உரைவித் தகமெழுவார் காண்பவே, கையுள் சுரைவித்துப் போலுந்தம் பல் – நாலடியார் 315
நேரிசை வெண்பா
வென்றிப் பொருட்டால் விலங்கொத்து மெய்கொள்ளார்
கன்றிக் கறுத்தெழுந்து காய்வாரோ(டு) - ஒன்றி
உரைவித் தகமெழுவார் காண்பவே, கையுள்
சுரைவித்துப் போலுந்தம் பல் 315
- அவையறிதல், நாலடியார்
பொருளுரை:
போலி வெற்றியின் பொருட்டுப் பகுத்தறிவின்றி விலங்கோடொத்தவராய் உண்மையை அறியாமற் காழ்த்து மிகக் கொதித்து எரிந்து விழுவரோடு நெருங்கித் தமது உரைவல்லமையைப் புலப்படுத்த முற்படும் நற்புலவர், சுரையின் விதையை ஒத்த தம் பற்களைக் கன்னத்தில் அறைந்து அவர் உதிர்த்தலால் உடனேதம் கையிற் காண்பவராவர்.
கருத்து:
சினத்தால் தம்மை வெல்ல முற்படும் போலிப் புலவருடன் நற்புலவர் தமது உரை வித்தகத்தைப் புலப்படுத்திக் குறைவடைதலாகாது.
விளக்கம்:
கறுத்தென்றதோ டமையாது எழுந்தென்றமையின், மிக்க கருத்தெனப்பட்டது. உரைவித்தகத்துக்கு முற்படுவார் என்றுரைத்துக் கொள்க. சுரை வித்தென்னும் உவமை உதிர்ந்த பல்லின் இயல்புரைத்தபடி;

