கடந்த 2022 வருடமும் புதிய 2023 வருடமும்
கடந்த 2022 வருடமும் புதிய 2023 வருடமும் இன்று அதிகாலை ரகசியமாக சந்தித்துப்பேசிய சம்பாஷணை, இதோ :
2022 : வாய்யா 2023 சொந்தக்காரரே, நீ இந்த வீட்டிற்குள் வந்ததில் எனக்கு ஒரு ஆட்சேபணையும் இல்லை. என்ன ஒரே விஷயம், ஒரு வருடமாக நான் இன்றி இந்த உலகத்தில் ஒரு துரும்பும் அசையவில்லை. ஆனால் நேற்று இரவு 12 மணி அடித்தவுடன் என்னை அடிக்காத குறையாக விரட்டிவிட்டார்கள். இனி நான் வாடகைக்குகூட இங்கே தங்க முடியாது . எங்கேயாவது கண்காணாத இடத்திற்கு ஓடிவிட வேண்டும். இனிமேல் 2023 , உன் ராஜ்ஜியம் தான்.
2023 : நன்றி 2022 வருட சொந்தக்காரரே. நீ ஒரு வருடத்தில் எவ்வளவோ விஷயங்களை செய்துவிட்டாய். ரஷ்ஷிய-உக்ரைன் சண்டையை கிளப்பிவிட்டு ஜாலியாகப் போய்விட்டாய். இப்போ நான் தானே இவங்க ரெண்டு பேரும் அடிக்கிற கூத்தைப் பார்க்கணும். இந்த கோவிட் அரக்கனை நீ நன்றாகவே விரட்டிவிட்டாய். அதற்கு நன்றி. ஏதோ சீனாவில் மாத்திரம் கொஞ்சம் அப்பிடி இப்பிடின்னு பிரச்சினை இருக்கு. அதை நான் சமாளித்துவிடுவேன்.
2022 : அதுவும் சரிதான் 2023 . நான் இருந்த நேரத்தில் இந்த கிளைமேட் மாற்றத்தால் ஐரோப்பாவில் எப்போதும் இல்லாத வெயில் அடித்தது. அந்த சூடு இப்போதும் எனக்கு தெரிகிறது.
2023 : அப்படியா 2022 . ஏதோ இந்த அளவுக்கு நீ பார்த்துட்டு போயிட்டே. என் வருடத்தில் என்னென்னவெல்லாம் நடக்கபோவுதோ, தேவுடா. ஒரு பக்கம் ஒரு காலத்தில் அண்ணன்-தம்பியாக இருந்த ரஷியா-உக்ரைன் அநியாயமா சண்டை போட்டுக்கொண்டிருக்காங்க. இன்னொரு பக்கம் அமெரிக்கா-சீனாவின் 'நீ பெரியவனா நான் பெரியவனா' என்ற பகட்டுச்சண்டை அவ்வப்போது உலகத்தையே கொஞ்சம் தடுமாற வைக்கிறது. இந்த ரெண்டு பேரையும் எப்போதும் நம்பக்கூடாது.
2022 : சரியாதாம்பா சொன்னே 23 . உன்னோட இந்த ஒரு வருஷத்திலே இந்த ரெண்டு பேரும் யாருக்கு எப்போ என்ன மாதிரி ஆப்பு வைக்கப்போறாங்களோ தெரியாது. ஈரான் நாட்டிலேயும் இப்போதெல்லாம் கொஞ்சம் மக்கள் கொதிப்பு அதிகமாகப்போய்விட்டது. உன்னோட வருஷத்திலே இங்கே என்ன ஆகுமோன்னு தெரியல. ஏதாவதுன்னா உனக்கு நிச்சயம் தலைவலிதான்.
2023 : ஆமாம்பா. ஒருவகையில் எல்லாமே தலைவலிதான். உன்னைப் போலவே ஆரம்பத்தில் என்னையும் கோலாகலத்துடன்தான் வரவேற்றாங்க. உன்னை கரிச்சு கொட்டியதுபோல இன்னும் கொஞ்ச நாளில் என்னையும் " எப்போது இந்த 2023 சனியன் போகுமோ" என்று என்னை வெறுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. நீ போகும்போது மூணு கோடி அகதிகள் இந்த உலகம் முழுவதும் தவிச்சிண்டு இருக்காங்க. என் காலத்தில் இவங்க நிலை என்ன ஆகும்னு நினைச்சா ரொம்ப கஷ்டமா இருக்கு.
2022 : எனக்கு இன்னொரு சந்தோசம் என்னான்னா, இந்திய நாட்டுக்கு உலகளவில் இப்போது ஓரளவுக்கு நல்ல பெயர் உள்ளது. இந்தியர்களைத்தான் அமெரிக்கா, கானடா , ஆஸ்திரேலியா, வளைகுடா தேசங்கள் போன்ற நாடுகளில் அதிகமாக வேலைக்கு அமர்த்திக்கொள்கிறார்கள். அப்படீன்னா இந்தியர்கள் நன்றாக வேலை செய்கிறார்கள் என்றுதானே அர்த்தம். ஆன்மீக விஷயத்தில் இந்தியாவை அடிச்சிக்க எந்த நாடும் இல்லை. மனஅமைதி, மகிழ்ச்சி தரும் மாற்றம் வேணும்னா நிறைய அண்டைநாட்டினர் இந்தியாவுக்குத்தான் பயணம் ஆகிறார்கள். எவ்வளவோ பிரச்சினைகள் இந்தியாவில் இருந்தாலும், இந்தமாதிரி விஷயங்களைப் பார்க்கும்போது கொஞ்சம் மனசுக்கு ஆறுதலாக இருக்கிறது. பல ஆயிரக்கணக்கனான வருடங்களுக்கு முன்பு ஓஹோ என்று இருந்த தேசம்தான் இந்தியா.
2023 : அதிலென்னப்பா சந்தேகம், இருக்கோ இல்லையோ, நல்லதோ கெட்டதோ, இந்தியர்கள் ரொம்பவும் அட்ஜஸ்ட் செய்து கொண்டு போய்விடுகிறார்கள். உ பி காரர் தமிழ்நாட்டில் சென்று பிழைத்துக்கொள்வார், கேரளாகாரர் ஹிமாச்சல பிரதேசம் சென்று பிழைப்பை நடத்திக்குவார். தமிழ்நாட்டைத் தவிர்த்து இதர மாநிலங்களில் ஹிந்தி மொழியை மக்கள் ஓரளவுக்கு புரிந்துகொண்ட பேசுவதால் வடஇந்திய மக்களுக்கும் தென்னிந்தியாவில் வாழ ரொம்ப பிரச்னை எதுவும் இல்லை.
2022 : அதுவும் ஒருவிதத்தில் சரிதான். எல்லா மாநிலத்து மக்களும் அவரவர்கள் மொழியை விட்டுக்கொடுக்காமல் இருக்கின்றனர். அதே நேரத்தில் ஹிந்தி மொழியின் அவசியத்தை அவர்கள் உணர்ந்துள்ளனர். தமிழ் நாட்டு மக்களுக்கு இந்த விஷயத்தில் எப்போது நல்ல புத்தி வருமோ?
எந்த பட்டினத்தில் எந்த ராஜா ஆண்டா என்ன, பேசுவதற்கு அரசியலும் அரட்டையும் , பார்ப்பதற்கு சினிமாவும், தொலைக்காட்சியும் இருந்துவிட்டால் இந்தியர்களுக்கு வேறு எதுவுமே தேவையில்லை. சரிப்பா 2023 , உன்னுடைய நேரத்தில் இந்தியாவும் இதர உலக நாடுகளும் பொருளாதாரம் மட்டும் இன்றி பண்பாடு, கலாச்சாரம், ஆன்மிகம் போன்றவற்றிலும் உண்மையான முன்னேற்றம் காண உனக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
2023 : ஓகே 2022 . ரொம்ப நன்றி. உன் காலத்தில் உலகக் கால்பந்து விளையாட்டு கட்டாரில் அருமையாக நடந்தது. மெஸ்ஸி அபாரமாக ஆடி உலகக்கால்பந்தாட்டத்தில் ஒரு சரித்திரத்தையே படைத்துவிட்டார். கூடவே ஆர்ஜென்டினாவுக்கு உலககோப்பையையும் வாங்கித்தந்துவிட்டார். சரிப்பா, உன்னுடன் பேசியதில் எனக்கு ஒரு தெம்பு வந்துவிட்டது. என்னுடைய இந்த வருடம் ஜாம்ஜாம்னு நடக்கும் , நீ ஒன்னும் கவலை படாதே.
சரி, இப்போ நீ ஜாக்கிரதையாக எங்கேயாவது சொல்லிக்கொள்ளாமல் போய் ஒளிஞ்சுக்கோ. 2020 , 2021 இவர்களும் இப்படித்தான் ஓடி ஒளிந்துவிட்டார்கள். இனி வரும் பன்னிரண்டு மாதங்கள் என்பாடு. அது உடன்பாடா அல்லது பெரும்பாடா என்பது போகபோகத்தான் தெரியும்.
2022 கொஞ்ச நேரம் சோகமாக இருந்துவிட்டு , அதன் கண்ணில் வழிந்த கண்ணீரைத்துடைத்துக்கொண்டு , 2023 க்கு கையை கொடுத்துவிட்டு, மறைந்தது. 2023 அதை பார்த்த வண்ணம், கொஞ்சம் கண் கலங்கிவிட்டு மெதுவாக அதனது வேலைகளைத் துவக்கியது.