வெற்றியின் இரகசியம்
அது ஒரு அழகிய நந்தவனம் எண்ணற்ற மலர்கள் நறுமணம் பரப்பிக் கொண்டு பூத்துக் குலுங்கிய வண்ணம் இருக்கும்
மகரந்ததூள்கள் ஆங்காங்கே மஞ்சள் பாய்களாக மரத்தடிகளில் பரப்பிஇருக்கும் .இதையெல்லாம் இரசிக்க இரண்டு கண்கள் போதாது ஆயிரம் கண்கள் வேண்டும் அவ்வளவு அழகிய தோட்டமது.
இந்த நந்தவனத்தை உருவாக்கியவள் யாழினி ஒவ்வொரு மரத்தையும்,மலர் கொண்ட செடியையும் தொட்டு தொட்டு பேசி அதனுடன் உறவாடுவாள் .
அந்த நந்த வனத்தில் அழகிய பட்டாம் பூச்சிகள் எண்ணற்ற வண்ணங்களில் அங்கும் இங்கும் தாவி மலர்களில் அமர்ந்தும் பறந்து கொண்டிருக்கும்.
அதனை மிகவும் இரசித்துக் கொண்டு இருப்பாள் யாழினி.
வழக்கம் போல் இன்றும் தோட்டத்திற்கு வந்தவள் உடன் பக்கத்து வீட்டு சிறுவன் இனியனை அழைத்துக் கொண்டு வந்திருந்தாள்.அவள் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றச் சென்றாள்.
விளையாடிக் கொண்டிருந்தஇனியன் வெகு நேரமாக பட்டாம் பூச்சி ஒன்று அதன் கூட்டிலிருந்து வெளியேற போராடிக் கொண்டிருப்பதை பார்த்தான் அது கூட்டிலிருந்து வெளியேற கஷ்டப்படுவதாக நினைத்து அந்த கூண்டை மெதுவாகஒரு சிறு குச்சி எடுத்து அகலப் படுத்தினான்.
பட்டாம் பூச்சி சிறிது நேரத்தில் கீழே வந்து விழுந்தது.அதைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தான்.அது இறக்கையை விரித்து பறக்குமென நினைத்தான் மாறாக அது சிறு இறக்கைகளுடன் உடல் வீங்கியபடி ஊர்ந்து சென்றது.
அதைப் பார்த்த இனியன் அக்கா அக்காவென அழைத்தான் பதற்றத்துடன் யாழினி ஓடி வந்தாள் என்ன இனியா ?என்ன நடந்தது ?எனக் கேட்டாள் நடந்ததையும் தான் செய்ததையும் கூறி அந்த பட்டாம் பூச்சியையும் காட்டினான் .அதைப் பார்த்த யாழினி அச்சச்சோ பாவம்... ஏனடா இப்படி செய்தாய்? என அவனை கடிந்து கொண்டாள்.இனியா இதுப் போல் இனி நீ செய்யக் கூடாது அது வெளியே வர முடியாமல் கஷ்டப்படவில்லை அது அதிக நேரம் எடுத்துக்கொண்டு போராடுவது தனது கூட்டை விட்டு வெளியேறி அழகிய பட்டாம்பூச்சி ஆவதற்கான முயற்சி அது அவ்வாறு போராடினால்தான் அழகான பட்டாம்பூச்சியாக வெளியே வரும்
எந்தப் போராட்டத்துக்கும் ஆளாகாமல் போனால் பறக்க முடியாது!
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.…..
இனியா வாழ்க்கை என்பதே போராட்டம் தான்.அதில் போராடினால்தான் வெற்றி பெற முடியும்
புரிகின்றதா இனியா ....
அந்த பட்டாம்பூச்சி தன் வாழ்க்கைக்காக போராடியது போல் நீயும் உன் வாழ்வில் வெற்றி பெற போராட வேண்டும் சரியா இனியா என்றாள்.சரி அக்கா நான் நன்கு படித்து வாழ்க்கையில் முன்னேறுவேன் என்றான்....
#போராட்டங்கள் நம்மை பிரகாசிக்கச் செய்கின்றன#
( பின் குறிப்பு:பட்டாம்பூச்சி தனது கூட்டை விட்டு வெளியே வருவதற்கான தொடர்ச்சியான முயற்சி, உடலில் சேமிக்கப்பட்ட திரவத்தை இறக்கைகளாக மாற்ற அனுமதிக்கும். இதனால், உடல் இலகுவாகவும் சிறியதாகவும் மாறும், இறக்கைகள் அழகாகவும் பெரியதாகவும் இருக்கும்.)