மழையிலே மலரும் பூக்கள்
மஞ்சள் சூரியன் மெல்ல எழுந்து எட்டி பார்த்து இளம் வெயிலை என் ஜன்னல் வழியே நீட்டி வேலைக்கு செல்ல டா என்று சொல்பவன் இன்று இன்னும் கானவில்லயே. கண்ணை நிமிட்டிய படியே எழுந்து சுவரில் சாய்ந்து தூக்க போதையை தனித்து உடலை முறுக்கி எழுந்தேன். உன் வியர்வையை தணிக்க ராத்திரி எல்லாம் என்னை தலை சுற்ற வைக்கிறாயே! என்று புலம்பி கொண்டே அந்தரத்தில் சுற்றி கொண்டிருந்த சீலிங் ஃபேனை போதும் போய் ஓய்வெடு என்று சொல்லி நிறுத்தி விட்டு நானும் தயாரானேன்.
தலையை திருகி இரண்டு தட்டு தட்டியும் தண்ணீர் வராத குழாயை முறைத்து பார்த்து நிற்க, போதும்... போதும்... கோபத்தில் என்னை உடைத்து விடாதே என பதறி கொப்பளித்து கொட்டியது தண்ணீரை. கோடை காலத்தில் கூட பச்சை தண்ணீரில் குளிக்காத நான் இந்த குளிர் காலத்தில் எப்படி ? பயத்தோடு வாளியில் தழும்பும் நீரில் கையை நனைத்து உடல் சிலிர்த்து புலியை பார்த்து மருகும் மானை போல தவிக்கிறேன். சூத்திரங்கள் சொல்லி முனிவரை போல போதித்ததெல்லாம் போதும் படாரென்று தண்ணீரை தலையில் எடுத்து ஊத்திக்கொள்ள. உடலோடு பிணைந்த என் ஆத்மா பயந்து என்னை விட்டுவெளியே ஓட அதை இழுத்து பிடித்து இறுக்கிக் கட்டிக்கொண்டேன்.
அறுபது புள்ளிகளை சுற்றி வரும் அந்த கடிகாரத்தின் மணி முள்ளும் வேகமாக ஒன்பதரை யில் வந்து நின்றது. மூன்றடி பையில் பார்சல்களை நிரப்பிய நானும் அறுகால் அருகே வந்து நின்றேன். தினமும் என்னை எழுப்பி விடும் என் நண்பன் சூரியனுக்கு இன்று குளிர் காய்ச்சல் போல. அதான் அவன் தோழி மேகத்திடம் சேதி சொல்லி அனுப்பியிருக்கான்.
கொட்டும் தூரலில் நனைந்த படியே என் அருகாமை வந்த தம்பி காரன் உடலை உலுக்கி தன் மேலிருந்த தண்ணீரை தரையில் சிதறிடித்தான். வாலை ஆட்டி என்னை பார்த்து முன்னங்காளில் ஒரு கோடு போட்டு குறைத்து சொன்னான் வேலைக்கு செல்ல வேண்டாம் என்று. ஃபோன் செய்து ஓனரிடம் மழை பெய்யும் விவரத்தை சொல்ல மனசாட்சி இல்லாத அவரோ மனசாட்சியோடு மழை கோட் போட்டு கொண்டு மழையில் பார்சல்களை டெலிவரி செய்ய சொல்ல மனதுக்குள்ளே முனுமுனுத்து கொண்டேன், கோவமாக. முடிவெடுக்காத இடத்தில் இருக்கும் நான் முதலாளி முடிவின் படி பையை மாட்டி கொண்டு புறப்பட்டேன்.
துவ்வானம் தூரும் இந்த தூரல் மழைத்துளிகளோ என் வண்டி மேலே பட்டு துள்ளி குதித்து எழுப்பும் ஓசையை என் காதுகள் ஆர்ப்பரிக்க சில துளிகளோ என் மீது குண்டூசி யாய் பாய்ந்து குத்தவும் செய்கிறது. தலை நனைந்து முடிகள் எல்லாம் ஒவ்வொரு கூட்டமாக பிரிந்து தண்ணீரை சொட்டு சொட்டாக சுரக்க அவை என் கண் மேலே பட்டு பார்வையை மறைக்கிறது. எந்த கவலையும் இல்லாமல் வீட்டுக்குள்ளே இருந்து நிதானமாக வழி சொல்லும் பேரில் என்னை கோபமுற செய்யும் சில கஸ்டமர்கள், மழையிலும் உழைக்கும் என்னை பாவத்தோடு பார்த்து பணம் கொஞ்சம் கொடுத்த கஸ்டமர்கள், பத்து தடவை ஃபோன் செய்தும் கண்டு கொள்ளாத கஸ்டமர்கள் என எல்லாம் கடந்து வேலையை முடித்து ஒரு வழியாக வந்து சேர்ந்தேன் தினமும் என்னை உபசரிக்கும் டீ கடைக்கு .
சுக்கும், ஏலமும் மிதமாக வெந்நீரிலே கலந்து அதில் பசும் பாலை ஊற்றி பச்சை வாசம் போகும் வரை கொதிக்க விட்டு டீ தூளை தூவி சில்வர் டம்ளரிலே கொண்டு வந்து கொடுத்த குட்டி அண்ணனிடம் வாங்கி கொண்டேன். என் இரு உள்ளங் கையிலும் டம்ளரை இருக்கி பிடித்து அந்த சூட்டில் எந்தன் குளிரை போக்க காற்றில் பறந்து வந்த சாரல் துளிகள் மீண்டும் என்னிடம் குறும்புகள் செய்ய கோபம் கொள்ளாமல் அதை ரசிக்க தொடங்கினேன்.
திரள் திரளாய் திரண்டு கிடக்கும் கருமேகங்களுக்கு மத்தியில் ஊரே கொஞ்சம் இருண்டு கிடக்க சிலு சிலுவென வீசும் சாரல் காற்றிலே குதித்து வரும் மழை துளிகள் அந்த நான்கு சக்கர தள்ளு வண்டி மேலே கிடக்கும் ரோஜா மலர்கள் மீது பட்டுச் சிதற சிவப்பு நிற குடையின் கீழே அமர்ந்த படி அதை ரசித்து கொண்டிருந்த அவளை இன்று ஏதோ வித்தியாசமாக பார்த்து கொண்டு இருக்கிறேன்.
குடையின் மேலே பட்டு வழிந்து வந்து கீழே விழ போகும் வான் மழை தண்ணீரிடம் கையை நீட்டி சண்டை செய்கிறாள், அவள். அப்போது அவள் கைகளின் கண்ணாடி வளையல்கள் சிணுங்கி சத்தம் போட, அச்சத்தம் கேட்டு இசை என எண்ணி ஊசலாடும் அவளின் காதணிகள். அந்த காதோரம் பறக்கும் தலைமுடி களை காது மடல்களுக்கு இடையே ஒதுக்கும் வண்ணம் பூசிய அவளின் சின்ன விரல்கள். வளைந்த இரு புருவங்களுக்கு மத்தியல் ஒரு கருப்பு நிற பொட்டு. கீழே சின்ன கண்கள். கோபப்பட்டால் சிவக்கும் மூக்கின் மேலே மின்னும் மூக்குத்தி. அவள் முன்பு உள்ள சிவப்பு ரோஜாக்களும் தலை குனிந்து கொண்டன. அவள் உதடுகளின் நிறத்தை பார்த்து. அந்த பச்சை நிற சேலையை அவள் ஆசை பட்டு கட்டி கொண்டாளா ? அல்ல அவள் மேல் ஆசை கொண்ட சேலை அவளை இறுக்கி கட்டி கொண்டதா ? எது என்னவோ பச்சை நிறம் போர்த்திய பனி மலர் இவள் என்று எண்ணும் அளவுக்கு கொள்ளை அழகு.
நிமிர்ந்து நிற்கும் குடையின் தலையில் ஆங்காங்கே கிழிந்த துவாரங்கள் வழியே பொழியும் இந்த மேகமழைத் தூரல்களில் அவளோடு சேர்ந்து நனையவே எண்ணுகிறேன், நிரந்தரமாக. என்று மூளை கவிதையை சொல்ல, படபடவென துடித்து ஆர்பரித்தது இதயம் காதலை சொல்ல, ஆனால் கண்கள் சொன்னது அவளின் நெற்றி நடுவில் உள்ள பொட்டின் காரணத்தை. என்னிடத்தில் மௌனம் மட்டுமே.
சில நிமிடங்களில் கொட்டும் தூறல் நின்றது . மாடி கட்டிடங்களுக்கு உள்ளே ஒளிந்த பறவைகள் மீண்டும் வானில் வட்டமிட தொடங்கின. காலியான சாலையில் மக்கள் நகர ஆரம்பித்தனர். அவர்களோடு சேர்ந்து நானும் நகர்ந்தேன். இதயத்தை இழந்து விட்டு ...