அறம் செய்ய விரும்பிடுவோம் ஆக்கப் பணிக்கு உதவிடுவோம்

அறத்தின் வழிதனில் நின்றிடுவோம் –நல்
அறத்தினை நாளும் செய்திடுவோம்
அறமது செயிதிடத் தூண்டிடுவோம் –அதில்
ஆக்கம் பிறந்திட உழைத்திடுவோம்

அன்பும் அறனும் உடைத்தாயன் –நம்
இல்லற வாழ்வும் சிறந்திடுமே
குன்றாப் புகழும் வந்திடுமே –நம்
குடும்ப மகிழ்வும் பொங்கிடுமே …..

இன்னாச் செய்தலை விட்டிடுவோம் –தினம்
இனிமை பொங்க வாழ்ந்திடுவோம்
என்றும் அறமது செய்தாலே –நல்
ஏற்றம் வாழ்வில் நிலைபெறுமே….

வேளை வந்தால செய்திடலாம் –என
வீணே காலம் தள்ளுவதோ ?
ஏழை நாமென எண்ணுவதோ –பெரும்
இழிவினை ஏற்றுக் கொள்ளுவதோ ?

ஆசைப் படுவதை விட்டுவிட்டால் –அது
அறமென நம்மைத் தொட்டுவிடும்
மாசுகள் சேரா உளமாகும் –பிறர்
மதிக்கும் நிலையும் அதுவாகும்.

கோபப் படுவதை மறந்துவிடின் –நமைக்
கோபுரம் கொண்டு சேர்த்துவிடும்
நாவைத் தேனில் குழைத்துவிடின் –எந்
நாளும் நம்மை இணைத்துவிடும்.

நம்மால் நாடும் சிறப்பெய்தும் –பலர்
வாழ்விலும் என்றும் விளக்கெரியும்
இம்மைப் பிறப்பும் உயர்ந்தோங்கும் –நமை
இமயச் சிகரம் ஏற்றிவிடும்.

அறத்தின் வழிதனில் சென்றாலே –நல்
ஆக்கம் அங்கே தேடிவரும்
குறைகள் எல்லாம் ஓடிவிடும் –தினம்
குறையாச் செல்வம் கூடிவரும்.

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (11-Nov-22, 9:55 pm)
பார்வை : 95

மேலே