போதை, மாற்றுமா பாதை

எங்கே போகிறாய் மனிதா…
வாழ்க்கை என்னும் படகை விட்டு
பாதை மாறி நீயும் எங்கே போகிறாய்…
குடும்பம என்னும் கோயில் எங்கே
பெற்றவர் மனைவி பிள்ளைகளை
மறந்து நீ எங்கே தான் போகிறாய்..

வறுமையிலங்கு பிள்ளை அழுகிறாள்
பள்ளி செல்ல வழியின்றி
பையன் கூட வீதியிலே
மாற்று உடை கூட இல்லை
மாத்திரைக்குப் பணமுமில்லை
மாலை வேளை ஆனதும் நீ
மதி மயங்கி நிற்கின்றாய்…

ஆசை ஆசையாய் சேமித்ததெல்லாம்
அடகு வைத்து மீளவில்லை
கட்டிய தாலி வைத்து வருடங்களும் ஓடிற்று
மூன்று வேளை உணவுண்ட நாட்கள் கூட மறந்தாச்சு
கைக்குழந்தை மார்புதைத்து வயிறு காய்ந்து கதறுதடா
பெற்றவன் நீ அறியாயோ பெண்ணவளின் வேதனையை..

பசிதீர்க்க பணம் கேட்டால் பத்து ரூபா இல்லையாம்
பதமான மதுபானம் குடித்து விட்டுப் புலம்புவாயோ
அப்பனும், பையனுமாய் அடி தடியால் அவமானத்தில்…
பெற்ற பாவமென்று தாயவள் பதறுகிறாள்
கட்டிய குற்றமென்று மனைவி தன்னைத் தேற்றுகிறாள்
ஏதுமறியா பச்சைப் பிள்ளையாய் ஏதேதோ உளறுகிறாய் ….

எத்தனை குடும்பமடா சீரழிந்து போகிறது
எப்படி நீ மீள்வாயோ மது போதை தனை மறந்து
சுற்றமும் உறவும் இங்கே எள்ளி நகைக்குதே
வட்டியும் கடனுமாய் வாயடைத்து நிற்பதேன்…
வாழ்விழந்து போவதற்கா பூவோடு கூட்டி வந்தாய்
மாது சுகம் தேடி நீயும் மங்கையை கவருகிறாய்
நிறைமாத பெண்ணவள் இங்கே
நிற்கதியாய் நிற்பதுவோ…..

வாலிபனே விட்டு விடு மது, போதை அத்தனையும்
மறு வாழ்வு உனக்குண்டு மகிழ்ந்து நீ வாழ்ந்திடலாம்
மதி மயங்கி வாழ்தல் இங்கே வாழ்க்கை இல்லை நினைவில் கொள்
பாதை மாறிப் போகாதே போதை உனை அழித்து விடும்
சிந்தை தனைச் சீராக்கு சிற்றின்பம் வேண்டாமே…
போதைப் பேதையாய் பாதை மாறும் உன் வாழ்வை
மாற்றுவாயா…… மாறுவாயா……
போதை, மா(ற்)றுமா பாதை …..

எழுதியவர் : ரோஷ்ணி abi (17-Nov-22, 11:52 am)
சேர்த்தது : Roshni Abi
பார்வை : 199

மேலே