கலப்பைத்தொட்டியான குப்பைத்தொட்டி

விடிகாலை நான்கு மணிக்குத் தூக்கக்கலக்கத்தில் பேருந்தில் சென்றுகொண்டிருந்தபோது திடீரெண்டு கண்விழித்துப் பார்த்தார் கோட்டைய்யா. வெளியே ஒரு விளக்குக்கம்பத்தின் கீழ் 'குப்பைத்தொட்டி" என்ற வாசகம் அவர் கண்ணில் 'கலப்பைத் தொட்டி' என்று தென்பட்டது. உடனே அவர் நடத்துனரிடம் " கண்டக்ட்ர், 'கலப்பைத் தொட்டி' கிராமம் வந்துவிட்டது. பேருந்தை நிப்பாட்டுங்க" என்றவுடன் பேருந்து நின்றது.

கோட்டைய்யா தடுமாறியவண்ணம் கீழே இறங்குவதாகப் பேருந்தின் பின் பக்கம் சென்றார். ஆனால் அந்தப் பேருந்தில் முன்னாலிருந்த ஒரே வழிதான் பேருந்தில் ஏறவும் இறங்கவும். எனவே அவர் மீண்டும் விரைந்து வந்து முன் வழியே கீழே இறங்கினார், நடக்கத் துவங்கினார் அவர் முதுகில் உள்ள பையுடன்.

அப்போதுதான் அவருக்கு ஞாபகம் வந்தது, "என் மனைவியும் என்னுடன் பேருந்தில் வந்தாள்" என்று. நல்லவேளையாக பேருந்து கிளம்பும் நேரத்தில் ஓடிச்சென்று " அய்யா பேருந்தை நிறுத்துங்க. என் மனைவியை விட்டுவிட்டு இறங்கிவிட்டேன்" என்று பலமாகக் குரல் கொடுத்தார். பேருந்து நடத்துனர் அவரது தூக்கக்கலக்கத்தில் " குப்பை தொட்டி யாரவது இருந்தா இங்கே இறங்குங்க" என்றபோது எவரும் அசையவில்லை , இறங்கவுமில்லை. கோட்டைய்யா
கோட்டைய்யா பதறியபடி பேருந்துக்குள் சென்று அவர் அமர்ந்திருந்த இருக்கைக்கு பக்கத்தில் பார்த்தால் அவர் மனைவி இல்லை. அதிர்ந்து பயந்து போய் நடத்துனரிடம் " இங்கே என் பக்கத்தில் என் மனைவி அமர்ந்திருந்தாள். அவளைக் காணவில்லை என்று பீதியுடன் சொன்னவுடன் , நடத்துனர் வாயால் விசில் அடித்து வண்டியை நிறுத்தினார்.

டிரைவர் பேருந்தின் உள்ளே உள்ள விளக்குகளை எரியவிட்டார். பேருந்தில் கோட்டைய்யா மனைவியைக் காணவில்லை. உடம்பெல்லாம் வேர்த்துக்கொட்டி கோட்டைய்யா வெலவெலத்துப்போனார்.

" ஆண்டவா என்ன சோதனை இது, ஒரு முறை டெல்லிக்கு சென்றிருந்தபோது ஒரு பஜாரில் என் மனைவி என் பின்னால் வருகிறாள் என்று நினைத்துக்கொண்டு (எதிரில் சென்ற சிலபேர்களை நான் ஓரக்கண்ணால் கவனித்ததை அவள் கவனிக்க வாய்ப்பில்லை) சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்துச் சென்று திரும்பிப் பார்த்தபோது அவளைக்காணாமல் பயமும் பீதியும் அடைந்து அந்த இடத்திலேயே நின்று கொண்டு, அவள் எங்கே என்று பார்த்த வண்ணம் தவித்தது ஞாபகம் வந்தது . நல்ல வேளை, அவள் அடுத்த பத்து நிமிடங்களில் கோட்டைய்யா நின்ற இடத்தை வந்து அடைந்தாள். அந்த நேரத்தில் அவள் முகம் மிகவும் பீதியுடன் காணப்பட்டது. என்னைப் பார்த்தவுடன் அவள் பயங்கரமாக அழுதுவிட்டாள். அவளுக்கு ஹிந்தி மொழி தெரியாது. அந்த சமயத்தில் செல்போன் வசதியும் இல்லை.அது நடந்தது டெல்லியில். அதன் பிறகு மீண்டும் சென்னைத் திரும்பியவுடன் எனக்கு ஒரு வாரம், நன்றாகவே கருகிய (கருக்கிய) ரொட்டிகளைச் செய்து ( அதற்கு மாட்சிங்கா பொரியலையும் வறுவறு என்று கரியைப்போல் வறுத்து) என் இரவு உணவுக்குப் போட்டதை நான் எப்படி மறக்கமுடியும்" என்பதை வேகவேகமாக நினைவு கூர்ந்தார்.

அதற்குப்பிறகு முப்பது வருடங்கள் இப்படி நிகழவில்லை.ஆனால் இன்று மீண்டும் அவர் 'நான் அந்த பெரும் தவறைச்செய்துவிட்டேனே' என்று கலங்கினார். ஒருவேளை, மனைவி மறதியில் வேறு இருக்கைக்கு சென்று அமர்ந்துவிட்டாளோ என்று சந்தேகித்து, மீண்டும் ஒருமுறை பேருந்தின் பின்புறத்தில் துவங்கி அதில் ஒவ்வொரு இருக்கையிலும் ஒவ்வொரு கோணத்தில் தூங்கி வழிந்துகொண்டிருந்த ஒவ்வொருவரின் முகத்தையும் கோட்டைய்யா நோட்டம் விட்டார். சில பெண்கள் அவரைப்பார்த்துச் சிரித்தது போல இருந்தது. அவர் புரிந்துகொண்டார் "இந்தவேளையில் பேய்க்கூட சிரிக்காது, இப்படி சிரிப்பவர்கள் ஏதோ கனவுகண்டவண்ணம் இருக்கிறார்கள்"என்று.

பேருந்து நடத்துனர் " சார், ஏற்கெனவே இந்த வண்டி தாமதமாகப்போய்க்கொண்டிருக்கிறது, உங்கள் மனைவி வண்டியில் இல்லை.நடுவில் எங்காவது இறங்கியிருக்கலாம். நீங்கள் தயவுசெய்து இங்கு இறங்கிக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு அதே வேகத்தில் " சார், உங்கள் மனைவி பேருந்துக்கு வெளியே தான் நின்று கொண்டிருக்கிறாள். உங்கள் பெயர் கோட்டையா என்கிறாள். நீங்க கோட்டையா தானே " என்று கேட்டபோது நான் " ஆமாம் ஆமாம் ஆமாம் " என்று நான் ஆனந்தச் சத்தம் இட்டபோது நடத்துனர் " உங்க ஆளுடனேயே கீழே இறங்கிவிட்டு இப்போது வண்டியை நிறுத்தி ' மனைவி காணவில்லை என்று புலம்புகிறீர்கள்" அலுத்துக்கொண்டே சொன்னார். நான் பூரித்தபடி " சாரி , ஏதோ தப்பு நடந்துவிட்டது. இப்போ இந்த , இப்போ கோட்டையாக்கு இருக்கு வேட்டைய்யா" என்று சொன்னபடி விரைந்து பேருந்திலிருந்து இறங்கினர் கோட்டையா.

பதறிப்போன அவர் முகத்தைப்பார்த்து அவள் பதறிப்போய் " ஏங்க மறுபடியும் ஏன் பேரூந்துக்குள்ள போனீங்க, நானும்தான் உங்களுடன் இறங்கிவிட்டேனெ. அதைக்கவனிக்கவில்லையா. ஒண்ணும் பயப்படாதீங்க நான் இங்குதான் இருக்கிறேன்" என்றவுடன் தான் கோட்டையாக்கு உயிரே வந்தது.
அவள் கேட்டாள் " இது எந்த கிராமம், நாம் இறங்கவேண்டிய கிராமம் கலப்பைத் தொட்டிதானே?. நான் சொன்னேன் " ஆமாம், இதோ இந்த விளக்கு கம்பத்தின் பக்கத்தில் தான் ஒரு பலகையில் எழுதியிருந்தது " கலப்பைத் தொட்டி" என்று கூறியபடி அங்கிருந்த கம்பத்தின் விளக்கொளியில் கோட்டையா நோட்டமிட்டார் . அவர் மனைவி "இதோ பாருங்க, இங்கே இருப்பது ஒரு குப்பைத் தொட்டி. நீங்க அதைத்தான் 'கலப்பைத் தொட்டி' என்று தவறாகப்புரிந்துகொண்டுவிட்டீர்கள்." கோட்டையா கூர்ந்து கவனித்தபோதுதான் 'குப்பைத் தொட்டி' என்று பெயிண்ட் அடித்துள்ளதைப் பார்த்தார்.

அவர் மீண்டும் பதறிப்போய் " கோமளா, நான் இதைப்பார்த்துவிட்டுதான் 'கலப்பைத் தொட்டி' கிராமம் என்று நினைத்துக்கொண்டு இறங்கிவிட்டேன். இது எந்த கிராமம் என்று தெரியவில்லையே" என்று தூக்கக்கலக்கத்திலும் வருத்தத்துடன் சொன்னார் கோட்டையா. விடிகாலை நாலரை மணி. அங்கே ஒருவரும் தென்படவில்லை. தம்பதிகள் குப்பைத்தொட்டிக்கு கொஞ்சம் பக்கத்தில் உள்ள தண்ணீர்தொட்டிக்கு அருகில் உட்க்கார்ந்துகொண்டு சிறிது கண் அயர்ந்தனர்.

சுமார் ஐந்தரை மணி அளவில் ஒருவர் அவர்கள் பக்கத்தில் வந்து " சாமி, உங்களைப்பார்த்தா இந்த கிராமத்துக்குப் புதுசா தெரியுது. உங்களுக்கு யாரு வேண்டும்?" என்று கேட்டார். கோட்டையா அவரிடம் " இது கலப்பைத் தொட்டி கிராமமா?" என்று விசாரித்தபோது அவர் " சாமி , கலப்பைத் தொட்டி கிராமம் இன்னும் இருப்பது கிலோமீட்டர் தள்ளி இருக்கிறது. இது 'கிலுகிலுப்பை' கிராமம். காலை ஒண்பது மணிக்குத்தான் கலப்பைத் தொட்டி கிராமம் போக பேருந்து வரும்." என்றார்.

கோட்டையா அவரிடம் விசாரித்தார் " அய்யா , உங்களைப் பார்த்தா நல்ல மனுஷன் மாதிரி தெரியுது . எங்களுக்கு கொஞ்சம் காலைக்கடன்களை முடிக்க இடம் கிடைக்குமா?நான் பணம் கொடுக்கிறேன்"
அவர் "சாமி அப்படியெல்லாம் இங்கே கிடையாது. நீங்க எங்க வீட்டிற்கு வாங்க, கொஞ்சம் சுமாராகத்தான் இருக்கும். அதை உபயோகப்படுத்திக்குங்க " என்றார். கோட்டையா அவருக்கு நன்றி கூறினார்.

பிறகு இருவரும் அவர் இல்லத்திற்குச் சென்று அங்கே இருந்த அவ்வளவு சுத்தம் இல்லாத கிராமப்புற வசதிகளைக் கொஞ்சம் சிரமத்துடன் பொறுத்துக்கொண்டு, காலைக்கடன்களை முடித்தார்கள். ஏழு மணியளவில் அவர்களுக்குக் கொஞ்சம் பருகத் தேநீர் கிடைத்தது. பின்னர் இருவரும் குளித்தோம் என்று பேர் செய்தனர். எட்டுமணிக்கு அவர்களுக்கு சூடாக இட்லியும் சட்னியும் கிடைத்தது. இருவருக்கும் சூடாக இட்லியைத் தின்றவுடன் மிகவும் சுகமாக இருந்தது. அந்த நல்ல மனிதர் வீட்டிலிருந்து இருவரும் புறப்பட்டனர்.

கோட்டையா அவருக்குத் தாரளமாகப்பணம் கொடுத்தார். அப்போது அந்த மனிதர் விசாரித்தார் "நீங்க எப்படி அய்யா எங்க கிராமத்தில் தவறிப்போய் இறங்கிவிட்டீர்கள்"
கோட்டைய்யா தான் செய்த தவறை ஒளிவு மறைவில்லாமல் அவரிடம் கூறினார். அந்த நல்ல மனிதர் கூறினார் " ஐயா, என் வீட்டில் இரண்டு மாதங்களுக்கு முன்பு கொஞ்சம்பெயின்டிங் வேலை செய்தோம் . கொஞ்சமாக பெயிண்ட் எஞ்சிவிட்டது. சரி அதை எதற்கு விரயம் செய்யவேண்டும் என்று நான் தான் நேற்று மாலை நான் தான் அந்த குப்பைத்தொட்டியின் மீது " குப்பைத்தொட்டி" என்று பெயிண்ட் செய்தேன். இதைபார்த்துவிட்டு நீங்கள் எங்கள் கிராமத்தில் இறங்கிவிடுவீர்கள் என்று எனக்கு அப்போது தோன்றவில்லை" என்று வெகுளியாகச்சொன்னார்.

கோட்டைய்யாவும் கோமளாவும் திருதிருவென்று விழித்தனர், தூக்கக்குறைவினாலா அல்லது தமக்கு உதவி செய்த கிராமத்து மனிதரின் பேச்சைக்கேட்டா, தெரியவில்லை.

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (8-Dec-22, 4:32 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 126

மேலே