தந்தீமை யில்லாதார் நட்டவர் தீமையையும் எந்தீமை யென்றே உணர்பதாம் - பழமொழி நானூறு 247

நேரிசை வெண்பா

தந்தீமை யில்லாதார் நட்டவர் தீமையையும்
எந்தீமை யென்றே உணர்பதாம் - அந்தண்
பொருதிரை வந்துலாம் பொங்குநீர்ச் சேர்ப்ப!
ஒருவர் பொறையிருவர் நட்பு. 247

- பழமொழி நானூறு

பொருளுரை:

அழகிய குளிர்ந்த கரைகளில் மோதுகின்ற அலைகள் மேன்மேல் வந்து வீசுகின்ற மிகுந்த நீரை உடைய கடல்நாடனே!

ஒருவர் பொறுக்கும் பொறுமையால் இருவரது நட்பும் நிலைபெறுமாதலால், நட்டார்க்குத் தம்மால் செய்யப்பட்டதொரு தீமையில்லாதார், தம் நட்டார் தமக்குச் செய்த தீமையையும் எம்மால் செய்யப்பட்ட தீமையேஎன்று நினைத்துப் பொறுப்பார்கள்.

கருத்து:

நட்புப் பூண்டொழுகும் இருவருள் ஒருவராவது பொறுமை மேற்கொண்டொழுகுதல் அவர்கள் நட்பு நீடித்து நிற்பதற்கு ஏதுவாகும்.

விளக்கம்:

இருவரும் பொறுமையில்லாதவராக இருப்பின், அவர்கள் நட்பு நீடித்து நிற்காது. இருவருள் ஒருவராவது பொறுமை பூண்டிருத்தல் இன்றியமையாத தொன்றாம்.

'ஒருவர் பொறை யிருவர் நட்பு' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (31-Dec-22, 12:12 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 95

மேலே