சில திரைப்படப் பாடல் வரிகளுக்கு மாடசாமியின் எதிர்வினை வாக்கியங்கள்

பாடல் வரி: யாரடா மனிதன் அங்கே, கூட்டி வா அவனை இங்கே
மாடசாமி ( பின்னால் பார்த்து) : ஏம்பா யாராச்சும் இருக்காங்களா?

பாடல் வரி: எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன் நான் வாழ யார் பாடுவார்?
மாடசாமி: எல்லோரும் நலம் வாழத்தானே நீ பாடுறே, அப்புறம் உனக்குன்னு எவன் பாடப்போறான்?

பாடல் வரி: சொன்னது நீதானா சொல் சொல் சொல் என்னுயிரே
மாடசாமி: உனக்கு முன்னாலே இருக்கிறவன் நான்மட்டும் தான் , வேறு எவனும் இல்லை, அப்புறம் நீதானா சொல் சொல் சொல்லன்னு ஏன் தொந்தரவு பண்ணுறே.

பாடல் வரி: பணம் என்னடா பணம் பணம் , குணம் தானடா நிரந்தரம்
மாடசாமி: அதெல்லாம் சரிதான். நீ நிரந்தரமா இருக்கணும்னா பணந்தாப்பா வேணும்.

பாடல் வரி: எனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னைப்போலவே இருப்பான்
மாடசாமி: எனக்கொரு மக பொறப்பா அவ என் மனைவிபோலவே இருப்பா

பாடல் வரி: புத்தன் இயேசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக?
மாடசாமி: அவங்க அம்மா அப்பா பண்ண தப்புக்காக

பாடல் வரி: என் கேள்விக்கென்ன பதில், என் கேள்விக்கென்ன பதில்?
மாடசாமி: கேள்வி என்னன்னு தெரியாம எப்படிப்பா பதில் சொல்லமுடியும்

பாடல் வரி: சட்டி சுட்டதடா கைவிட்டதடா
மாடசாமி: ஏன் வீட்டுல கிடுக்கி இல்லையா?

பாடல் வரி: குமரிப்பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும், குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை என்ன தரவேண்டும்?
மாடசாமி: மாச வாடகை 25000 ரூபாய், நாலு மாச அட்வான்ஸ் . அதில்லாம மாச மெயின்டனன்ஸ் 2000 ரூபாய்

பாடல் வரி: தைரியமாகச்சொல் நீ மனிதன்தானா, மனிதன்தானா?
மாடசாமி: தைரியத்துடன் சொல்கிறேன், நான் மனிதன் இல்லை நான் மனிதன் இல்லை.

பாடல் வரி: மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்தபின்னலும் பேச்சிருக்கும்
மாடசாமி: பணம் இருந்தா மூச்சி இருக்கும் சரிதான், ஆனா அது முடிஞ்சிபோச்சின்னா எங்கேயா பேச்சு இருக்கும்?


பாடல் வரி: பல்லாக்கு வாங்கிப்போனேன் ஊர்வலம் போக நான் பாதியிலே திரும்பிவந்தேனே தனிமரமாக
மாடசாமி: நீ புற்படும்போதே சொன்னேன், ஒருத்தர் ரெண்டு பெற கூட்டிட்டுப்போன்னு. ஆறு பேர் சேர்ந்து தூக்கற பல்லாக்கை உன் ஒருத்தனால எப்படி தூக்க முடியும்?

பாடல் வரி: பொன்னை விரும்பும் பூமியிலே என்னை விரும்பும் ஓருயிரே
மாடசாமி: ஆமாம், உன்னை கல்யாணம் செஞ்சாத்தானே உன்னிடம் உள்ள பொன்னு எனக்கு கிடைக்கும்.

பாடல் வரி: கத்தியை தீட்டாதே உந்தன் புத்தியை தீட்டு
மாடசாமி: அப்போ என் கத்தியும் உன் புத்திபோல மழுங்குபோய்டுமே

பாடல் வரி: நான் யார் நான் யார் நான் யார் , நாலும் தெரிந்தவர் யார் யார்?
மாடசாமி: இத உங்க அப்பா அம்மாகிட்ட கேளு. ரெண்டுபேரா நாலுபேரான்னு அவங்கதான் சொல்லணும்.

பாடல் வரி: ஜாய்புல் சிங்கப்பூர் கலர்புல் மலேசியா
மாடசாமி: சொந்த செலவு பண்ணி போனாதான் தெரியும் ஜாய்புலா கலர்புலான்னு.

பாடல் வரி: நீபாதி நான்பாதி கண்ணே
மாடசாமி: ஓஹோ, அபூர்வசகோதரர்கள் அப்புபோலவா ரெண்டுபேரும்

பாடல் வரி: கல்யாண நாள் பார்க்கச்சொல்லலாமா நாம் கையோடு கை சேர்த்துக்கொள்ளலாமா
மாடசாமி: முதல்ல ஜாதகபொருத்தம் பார்க்கணும். பொருந்தினாதான் பிறகு கல்யாண நாள் பார்க்கணும்.

பாடல் வரி: சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்
மாடசாமி: இங்கே எல்லாரும் சிவாஜி கணேசன் இல்லப்பா. ஒரு நேரத்துல ஏதாச்சும் ஒண்ணைத்தான் பண்ணுவாங்க.

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (7-Nov-22, 11:43 am)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 94

மேலே