புண்ணொக்கும் போற்றார் உடனுறைவு – நான்மணிக்கடிகை 99

இன்னிசை வெண்பா

எண்ணொக்குஞ் சான்றோர் மரீஇயாரின் தீராமை;
புண்ணொக்கும் போற்றார் உடனுறைவு; - பண்ணிய
யாழொக்கும் நட்டார் கழறுஞ்சொல்; பாழொக்கும்
பண்புடையாள் இல்லா மனை 99

- நான்மணிக்கடிகை

பொருளுரை:

நெடுநாள் பழகினவரைப் போல ஆன்றோர்களை நீங்காமலிருத்தல் அறிவுடைமையை யொக்கும்;

தம்மைப் போற்றி இணங்காதவரோடு உடனிருந்து வாழ்தல் புண்ணினை ஒக்கும்;

நட்பாயினார் இடித்துரைக்கும் வன்சொல் நரம்புகளால் இசை கூட்டப்பட்ட யாழிசையை ஒக்கும்;

மனை மாட்சிமையுடைய மனைவி இல்லாத வீடு பாழ்மனையை ஒக்கும்!

கருத்து:

சான்றோரை நீங்காதுறைதல் அறிவுடைமையாகும்;
இணக்கமில்லாரோடு உடனுறைதல் புண்ணுக்கு நிகராகும்
நட்புடையார் இடித்துரைக்குஞ் சொல் வலிதாயினும் அது யாழோசையைப் போலும் இனிமையுடையதாகும்;
மனைமாட்சியுடைய மனையாளில்லாத மனை பாழ்மனையை யொக்கும்.

விளக்கவுரை:

எண் - அறிவு; ‘தொக்கிருந்து எண்ணினால் எண்ணப்படும்' என்று முன்வந்ததையும் கருதுக.

‘சான்றோர் மரீஇயா ரிற்றீராமை. யென்பதை, மருவி யமைந்தாரை நீங்காமையென்று பொருளுரைப்பினும் அமையும். ‘அறியராத் தீராமை' எனவும் பாடம்;

கழறல் - தவறு கண்டவிடத்து இடித்துரைத்தல்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (31-Dec-22, 12:33 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 30

சிறந்த கட்டுரைகள்

மேலே