எல்லாமே விதியல்ல மதியும் ஆங்கு உண்டு

நடப்பதெல்லாம் விதியென்று எண்ணி
கிடந்திடாதே என்றென்றும் தூங்கி
நடைபிணமாய் உனையென்றும் ஆக்ககும்
நல்லவைகள் நடவாமல் போக்கும் !
கிடைப்பதெல்லாம் உன்மதியால் தானே !
கொண்டுதரும் நன்மையெனும் தேனே !
கடைச்சரக்காய் விதிதனையே எண்ணு
கடமையலே கண்வைத்து நில்லு !

உழைப்பொன்றே உயர்வுதரும் என்று
எந்நாளும் எண்ணுவதே நன்று
அழையாதே மடமையினை வாழ்வில்
அதுவஉன்னைத் தள்ளிவிடும் தாழ்வில்
தலைதூக்கும் விதிஎன்றால் கிள்ளு
தளராமல் மதிவழியில் நில்லு !
முளையிட்டு வளராமல் கொல்லு
மண்போட்டு மூடிவிட்டுச் செல்லு !

கோழையென உனைஎண்ணிக் கொள்ளும்
கொடுமையினால் அதுஉன்னைக் கொல்லும்
காளையென நீதுள்ளி ஓடு
கடும்பகையும் உனைக்கண்டு ஆடும்
வேலைதளை விருப்பவுடன் செய்தால்
வாழ்வினிலே மகிழ்வுன்னைத் தேடும்
வேளைவரும் போதிலதைப் பற்று
வீண்பேச்சு பேசுவதை நிறுத்து !

நம்பிக்கை என்றுமுந்தன் வித்து
விதைத்துவிடின் கொண்டுதரும் சொத்து
இம்மையென்றும் மறுமையென்றும் இல்லை
உணர்ந்துவிடின் வந்திடாது தொல்லை.
வம்புதனை விலைகொடுத்து வாங்கும்
வழக்கமதை தொலைத்துவிடு பொங்கும்
செம்மையுடன் உன்வாழ்வை வாழ
சிந்தையிலே விதியதுவும் வீழ !

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (11-Nov-22, 9:54 pm)
பார்வை : 114

மேலே