கயவர் எனைத்தானுஞ் செய்பவே இன்னாங்கு செய்வார்ப் பெறின் – நாலடியார் 355

நேரிசை வெண்பா

தளிர்மேலே நிற்பினுந் தட்டமாற் செல்லா
உளிநீரார் மாதோ கயவர்; - அளிநீராக்
கென்னானுஞ் செய்யார் எனைத்தானுஞ் செய்பவே
இன்னாங்கு செய்வார்ப் பெறின். 355

கயமை, நாலடியார்

பொருளுரை:

இளந்தளிரின் மேல் நின்றாலும் பிறர் தட்டினாலன்றி அதனுள் இறங்காத உளியின் இயல்பினை யுடையவர் கயவர்;

ஏனென்றால், பிறர்க்கு இரங்கும் இயல்புடைய சான்றோர்க்கு கயவர்கள் எந்த விதத்திலும் உதவ மாட்டார்கள்; தமக்குக் கொடுமை செய்வாரைப் பெற்றால், அவர் என்ன கட்டளை இட்டாலும் உடனடியாக வேலை செய்வர்.

கருத்து:

கயவர், வருத்தியே வேலை வாங்குதற்குரியர்.

விளக்கம்:

அளிநீரார் - ,பிறர்க்கு இரங்கும் இயல்புடையர்

அளிநீரரான சான்றோர் பக்கத்தில் இருப்பது இனிதாக வேலை பார்ப்பதற்கு இடமாயினும், அங்கு அவர் பயன்படாமல், தம்மை வருத்துவார் பக்கலே பயன்படுதல் பற்றித் தளிர்மேலே நிற்பினும் தட்டாமற் செல்லாத உளி உவமமாயிற்று.

"கரும்பு போற் கொல்லப்பயன்படுங்கீழ்"1 என்றார்திருவள்ளுவரும்.

இக் கருத்து இவ்வுவமமே கொண்டு, "விட்டுக் கருமம் செயவைத்த பின்னரும், முட்டாதவரை வியங்கொளல் வேண்டுமால், தொட்டக்கால் மாழ்குந் தளிர்மேலே நிற்பினுந், தட்டாமற் செல்லாது உளி"2 என பிறாண்டும் வருதல் அறிக. உளிக்கு இறங்குதலென்றது, கயவர் தம்தொழில் செய்தற்குக் கொள்ளப்படும்.

1. குறள். 1078 : 8, 2. பழமொழி. 169.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (31-Dec-22, 9:11 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 18

சிறந்த கட்டுரைகள்

மேலே