பசை

பசை
******
தூரிகையில் பற்பசை ஏந்திட
விடியும் பொழுதுகள்
சவரப் பசையுடன்
முகச் செழிப்பாகி
வாசனைப் பசையுடன் மணக்கத் தொடங்குகிறது

ரொட்டியில் அம்மா தடவிக்கொடுக்கும்
சட்னிப் பசையோடு
பசையுள்ளத் தொழிலுக்கான தேடலில்
விண்ணப்பம் சுமக்கும் கூடுகளுக்கு
ஒட்டுப் பசையாகிக் காத்திருக்கும்
அசையாத நம்பிக்கைகள்

நிராகரிப்பு பசைதடவிய எதிர்பார்ப்புப் பலகைகளில்
கால்வைத்துச் சிக்கிக்கொள்ளும்
எலியாகிய வாழ்வியலில் நின்று
வெளியேறப் போராடவென்று
வாங்கியதான பட்டங்கள்
பெயருக்குப் பின்னால் ஒட்டியும்
ஒட்டாமலுமென்று
பசையற்று நிற்கையில்
பார்ப்பவர் கண்களில்
பசையின்றியே ஒட்டிக் கொள்கிறது
சிலரது பரிதாபங்கள்..

பதவியென்ற ஒன்றில்
ஒட்டிக்கொள்ளாதவரை
படிப்பும் வாழ்வும்
எண்ணெய்யும் தண்ணீருமாக
காதலும் கண்ணீருமாக
வாய்க்கப்பட்டவர்களின் வீதியில்
ஒட்டுவதற்காக இருந்தும்
ஒட்டாத பசைகளாய்
ஓரங்கட்டப் படுகிறது வாழ்க்கை
திறமைகளை ஒட்டிக் கொள்ளாத
வாய்ப்புகளில்
தன்னலங்களைத் தக்கவைக்கச்
சிபாரிசு பல்லிகளின் நாக்குகளாய்
நீளும் அதிகாரப் பசை
வறியப் பூச்சிகளைக் கண்டுகொள்ளாமலே
விழுங்கிக்கொள்ளும்
பாகுபாட்டுப் பசிக்குத்
தீனியாகத் திராணியற்றுத் திரியும்
எத்தனை எத்தனை எத்தனையோ..

இங்கே கல்விப் பசையோடு
சுவர்களாய் நிற்கும்
இளைஞர்களுக்குப் பதாகைபோல்
ஒரு தொழில் அமைந்தால் போதும்
ஊரே நிமிர்ந்து பார்க்கும்
அதற்காகவேனும்
கழுத்து வளையாத சமூகமே
சற்றே இவர்களைக் குனிந்து பார்.
*
மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (29-Oct-22, 2:29 am)
பார்வை : 65

மேலே