மனித நேயம்

நான் தூத்துக்குடி அருகே தருவைக்குளத்திலிருந்து மதுரைக்கு நண்பர்கள் சிலருடன் காரில் சென்று கொண்டிருந்தேன். அப்போது டீ குடிப்பதற்காக கீழஈரால் என்ற ஊரில் காரை நிறுத்தினோம். இதன்பிறகு நான் கண்டதை உங்களுக்கு எழுதுகிறேன்.


அந்த ரோட்டோரம் பெரிய அளவிலான ஒரு மிட்டாய்க்கடை.. அதன் அருகே ஒரு டீ ஸ்டால்.

சுமார் 10 அல்லது 12 பேர் டீ குடித்துக் கொண்டிருந்தனர். சிலர் கடையில் பண்டங்கள் வாங்கிக் கொண்டிருந்தனர்.

அதிலே மது அருந்திய நபர் ஒருவரும் புகை பிடித்துக் கொண்டிருந்தார்.
கடைக்காரரிடம் தனது பிள்ளைகளுக்கு நல்ல உணவு பண்டம் தருமாறு பண்டங்களை முன்னும் பின்னும் புரட்டிப் பார்த்து கடைக்காரருக்கு எரிச்சலூட்டிக்கொண்டிருந்தார்.

இன்னொரு நபர் வெள்ளைநிற வேட்டி சட்டையில் தன்னுடைய அருமை பெருமைகளை சொல்லிக்கொண்டு விலை உயர்ந்த சிகரெட் பாக்கெட்டை தன் சட்டைப் பையில் திணித்துக்கொண்டு உலக நடப்புகளில் சிலவற்றையும் தன்னைச் சுற்றியுள்ள சில நபர்களையும் விமர்சித்து ஏளனப்பார்வையோடு தன்னைப் பற்றி பெருமிதம் கொண்டார்.

இதையல்லாம் பசியோடு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த சுமார் 60 வயது மதிக்கத்தக்க, மெலிந்த தேகமுடைய, மேலாடை இல்லாத முதியவர் ஒருவர், வெள்ளை நிற உடை மனிதரிடம் மெல்ல அருகில் வந்து கைஜாடையாக தனக்கு பிச்சை போடும்படி கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்த குடிகார பயலுவலுக்கு வேற வேலையே கிடையாது என அவரின் நண்பர் ஒருவர் சொல்ல, மற்றவர்களும் அதை ஆமோதித்து கிண்டலடித்து கேலி செய்து, ஒன்னும் கிடையாது போய்யா என்று சொல்லவும் அந்த முதியவர் பொக்கை வாயுடன் அப்படியே நின்று கொண்டிருந்தார்.

இதை கவனித்துக் கொண்டிருந்த பல மனிதர்கள், தன்னிடம் அந்த மனிதர் வந்து விடக்கூடாது என்பதைப்போல கண்டும் காணாமல் ஒதுங்கினர்.

ஆனால் அந்த முதிய மனிதரைப் பார்த்து 30 வயதுடைய ஒரு நபர் மனதிறங்கினார். அவர் அருகே சென்று டீ வேணுமா என்று கேட்க, அவரோ வேண்டாம் 5 ரூபாய் இருந்தால் கொடுங்கள் என்று கேட்கிறார்.

உடனே வெள்ளைநிற உடை மனிதர், பார்த்தீர்களா 10 ரூபாய் டீ வேண்டாம் என்கிறான் 5 ரூபாய் பணமாக கேட்கிறான் பாருங்கள், எல்லாம் தண்ணி அடிக்கத்தான் என்று சொன்னதும் அந்த 30 வயது நபரும் எதுவும் கொடுக்காமல் பின்வாங்கிக் கொண்டார்.
அங்கே இருந்த எல்லோரும் முதியவரை ஒரு மாதிரியாய் பார்க்க யோவ் பெருசு என்னய்யா டீ குடிக்கியா, மிக்ஸர், சேவு எதுவும் வேணுமா என்ற முரட்டு சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தோம்.

அங்கே கடைக்காரருக்கு எரிச்சலூட்டிய, சற்றே போதையில் இருந்த நபர் கையில் பண்டங்களுடன் முதியவரை பார்த்து வந்தார்.

முதியவர் முகத்தில் புன்னகை.

இந்தாரும் செலவுக்கு வச்சுக்கோரும் என்று 500 ரூபாய் தாளை எடுத்து நீட்டினார்.
முதியவர் கை நீட்டி அந்த 500 ரூபாயை வாங்கிக்கொண்டார்.

சுற்றி இருந்த, நான் உட்பட அனைவரும் அந்த குடிகாரனை கிறுக்கனாக நினைத்து வேதனைப்பட்டோம். அதிலிருந்த ஒரு பெண்மணி 5 ரூபாய்க்கு பத்து ரூபாயா போட்டிருக்கலாம். பெருமைக்கு போடுறேன்னு இப்படி போடுறது லூசுத்தனம் என்று வெளிப்படையாகவே சொன்னதும்,

ரூபாய் கொடுத்தவர் ஒரு நிமிஷம் போதை தெளிந்தவர்போல அந்த பெரியவரையே பார்த்துக்கொண்டு இருந்தார். அந்த பெரியவரும் அந்த இடத்திலிருந்து விலகி ரோட்டின் மறுமுனைவரை சென்றுவிட்டார்.

என்ன நினைத்தாரோ தெரியவில்லை. அந்த பெரியவரை பார்த்து யோவ் பெருசு யோவ் இங்க வாரும்யா என்று சத்தமிட்டு அழைத்தார். பெரியவர் முகம் சோகமாக மாறிவிட்டது. கூப்பிட்ட குரலுக்கு மதிப்பளித்து பெரியவரும் வந்தார்.

தம்பி, பந்தா பண்ணுரேன்னு வீட்ல உள்ளவங்கள பட்டினி போட்டுறாதீங்க ன்னு வெள்ளைநிற உடை மனிதர் சொல்ல, தன் காதில் எதுவும் கேக்காததுபோல பெரியவர் தோளில் கை போட்டபடி, சாரி பெருசு அந்த ரூபாயை கொடும் என கேட்க, பெரியவரும் கொடுக்க மனசில்லாமல் மெதுவாக பணத்தை நீட்டினார்.

இதை பார்த்துக்கொண்டிருந்த எங்களுக்கும் இதை ஏன் கொடுப்பானேன் அவரை ஏன் அவமதிப்பாரேன் என்று கொஞ்சம் நெருடலாகத்தான் இருந்தது.

யோவ் பெருசு உமக்கு 5,10 ரூபா போதும்தானே, இந்த 500 ரூபாவ வச்சு நீர் என்ன பண்ணுவீரு. நானும் அறிவு கேட்டு கொடுத்துட்டேன். நல்ல வேள இவங்க சொன்னதும்தான் எனக்கு அறிவு வந்துச்சு என்றாரே பார்க்கலாம். அந்த முதியவர் தன் இன்றைய சம்பாத்தியம் ஒரே நொடியில் போச்சே என்று கலங்கியது போல கண்டோம்.

அவரே பேச்சை தொடர்ந்தார். எங்களைப் பார்த்து இப்படி சொன்னார். ஒரு 5 லட்சத்துக்கு என் பெயருக்கு சொத்து ஒன்னு முடிச்சேன். ரொம்ப சந்தோசமா இருக்கேன்.
500 ரூபா செலவு செய்யனுமுன்னு தோணிச்சு செஞ்சுட்டேன். அதுல பாருங்க பெருசுக்கு கணக்கு தெரியாது.500 ரூபாய எப்படி மாத்தனும்னு கூட தெரியாது. வெள்ளையும் சொள்ளையுமா இருக்குற பயலுவ பெருச ஏமாத்திப்புடுவாங்க. 5,10 ன்னா பெருசு ஏமாறாதுன்னு சொல்லிக்கிட்டு சட்டைப்பையில் இருந்து 10.20,50 ரூபான்னு 500 ரூபாய்க்கு சில்லறையாக எடுத்து அந்த பெரியவரிடம் கைநிறைய பணமாக கொடுத்த போது, மனசு குளிர்ந்த பெரியவர் கைநிறைய பணத்தோட, மனசு நிறைய அந்த மனிதருக்கு ஒரு கும்பிடு போட்டாரு பாருங்க……

ப்பா என்னஒரு மகிழ்ச்சி. என்னஒரு திருப்தி.

இப்போ வரைக்கும் அந்த நேசக்காரனை நினைத்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

எவ்வளவு சம்பாத்தியம் பண்ணினாலும் மனசு சந்தோசமா இருக்கணும். நமக்கு மட்டும் இல்ல நம்மோட இருக்கிறவங்களும். அவ்வளவுதான்

இதுக்கு குடிச்சா என்ன? குடிக்காம பந்தா பண்ணுனா என்ன?

எழுதியவர் : தருவை .அந்தோணி லாரன்ஸ் (27-Dec-22, 9:31 pm)
Tanglish : manitha neyam
பார்வை : 343

மேலே