வருடத்தின் கடைசி நாள்

வருடத்தின் கடைசி நாள்

ஆட்டோவை ஓட்டியபடி வீட்டுக்கு வருவதற்குள் காளியப்பனுக்கு உடம்பு முழுவதும் உதறலாகியிருந்தது. மனம் ஏறக்குறைய கொதி நிலையில் இருந்தது.
இருந்தாலும், மனதின் ஒரு பக்கம் இருக்காது, அதை எல்லாம் நம்பாதே, வேற யாரையாச்சும் பார்த்திருப்பான், இப்படி சொன்னாலும், இவன் மனம் இன்று காலையில் கிளம்பும்போது மாரியம்மாளிடம் கொஞ்சம் முரட்டுத்தனமாகத்தான் நடந்து கொண்டிருந்தான்.
எப்பொழுதும் ஆறு மணிக்கு வீட்டை விட்டு ஆட்டோவை வெளியே எடுத்து கிளம்புபவன் இன்று எழுவதற்கு நேரமாகி விட்டதால், அவசர அவசரமாய் வண்டியை எடுக்கப்போகும்போது மணி ஆறரை ஆகி விட்டிருந்தது.
இட்லி ஆயிடுச்சு, ஒரு நிமிசம் நில்லுங்க, தட்டில் இரண்டு இட்லி சட்னியுடன் வாசலுக்கே வந்து நின்றாள் மாரியம்மாள்.
கோபமாய் அவளை பார்த்தவன் இப்ப இட்லிதான் முக்கியமா? இன்னைக்கு சிபிஎஸ்சி ஸ்கூல் இருக்குது, ஒவ்வொரு வீடா போயி ஸ்கூல் குழந்தைகளை ஏத்திட்டு போறதுக்கு லேட்டாயிடுச்சுன்னு பறந்துகிட்டிருக்கப்போ வந்து நின்னு சாப்பிடுங்கறே.
கோபமாய் முறைத்த மாரியம்மாள் நானும் மனுஷிதான், காலையில் நாலு மணிக்கு எந்திரிச்சு இரண்டு வீடு தள்ளியிருக்கற பைப்புல தண்ணிய புடிச்சு, வந்து உங்க ஆயாளுக்கு காப்பி போட்டு கொடுத்துட்டு பாத்திரமெல்லாம் கழுவி சமைச்சு, எல்லாம் செஞ்சுகிட்டுத்தான இருக்கேன், இப்ப இரண்டு இட்லி சாப்பிட்டுட்டு போறதுல என்ன வந்துடுச்சு.
உங்கிட்ட பேசறதுக்கெல்லாம் எனக்கு நேரமிலை, இப்ப வழிய விடு, ஆட்டோவை வெளியே கொண்டு வர முயற்சி செய்தான்.
இதுல காட்டற வேகம், நான் சொல்றதை கேக்கறதுலயும் இருக்கணும், முணுமுணுத்தாள்.
இப்ப என்னடி நீ சொல்றதை நான் கேக்காம விட்டுட்டேன்.
இந்த ஆட்டோவை அந்தாளுகிட்ட கொடுத்துடுங்க, புது ஆட்டோ வாங்குங்கன்னு சொன்னா கோபபடறீங்க.
இதை சொல்லவும் இவனுக்கு கோபம் தலைக்கு மேல் வந்தது, என்னடி நினைச்சுகிட்டிருக்க? ஆட்டோ வாங்கு வாங்குன்னு உயிரை எடுக்கற, எவங்கிட்ட பணம் இருக்கு.
அதுக்குத்தான் நான் சொல்றதையும் கேட்கமாட்டேங்கறீங்க
கோபத்தில் இரண்டு மூன்று வார்த்தைகளை வீசி வண்டியை முறுக்கி பறந்தான்.
ஸ்கூலில் குழந்தைகளை கொண்டு போய் விட்டு விட்டு, வரும் வழியில் கிடைத்த சவாரி ஒன்றையும் முடித்து விட்டு ஸ்டேண்டுக்கு வந்து நிறுத்தினான். மணி அதற்குள் பத்தை நெருங்கியிருந்தது. பசி வயிற்றை பிராண்டியது. சே இரண்டு இட்லி கையிலயே கொண்டு வந்தா, சாப்பிட்டிருக்கலாம், அவன் மனம் இடித்து சொன்னது.
பக்கத்து ஆட்டோ அப்பொழுதுதான் ஸ்டேண்டுக்கு வந்தது, சிங்கமுத்து வணக்கம்னே, நாளைக்கு புது வருசம் ஏதாவது விசேஷமுண்டா? கண்ணை சிமிட்டி கேட்டவன் திடீரென ஆமா சொல்ல மறந்துட்டேன், அண்ணி யார் கூடயோ வண்டியில் உட்கார்ந்து போயிட்டிருந்துச்சு, புது சாரி எல்லாம் கட்டி கையில் ஒரு தோள் பை எல்லாம் போட்டுட்டு. எங்கியாவது ஊருக்கு போறாங்களா?
சிங்கமுத்து இப்படி கேட்டதும் காளியப்பனுக்கு மனதுக்குள் கருக்கென்றது. என்றாலும் விட்டு கொடுக்காமல் எங்கியோ போரோமுன்னு சொல்லிகிட்டிருந்தா. அவனுக்கு பதில் சொல்லி விட்டாலும் மனதுக்குள் புது சேலை கட்டிகிட்டு தோள்ல பையோட போனாளா? அதுவும் யாரோ ஒருத்தர் வண்டியில..! யாராய் இருக்கும்? மனம் கட கடவென வேண்டாத சிந்தனைகள் சூழ ஆரம்பித்திருந்தது.
அதற்கு மேல் அவனால் அங்கிருக்க முடியவில்லை, சட்டென்று வண்டியை எடுத்தான், வியப்பாய் பார்த்த சிங்கமுத்துவிடம் ஒன்றும் சொல்லாமல் மெல்ல சிரித்து விட்டு வீடு வரைக்கும் போயிட்டு வந்துடறேன்.
வீடு வருவதற்குள் அவனது உடலும் மனமும் ஒரு நிலையில் இல்லாமல் இருந்ததால் எப்படி வீட்டுக்கு வந்தான் என்றே தெரியவில்லை. வீட்டில் யாரும் இருப்பதற்கான அறிகுறிகள் தெரியவில்லை. மனம் பதட்டத்துடன் கதவை தள்ளினான். அது “க்ரீச்” சத்தத்துடன் திறந்து கொண்டது. முன்னறையின் ஓரத்தில் ஆயா படுத்தவாறே இவனை பார்த்து கொண்டிருந்தாள். அவளை கண்டு கொள்ளாமல் வேகமாய் உள்ள்றைக்கு சென்றான். பீரோவை திறந்து மூடி வைத்தது போல் இருந்தது, அதை திறந்தான். சேலைகள் கலைந்திருந்ததை பார்த்தவனுக்கு மயக்கம் வருவது போல் இருந்தது. நகைகள்..!
மறைத்து வைத்திருக்கும் இடத்தை பார்க்க, அதில் ஒரு சில திருகாணிகள், கம்மல் இவைகள் மட்டுமே இருந்தது. இதுவெல்லாம் இவனது ஆயா நகைகள், அவள் கொண்டு வந்த நகைகள் ஒன்றையும் காணவில்லை. அவளது படிப்பு சான்றிதழ்கள் வைத்திருந்த இடத்தை பார்த்தான். ஒன்று கூட இல்லை.
கட்டிலில் தொப்பென்று உட்கார்ந்தான். “போச்சு” என் மானம் மரியாதை எல்லாம் போச்சு. “தலைவரே அண்ணே, இப்படி கூப்பிட்டு பஞ்சாயத்து செய்ய சொன்னவன் எல்லாம் இனி முதுகுக்கு பின்னே சிரிப்பான். வூட்டுல சம்சாரத்தை ஒழுங்கா வச்சுக்க தெரியாதவன், நினைக்க நினைக்க மனதுக்குள் பயங்கரமான சிந்தனைகள். அடுத்து என்ன செய்வது? அவன் மனம் அப்படியே யோசனையில் ஆழ்ந்தது.
கல்யாணத்திலேயே பொண்ணு கொஞ்சம் முரண்டு பிடித்ததாக சொல்லி யிருந்தார்கள். பையன் டிகிரி முடிக்கலை, நான் டீச்சர் ட்ரெயினிங்க் முடிச்சிருக்கேன், சொந்த ஆட்டோ கூட இல்லை, யார்கிட்டயோ வாடகைக்கு எடுத்து ஓட்டற ஆளு, இப்படி பல முரண்டுகளுக்கிடையே தூரத்து சொந்தம் வேற கெட்ட பழக்கம் இல்லாத பையன், அப்படி இப்படி என்று அவளை சம்மதிக்க வைத்ததாக அவளே இவனிடம் சொல்லியிருக்கிறாள்.
இதுவெல்லாம் இப்பொழுது ஞாபகத்திற்கு வந்தது. அவளது குணத்துக்கும் தன்னுடைய குணத்துக்கும் கூட வித்தியாசங்கள் புரிய ஆரம்பித்தது. எதிலும் ஆர்வம் ஏன் செய்து பார்த்தால் என்ன? ஆனால் நான்..! அவனையே நொந்து கொண்டான். சே கல்யாணம் ஆகி மூணு வருசம் ஓடிருச்சு, அவளோட ஏதாவது ஒண்ணூலயாவது ஒத்து போயிருக்கலாம், நான் ஒரு மடையன், இப்ப பாரு..எல்லாத்தையும் விட்டுட்டு போயிட்டா, அதுவும் என்னை கேவலப்படுத்திட்டு..!
யாரோ ஒரு இளைஞன் வண்டியில் வருவதும் அவனிடம் இவள் அடிக்கடி பேசிக்கொண்டிருந்ததும் ஞாபகம் வந்தது. இவனிடம் கூட அவனை அறிமுகப்படுத்தி இருக்கிறாள். ஆனால் இவன் அதிகமாக அலட்டிக்கொள்ளவில்லை. அவனும் ஏதோ சொல்ல வருவதும் அவள் முகத்தை பார்த்ததும் சட்டென பேசாமல் விட்டதும் அப்பொழுது சட்டை செய்யாமல் இருந்ததை இப்பொழுது சட்டை செய்து நினைத்து பார்த்தான். செய்து என்ன பயன்?
திடீரென்று எழுந்தவன் இனி இங்கிருந்து மற்றவர்களிடம் கேவலப்பட்டு கொண்டிருப்பதை விட ஊரை விட்டு போய் விடலாம். எங்கு போவது? அதை அப்புறம் பார்க்கலாம். போய் வண்டியை எடுத்தான்.
என்னப்பா திடீருன்னு ஆட்டோவை கொண்டு வந்து கொடுத்துட்டே? உரிமையாளர் கேட்டதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை, தொழிலை மாத்தலாமுன்னுதான், சொல்லிவிட்டு நடந்தே வீட்டுக்கு வந்தான். யாருக்காவது பணம் தரவேண்டியிருக்கா?
இரண்டு மூன்று பேரிடம் கைமாத்து வாங்கியிருந்தது ஞாபகம் வந்தது. கையில் ஒரு மோதிரம் இருந்தது. இதை கூட பொண்ணு வீட்டில்தான், அதுவும் மாரியம்மாள், இப்படி மூளியாய் இருக்காத, என்று வற்புறுத்தி அவனது விரலை அளவு வைத்து கடைக்கு போய் எடுத்து வந்து கொடுத்தது. அதை கொண்டு போய் அடகு கடையில் வைத்தான்.
அதிசயமாய் பார்த்தார்கள் நண்பர்கள். ஏம் மாப்பிள்ளை இப்ப என்ன அவசரம்? மெதுவா கொடு. இல்லை கடனை அடைச்சிடறது நல்லதில்லையா?
“ஓ” நாளைக்கு புது வருசம் வர்றதுனால கடனெல்லாம் செட்டில் பண்ணறே” அப்படித்தானே, வேறு வழி ஆமாம் என்று தலையசத்தான்.
எல்லாம் முடிந்து களைத்து வீடு வந்த பொழுது மணி மூன்றாகியிருந்தது. ஆயாவை என்ன செய்வது? இப்படியே விட்டு விட்டு போக முடியுமா? நேரம் காலம் தெரியாமல் பசித்தது. சமையலறைக்குள் நுழைந்து பார்த்தான் காலையில் செய்திருந்த இட்லி இருந்தது. கடைசி கடைசியாக அவள் செய்திருந்த இட்லியை சாப்பிடலாம், நான்கு இட்லியை சட்னியை ஊற்றி சாப்பிட்டான். இதுதான் வீட்டில் சாப்பிடும் சாப்பாடு, இனி எங்கிருப்போமோ? அங்கு சாப்பிட வழியிருக்கா?
காலையில் இருந்து ஒன்று சாப்பிடாமல் சாப்பிட்டதால் கொஞ்சம் மயக்கம் வந்தது. சட்டென ஆயா ஞாபகம் வர மீதி இருந்த இரண்டு இட்லியை எடுத்து வந்தவன் ஆயாவை மெல்ல எழுப்பி உட்கார வைத்து ஊட்டினான். என்னை மன்னிச்சிடு ஆயா, இதுதான் நான் உனக்கு ஊட்டுற கடைசி இட்லி, மனதுக்குள் நினைத்துக் கொண்டான். அதுக்கப்புறம் உன்னை நம்ம சொந்தக்காரங்க பார்த்துக்குவாங்களோ இல்லையோ !
எங்க போனா உன் பொண்டாட்டி? ஆயா சைகையால் கேட்டாள்.
இரண்டு கையை மேலே தூக்கி காண்பித்து உதட்டை பிதுக்கி காட்டியவனுக்கு கண்ணில் நீர் திரண்டு வர, சட்டென அவள் பார்க்காதவாறு எழுந்து கை கழுவ சென்றான்.
மணி ஐந்தாகியிருந்தது, இன்னும் இரண்டு மணி நேரம் இருக்கலாம், இருட்டு வந்தபின் கிளம்பலாம். அப்படியே நாற்காலியில் உட்கார்ந்து இருந்தான்.
வெளியே “பட பட’’வென சத்தம். அதுவும் இவனுக்கு பழக்கமான ஆட்டோ சத்தம் வீட்டு முன்னால் நிற்கும் சத்தம்.
யாராய் இருக்கும்? உட்கார்ந்தவாறே இவன் சிந்தனையில் இருக்க, உள்ளே வாடா, ஆயா என்ன பண்ணுச்சோ, பாவம் பசியில இருந்திருக்கும். இது..இது..மாரியம்மாளின் குரலல்லவா.
தடாலென நாற்காலியை விட்டு எழுந்தவன் வேகமாய் சென்று கதவை திறக்க மாரியம்மாள் ஆட்டோ அருகில் நின்று அவனை இறங்க சொல்லி கொண்டிருந்தாள். அவன்..அதே இளைஞன்.
இருவரும் ஒரு சேர இவனை பார்த்தார்கள். ஆட்டோ புத்தம் புதியதாய் இருந்தது.
உங்க மாமாகிட்ட போய் நீயே சாவிய கொடு, உள்ளே வந்து கொடு, சொல்லி விட்டு ஏங்க ஆயாவுக்கு மதியான சோறு கொடுத்தீங்களா? அவனை தள்ளி விட்டு உள்ளே வேகமாக சென்றாள்.
காளியப்பன் அப்படியே பிரமித்து நிற்க, அந்த இளைஞன் “மாமா அக்கா உனக்கு சர்ப்ரைசா அடுத்த வருசத்துல இருந்து புது ஆட்டோ வாங்கி கொடுத்துட்டா” எங்களுக்கு ட்ரீட் கொடுப்பியா? உரிமையுடன் இவன் கையில் சாவியை திணித்தான்.
சமையலறைக்குள் நுழைந்த மாரியம்மாள் வேகமாக வெளியே வந்தவள் “ஏங்க உங்களுக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா? நாந்தான் இல்லையே அரிசி கழுவி குக்கர்ல போட்டு வைக்கறதுக்கு என்ன? பாவம் எனக்காக இவனும் பசியோட அந்த பைனான்ஸ் ஆபிசுல உட்கார்ந்திருந்தான்.
காளியப்பனுக்கு எப்படித்தான் உணர்வு வந்ததோ தெரியவில்லை, அந்த இளைஞனை அப்படியே நாற்காலியில் உட்கார வைத்து விட்டு ஒரே நிமிசம் வந்துடறேன், கையில் இருந்த சாவியை எடுத்துக்கொண்டு ஆட்டோவை கிளப்பினான்.
தடல் புடலாய், மூவரும் தரையில் அமர்ந்து காளியப்பன் வாங்கி வந்திருந்த ரெங்கவிலாஸ் சாப்பாட்டை பதம் பார்த்தனர். அவ்வப்பொழுது மாரியம்மாள் எழுந்து போய் ஆயாவுக்கும் கொஞ்சம் சோற்றை போட்டு பிசைந்து கொடுத்து விட்டு வந்தாள்.
இளைஞனை கொண்டு போய் அவனது இரு சக்கர வாகனம் நிறுத்தி வைத்திருந்த இடத்தில் விட்டு விட்டு, அவன் கையை பிடித்து பல முறை நன்றி சொன்னான்.
வீட்டிற்கு வரும் முன்னார் கோனியம்மன் கோயில் வாசல் முன் நின்று கை எடுத்து கும்பிட்டவன் எதிரில் இருந்த பூக்கடை முனியம்மாக்காவிடம் நாலு முழம் மல்லிகைப்பூவை வாங்கி கொண்டான்.
காளியப்பா கஞ்சப்பையன் நீ , நாலு முழம் பூவு கேக்கறே? நக்கலாய் முனியம்மாக்கா கேட்கவும் இவனுக்கு எங்கிருந்துதான் அந்த வெட்கம் வந்ததோ நெளிந்தான்.
இரவு நீண்ட நேரம் அவள் மடியில் படுத்து குலுங்கி குலுங்கி அழுதவனை, ஏதும் புரியாமல் முதுகை தடவிக்கொடுத்தபடி மாரியம்மாள் தேற்றியபடியே நீ நான் என்ன சொன்னாலும் நீ கேக்க போறதில்லை, அதான் நானே முடிவெடுத்தேன், எங்க தூரத்து சொந்தக்கார பையன், பைனான்ஸ் கம்பெனியில வேலை செய்யறான், இரண்டு மூணு மாசமா அவனை வர சொல்லி ஐடியா கேட்டு வச்சிருந்தேன். உன் கிட்ட ஏதும் சொல்லாதடான்னும் சொல்லி வச்சேன், இல்லையின்னா நீ ஏதாவது “நொள்ளை” பேசி காரியத்தை கெடுதுடுவே.
இன்னைக்கு, என்னஆனாலும் சாரின்னு அவனை வர சொல்லி என் நகை எல்லாத்தையும் பேக்குல போட்டுட்டு போய் பாங்குல வச்சு அந்த பணத்தை புது ஆட்டோவுக்கு கட்டிட்டி மிச்சம் அவன் வேலை செய்யற ‘பைனான்ஸ்’ கம்பெனியில போட்டு கட்டிட்டு, வண்டிய எடுத்துட்டு வர்றதுக்கு இவ்வளவு நேரமாயிடுச்சு.
நாளைக்கு வருச பொரப்பு, நாம சொந்த வண்டியில, முதல்ல ஈச்சனாரி பிள்ளையார பார்த்துட்டு, அப்படியே கோணியம்மன், உப்பிலிபாளையம் மாரியம்மன் கோயில் எல்லாம் போயிட்டு வந்துடலாம். உங்க ‘ஆயாவையும்’ ஆட்டோவுல வச்சு கூட்டிட்டு போயிட்டு வந்திடலாம். கஷ்டமோ, நஷ்டமோ, துணிச்சலா இறங்குனாத்தாயா நாம புழைக்க முடியும். நாளைக்கு புது வருசம் நமக்கு நல்லா இருக்கும்.
அவள் சொல்லிக்கொண்டிருந்ததை காதில் வாங்கியபடியே அவள் மடியில் படுத்திருப்பதை தனக்கு பெரும் பாதுகாப்பாக கருதிக்கொண்டான் காளியப்பன்.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (31-Dec-22, 12:22 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 187

மேலே