பிங்கு என்ற பூனைக்குட்டி

அன்று விடியற்காலை 4 மணி இருக்கும்....
யாரோ என்னை தட்டி எழுப்புவது போல் இருந்தது.
கண்விழித்து பார்த்தால் என்னையும் என் மகனையும் மாறிமாறி 'மியாவ் மியாவ்' என படபடப்புடன் எழுப்பிக் கொண்டிருந்தது எங்கள் வீட்டு பிங்கு...
"டேய் மவனே... பிங்கு எழுப்புது என்னனு பாருடா..."
விழித்த மகன் அருகில் படுக்கையில் இருந்த தன் தாயாரின் உயிரற்ற உடலை பார்த்து...
"அப்பா...எழுந்திரிப்பா அம்மாவுக்கு என்னமோ ஆச்சு..."
நானும் பதறிக்கொண்டு எழுந்து பார்த்தபோது... கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட என் துணைவியார்
மூச்சு பேச்சு இல்லாமல் இறந்து கிடந்தார்.
பிங்கு என்பவன் வேறு யாருமல்ல பூனையாக பிறந்த மனிதன்.
ஒருநாள் என் மனைவி பிறந்த ஒருநாள் ஆன பூனைக்குட்டியை வீட்டிற்கு தூக்கி வந்தார்...
"இந்த செல்லக்குட்டிய காக்காக்களிடமிருந்து பெரும்பாடு பட்டு காப்பாற்றி தூக்கிட்டு வந்தேன்"
கையில் அந்த பூனைக்குட்டியை வாங்கிப்பார்த்தேன்...
"இன்னும் கண்ணே திறக்கல... இத எப்படியி வளர்ப்ப...?"
"அதெல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன்... நீங்க உடனே மெடிக்கல் ஷாப் போய் ஒரு சிரிஞ் வாங்கிட்டு வாங்க"
என்னடா இது... பூனைக்குட்டிக்கு மருந்தே இல்லாம ஊசி போடப்போரங்களா?" என்று மனதில் நினைத்துக்கொண்டு வாங்கிக் கொடுத்தேன்.
அந்த சிரிஞ்சில் பாலை எடுத்து அந்த பூனைக்குட்டிக்கு ஊட்டியபோதுதான் என ன் அறிவுக்கு எட்டியது....
'ஒரு தாய்க்குத்தான் தெரியும் பிள்ளையை எப்படி வளர்க்க வேண்டும் என்று'
அந்த பூனைக்குட்டிக்கு ஒருநாள் பெயர் சூட்டும் விழா நடந்தது. அதன் நிறத்தை வைத்து ன் மகன் சூட்டிய பெயர்தான் பிங்கு.
அலுவலகத்திலிருந்து இரவு நான் வீடு திரும்பிய போதெல்லாம் அந்த கண் விழிக்காத பிங்குவை என் நெஞ்சில் போட்டு மகிழ்வேன்.
அப்போது என் அலுவலக வேலையின் டென்ஷன் குறைந்ததை உணர்ந்தேன்.
பிறகு கண்விழித்த போதும் நான் வீட்டிற்கு வந்தால் என் நெஞ்சில் ஏறி தூங்குவதையே பழக்கப்படுத்தி கொண்டான் பிங்கு.
தினமும் காலையில் எழுந்து கடற்கரைக்கு சென்று புதிய சின்ன மீன்களை வாங்கிக் கொடுப்பேன்.
எனக்கும் பிங்குவுக்கும் இனம் புரியாத ஒரு பந்தம் உருவானது.
அப்பாகிட்ட போடா என்று என் மனைவி சொன்னால் போதும் என் அருகே ஓடிவந்து கொஞ்சுவான்.
இரவு நேரங்களில் என் வருகைக்காக காத்திருப்பான்.
அவனை மாதம்தோறும் கால்நடை மருத்துவ மனைக்கு தூக்கிச் சென்று பல ஆயிரங்கள் செலவு செய்து பராமரித்து வந்தார்கள் என் துணைவியார்.
காலப்போக்கில் அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பேசுவதை புரிந்து கொண்டனர்.
"இன்னைக்கு மழை பெய்க்8றது உனக்கு மீன் கிடையாது வேணும்னா சிக்கன் வாங்கி தரட்டுமா?"
அதைப் புரிந்து கொண்டு 'சரி' என்கிற அளவுக்கு அவர்கள் பேச்சு, பழக்கம் இருந்தது.
எனது துணைவியாரின் மரணத்திற்கு பிறகு பிங்கு முழுக்க முழுக்க என்னோடு ஐக்கியமாகி விட்டது.
என் துணைவியார் இறந்து 3 வருடங்களுக்குப்பின் நாங்கள் எண்கள் சொந்த வீட்டை விட்டுவிட்டு வேறு வாடகை வீட்டிற்கு குடியேறினோம்....
பிங்குக்கும் வயது 5 ஆகிவிட்டது...
ஒருநாள் வாடகை வீட்டு உரிமையாளர் அவர் இருசக்கர வாகனத்தின் இருக்கையில் பிங்கு கோடு போட்டுவிட்டான் என்று என்னிடம் புகார் அளித்தார்.
"ஏன்டா லூஸு பயலே... இதுவரை இல்லாத கம்லைன்ட் வருறமாதிரி ஏன் பண்ணுற? என்று கோபத்தில் ஒர் அடி கொடுத்தேன். அன்று அவனிடம் பேசவில்லை.
மறுநாள் காலையில் மீன் சாப்பிட்டுவிட்டு என்னையே பார்த்து கொண்டிருந்தான். பிறகு வெளிய போனான்.
அன்று போனவன் தான் இன்றுவரை வரவில்லை.

எழுதியவர் : பரிதி. முத்துராசன் (30-Oct-22, 4:54 pm)
சேர்த்தது : பரிதிமுத்துராசன்
பார்வை : 75

மேலே