நினைத்த திதுவென்றந் நீர்மையை நோக்கி மனத்த தறிந்தீவார் மாண்டார் - பழமொழி நானூறு 246

நேரிசை வெண்பா

நினைத்த திதுவென்றந் நீர்மையை நோக்கி
மனத்த தறிந்தீவார் மாண்டார் - புனத்த
குடிஞை யிரட்டும் குளிர்வரை நாட!
கடிஞையில் கல்லிடுவார் இல். 246

- பழமொழி நானூறு

பொருளுரை:

புனத்தில் கோட்டான்கள் கூப்பாடு செய்கின்ற குளிர்ந்த மலையை உடைய நாடனே! இரக்கும் பாத்திரத்தில் அன்னமிடுவதன்றிக் கற்களை இடுவார் இல்லையாதலால், வருகின்ற தன்மையைப் பார்த்து இவன் கருதிவந்த பொருள் இதுவென்று முகத்தான் அறிந்து மனத்தின் அளவை அறிந்து கொடுக்கின்றவர்களே அறத்தான் மாட்சிமை உடையவராவர்.

கருத்து:

வறியோர் வேண்டும் பொருளைக் குறிப்பறிந்து கொடுப்பாயாக.

விளக்கம்:

அவன் விரும்பிய பொருளை அவன்றன் நீர்மையாலும் முகத்தாலும் அறிக என்றது.

'மனத்தது' என்றது, அவன் விரும்பிய பொருளின் மிகுதியை.

'அறிந்தீவார்' என்றது பிறனொருவனிடம் இரவாவண்ணம் மிகுதியாகக் கொடுப்பார் என்பதை.

கடிஞையில் கல்லிடுவார் இல்லை யாதல் போல, வறியோர் வேண்டிய பொருளை முன்னத்தான் அறிந்தீக.

'கடிஞையில் கல்லிடுவார் இல்' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (31-Dec-22, 12:05 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 18

சிறந்த கட்டுரைகள்

மேலே