, போ, நான் பக்கத்து காட்டுக்கு களை எடுக்க போகோணும்.
வெளியே வந்த நின்ற மயிலு, அப்பொழுதுதான் விடிந்திருந்த “ஜில் பனி” வந்து அவள் உடம்பில் மோத குளிரால் நடுங்கினாள்.
அம்மாவ் குளிருது, கத்தினாள். தொட்டி தண்ணிய எடுத்து மூஞ்சியில அடிடீ, அம்மா பதிலுக்கு கத்த, எப்படியோ முகத்துக்கு தண்ணீரை அடித்து அலம்பினாள்.
இந்தாடி அம்மாடி சூடாய் கொடுத்த கறுப்பு காப்பி குளிருக்கு இதமாய் இருக்க, கொஞ்சம் வெயிலு காட்டுன உடனே ஆடுகளை கூட்டிட்டு போயிடு, குண்டாவுல சோத்தை போட்டு வச்சிருக்கேன், உண்டுட்டு மிச்சத்து போசியில போட்டுட்டு போ.
அம்மா சொல்லிக்கொண்டே பக்கத்து குடிசைக்கு சென்று செல்லம்மாக்கா செல்லம்மாக்கா.. போலாமா? கூவியபடி நகர்ந்தாள்.
பட்டியை திறந்த மயிலாவுக்கு பெரிய வியப்பு. மொட்டாச்சி குட்டி இவளை கண்டதும் அருகில் ஓடி வந்தது.
“அச்சோ” என்ர மொட்டாச்சி குட்டி எடுத்து மார்பில் அணைத்துக்கொண்டு கொஞ்சினாள், அதற்குள் ஆடுகள் எல்லாம் பட்டியை விட்டு வெளியே வர எல்லாரும் இருங்க, ஓடிப்போய் குடிசைக் கதவை சாத்தி விட்டு, எல்லாம் நடங்க.. ஹை..ஹை..விரட்டியபடி தன் மார்பில் மொட்டாச்சியை அணைத்தபடி நடந்தாள்.
வழியில் இவள் மொட்டாச்சியை அணைத்தபடி செல்வதை பார்த்து கொண்டிருந்த பாரி அத்தை “திருட்டு முண்டை” என்று சத்தம் போட்டு திட்டினாள்.
“என்ர வூட்டு பட்டிக்குள்ள” புகுந்து திருடிகிட்டு போயிருக்கா இவ ஆத்தாக்காரி முணு முணுத்தாலும் வெளியே சொல்ல முடியாமல் குடிசைக்குள் நுழைந்து கொண்டாள்.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (26-Oct-22, 10:38 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 122

மேலே