அருகனின் செம்மையான திருவடிப் புகழைச் செப்புவதே நாவாம் – அறநெறிச்சாரம் 202

நேரிசை வெண்பா

கைப்பன கார்ப்புத் துவர்ப்புப் புளிமதுரம்
உப்பிரதங் கொள்வன நாவல்ல! - தப்பாமல்
வென்றவன் சேவடியை வேட்டுவந்(து) எப்பொழுதும்
நின்று துதிப்பதாம் நா 202

- அறநெறிச்சாரம்

பொருளுரை:

கைப்பு கார்ப்பு துவர்ப்பு புளிப்பு இனிப்பு உப்பு என்னும் அறுவகைச் சுவைகளையும் நுகர்ந்து இன்புறுவன நா அல்ல;

தவறாமல் காம வெகுளி மயக்கங்களை வென்ற அருகனின் செம்மையான திருவடிகளை எக்காலத்தும் மிக்க விருப்பத்தோடு நின்று துதிப்பதுவே நாவாம்.

குறிப்பு: வேட்டு - வேள் என்னும் பகுதியடியாகப் பிறந்த இறந்தகால வினையெச்சம்,
செம்மை + அடி = சேவடி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Nov-22, 11:22 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 19

மேலே