கீழ்களைச் செய்தொழிலாற் காணப் படும் – நாலடியார் 347

இன்னிசை வெண்பா

மைதீர் பசும்பொன்மேல் மாண்ட மணியழுத்திச்
செய்த தெனினுஞ் செருப்புத்தன் காற்கேயாம்;
எய்திய செல்வத்த ராயினும் கீழ்களைச்
செய்தொழிலாற் காணப் படும். 347

- கீழ்மை, நாலடியார்

பொருளுரை:

குற்றந் தீர்ந்த கிளிச்சிறை என்னும் பசிய பொற்றகட்டின் மேல் மாட்சிமை வாய்ந்த மணிக்கற்களைப் பதித்துச் செய்யப்பட்டதாயினும் செருப்பு ஒருவனது காலுக்கே அணிந்து கொள்ள உதவும்;

அதுபோலச் சிறக்கப் பொருந்திய செல்வமுடையரானாலும், கீழ்மக்களை அவர் செய்கின்ற தொழில்களால் இன்னாரென்று கண்டுகொள்ளுதல் கூடும்.

கிளிச்சிறை: gold resembling the parrot's wing in colour - one of the 4 kinds of gold, the others being ஆடகம், சாதரூபம், சாம்பூநதம்.

கருத்து:

கீழோர் இயல்பு நிலைமைகளால் வேறுபடுதலில்லை.

விளக்கம்:

மைதீர் பசும்பொன் என்றது ‘கிளிச்சிறை' யென்னும் பொன்னாதல், மாண்ட மணியாவது, குணச்சிறப்புடைய மணிகளென்க. காண என்பது காணல் என்னுந் தொழிற்பெயரின் திரிபு.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Dec-22, 11:19 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 25

சிறந்த கட்டுரைகள்

மேலே