உனக்கு நிகர் நீயேதான்

ஆச்சரியம்தான்.....!
தமிழே...நீ சிலசமயம்
அன்னையாயிருந்து
அனா...ஆவன்னா...சொல்கிறாய்.
பல சமயம்
கன்னியாயிருந்து
காதல்ரசம் சொட்டச்சொட்ட
தேனாய் காதில் இனிக்கிறாய்.
கடுந்தமிழாய்
இலக்கண வரம்புக்குள் இருந்து
எங்களை வாட்டி எடுக்கிறாய்.
இயலாய்...இசையாய்...நாடகமாய்...
ஆடி எங்கள் நாடிநரம்பையெல்லாம்
சிலிர்க்க வைக்கிறாய்.
தடைகளையெல்லாம் மீறி
சரளமாய்...நட்பாய்...
புதுக்கவிதையாய் மிளிர்கிறாய்.
நாட்டுப் பண்ணாய்
காவடிச்சிந்தாய்
எங்களை கிற்ங்கடிக்கிறாய்.
விசிலடிச்சான் குஞ்சுகள் பாடும்
கானா பாட்டிலும் குதூகலிக்கிறாய்.
பிறப்பா...இறப்பா
தாலாட்டா....ஒப்பாரியா...
சந்தோஷமா...சோகமா...
வாழ்வா....சாவா...
காதலா...கடமையா...
வெற்றியா...தோல்வியா...
எதுவானாலும் உனக்குள்தான்
சொல்வளம்..பொருள்வளம்..
கொட்டிக்கிடக்கிறதே...!
உனக்கென்ன வயசு?
யூகிக்க முடியவில்லையே.
குழந்தையாய் பார்க்கும்போது
குழந்தையாய் இருக்கிறாய்.
குமரியாய் கண்சிமிட்டும்போது
கிச்சுகிச்சு மூட்டுகிறாய்.
கன்னியாய் அணைக்கும்போது
கதகதப்பு ஏற்றுகிறாய்.
அன்னையாய் அதட்டும்போது
அரசாங்கம் செய்கிறாய்.
எல்லா மொழிகளோடும்
இணக்கமாய் இருக்கிறாய்.
உனக்கு பொறாமை
என்பதே கிடையாதா?
நேற்று...இன்று...நாளை...
முக்காலத்தோடும்
போராடினாலும்
ஒவ்வொன்றோடும் கலந்தாலும்
அதன் சுவைகளை உள்வாங்கினாலும்
உந்தன் தனித்தன்மை
இழக்காமல்..
இளமை கொஞ்சமும்
குறையாமல்
உயர்ந்தே வாழ்கிறாய்.
ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.
தமிழே...உனக்கு நிகர்
நீயேதான்.

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (19-Nov-22, 8:14 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 1079

மேலே