பிழையாகும் கனவுகள்

பிழையாகும் கனவுகள்
====================
வேலையொன்று வாய்க்கவென்று வேண்டுகின்ற தெய்வமில்லை
வேலையென்று வாய்த்தபின்னே வேலைதன்னில் நாட்டமில்லை
சாலைதன்னில் கொடிபிடித்துச் சத்தமாகக் கோசமிட்டுச்
சம்பளத்தைக் கூட்டுவென்றச் சண்டைமட்டு மோயவில்லை
ஆலையினை இழுத்துமூடி அடைப்பதற்கும் துணிந்திருக்கும்
ஆட்களுள்ள காலமின்று ஆட்டிவைக்கும் பாடுதொல்லை
பாலையொத்த மனசுடனே பார்க்கத்தோன் றுகின்றவர்கள்
பாவியென்றப் பேர்வாங்கிப் பரிதவிக்கச் செய்வரிங்கே!
*
வித்துவொன்றை நாட்டிவைத்து வேரூன்றும் முன்பதிலே
விதவிதமாய்க் கனிகளினை வேண்டுகின்ற மக்களிங்கே
சுத்தமாகத் தொழில்செய்யா சோம்பேறி யாயிருந்தே
சொர்க்கத்தில் மிதப்பதற்கும்சொகுசுவாழ்க்கை வாழ்வதற்கும்
எத்தனிக்கும் இழிசெயலை என்னவென்று சொல்வதிங்கே
இத்தகைய மாந்தரினாற் இலங்குகின்ற பூமியிலே
முத்திருந்தும் பயனில்லை முகையவிழ்ந்தும் மணமில்லை
முன்னேற்ற மென்பதெலாம் முள்பட்ட இலையளவே!
*
சிந்துகின்ற வியர்வையிலே செழிப்படையு மெண்ணமின்றிச்
சிந்தைகெட்டுப் போனவர்கள் சீரழிக்கும் பணியிலெல்லாம்
முந்திநின்று வாங்குகின்ற முதற்தரமாம் சம்பளத்தால்
மூழ்குகின்ற நிறுவனங்கள் மூச்சடக்கித் திணறியிங்கு
எந்திரிக்க முடியாமல் இடருகின்ற நிலைமைகள்
என்றென்றும் தொடர்கதையாய் இருப்பதனால் தானிங்கே
கந்துவட்டிக் காரர்கள் கையிருப்புக் கூடிடுதே
கடினவுழைப் பாளர்கள் கனவுபிழை யாகிடுதே!
*
மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (8-Dec-22, 1:18 am)
பார்வை : 103

மேலே