உலகின் முதல்மொழி தமிழேகவிஞர் இராஇரவி
உலகின் முதல்மொழி தமிழே!கவிஞர் இரா.இரவி !
உலகின் முதல்மொழி தமிழே உரைப்பது தமிழரல்ல
உலகின் மொழி ஆய்வாளர்கள் உரைத்திட்ட உண்மை!
பல்வேறு மொழிகளின் தாய்மொழி தமிழே என்கின்றனர்
பல்வேறு மொழிகளில் காண்பது தமிழ்ச்சொற்களே!
உலகமொழியாக உயர்ந்திட்ட ஆங்கில மொழியிலும்
எண்ணிலடங்கா தமிழ்ச்சொற்கள் உள்ளன உரைக்கின்றனர்!
மொழிஞாயிறு பல்மொழி அறிஞர் பாவாணர் ஆய்வு
மொழிந்த கருத்து முதல்மொழி தமிழ்மொழியே!
கீழடி ஆய்வுகள் உரைக்கும் உண்மை எழுத்தறிவு
கீழடியில் எழுத்தறிவோடு நாகரீக வாழ்வு வாழ்ந்தவர் தமிழர்!
பொதுமக்களும் எழுத்தறிவோடு வாழ்ந்திட்ட வரலாறு
பொதுவெளியில் இன்று உணரப்பட்ட உண்மை வரலாறு!
தமிழ்ச்சொற்கள் இல்லாத மொழியே இல்லை எனலாம்
தமிழ்ச்சொற்களே அடித்தளமாக உள்ளது அனைத்து மொழிகளுக்கும்!
இந்தியா முழுவதும் கிடைத்திட்ட கல்வெட்டுகளில்
இனிய தமிழ்மொழி கல்வெட்டுக்களே பெரும்பான்மை!
சிந்து சமவெளி நாகரீகமும் தமிழர் நாகரீகமே
சிந்து சமவெளி ஆய்வாளர்கள் உரைத்திடும் உண்மை!
கொரியா தொடங்கி மும்பை கல்கத்தா டெல்லி
எங்கெங்கும் தமிழ்ச்சொற்கள் தெருப்பெயராக உள்ளன!
பன்னாட்டு மொழியாக விளங்குவது பண்டைத்தமிழே
பார் முழுவதும் எங்கும் ஒலித்திடும் உன்னதம் தமிழே!
தேவநேயப் பாவாணர் உரைத்திட்ட போது ஏற்காதவர்கள்
தரணி முழுவதும் ஏற்கப்பட்ட உண்மை முதல்மொழி தமிழே!