செய்தநன்று உள்ளுவர் சான்றோர் கயந்தன்னை வைததை உள்ளி விடும் - நாலடியார் 356
இன்னிசை வெண்பா
மலைநலம் உள்ளும் குறவன்; பயந்த
விளைநிலம் உள்ளும் உழவன்; சிறந்தொருவர்
செய்தநன்(று) உள்ளுவர் சான்றோர்: கயந்தன்னை
வைததை உள்ளி விடும் 356
- கயமை, நாலடியார்
பொருளுரை:
குறவன் தனக்கு வளந்தந்த மலையினது நன்மையை நினைந்து பாராட்டிக் கொண்டிருப்பான்; உழவன் தனக்கு விளையுள் பயந்த விளைநிலங்களின் நன்மையை நினைந்து பாராட்டிக் கொண்டிருப்பான்;
அவைபோல, ஒருவர் அருட்குணம் மிகுந்து தமக்குச் செய்த நன்றியை நினைந்து பாராட்டிக் கொண்டிருப்பர் சான்றோர்;
ஆனால் தாழ்ந்த அறிவினன், தன்னைப் பிறர் பழித்ததை நினைத்துப் பகைமை கொண்டு விடுவன்: (நலம் பாராட்டான் எனப்பட்டது)
கருத்து:
மெலிந்த அறிவினர், பிறர் தீமைகள் உள்ளுதலை விலக்கி நலந்தேடி உள்ளும் ஆற்றலில்லாதவர் ஆவர்.
விளக்கம்:
குறவர்க்கும் உழவர்க்கும் வாழ்வு மலையினாலும் விளைநிலுத்தினாலும் உண்டாதல் போல,
சான்றோரது வாழ்வு பிறர் செய்தநன்றி உள்ளுதலையே அடிப்படையாகக் கொண்டு நடைபெறுதலும், கீழோரது வாழ்வு பிறரைப் பகைத்துக் கொள்ளுதலையே அடிப்படையாகக் கொண்டு நடைபெறுதலும், பெறப்படும்.
உள்ளுதல், ஈண்டு நினைந்து பாராட்டுதல்; புன்மை கருதிக் கயம் என அஃறிணையான் முடிக்கப்பட்டது; விடும் என்னுந் துணிவுப் பொருள் விகுதி, தவறித் தீயதில நுழைந்துவிட்ட புன்மையின் முரட்டுத் துணிவினை உணர்த்தும்.