கடுக்கெனச் சொல்வற்றாம் கண்ணோட்டம் இன்றாம் – நாலடியார் 348

நேரிசை வெண்பா

கடுக்கெனச் சொல்வற்றாம், கண்ணோட்டம் இன்றாம்
இடுக்கண் பிறர்மாட்(டு) உவக்கும், - அடுத்தடுத்து
வேகம் உடைத்தாம், விறன்மலை நன்னாட!
ஏகுமாம் எள்ளுமாம் கீழ் 348

- கீழ்மை, நாலடியார்

பொருளுரை:

ஆற்றல் வாய்ந்த மலைகளை உடைய சிறந்த நாடனே! கீழ்மகன் கடுமையாகப் பேசுதல் வல்லான்; கண்ணோட்டம் இல்லாதவன்; பிறரிடத்து நேரும் இன்னலுக்கு மகிழ்வான்; அடிக்கடி சீற்றமுடையான்; கண்ட விடங்கட்குச் செல்வான்; பிறரை இகழ்வான்!

கருத்து:

பிறர்க்குத் தொல்லைகள் விளைப்பது கீழ்மக்களின் இயல்பு.

விளக்கம்:

பிறர்மாட்டு என்பதைப் பிறவிடங்கட்குங் கொள்வது பொருந்தும்;

வேகம், சினத்தின் வேகம்; மலைக்கு விறலாவது எஞ்ஞான்றும் வளமுடைமை;

கீழ் என்னும் அஃறிணைச் சொல்லால் எல்லாம் அஃறிணை முடிபு கொண்டன;

கீழ்மக்களின் இயல்புகள் சிலவற்றை இச்செய்யுள் தொகுத்துணர்த்திற்று.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Dec-22, 11:32 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 34

மேலே