தமிழ் மொழி பாதுகாப்பில் நமது பங்கு

முகலாயர் தென்னிந்தியாவைச் சூறையாடிய காலங்கள், தமிழ் தத்தளித்த நேரம்!
ஆங்கிலேயர் நம்மை அடிமை செய்தபோது, தமிழ் மொழி கொண்டது அலங்கோலம்!
தன்னந்தனியே நின்று தமிழ் ஆயுதம் தாங்கி, ஆங்கிலேயரை எதிர்த்தார் பாரதியார்!
பாரதி கவிதைகளில் தமிழின் வீரத்தைக்கண்டு தமிழை அழகு செய்தார் பாவேந்தர்!

முகலாயர்களும் ஆங்கிலேயர்களும் நம் நாட்டிலிருந்து என்றோ விரட்டப்பட்டனரே!
ஆயினும் அவர்களின் மொழியும் கலாச்சாரமும் தமிழ் மண்ணில் வேரூன்றியதே!
தமிழ்ப் பெருமிதத்துடன் வெற்றிநடை போட்ட தமிழ்நாடு ஆங்கில மோகம் கொண்டதே!
இன்று தமிழ்க் குடும்பங்கள் பல, ஆங்கிலம் பேசும் கிடங்குகளாக மாறிவிட்டதே!

எத்தனை தமிழ் மக்கள் கம்பரையும் கம்பராமாயணத்தின் நடையழகையும் அறிவார்கள்?
உலகப்பொதுமுறை திருக்குறளை இயற்றியது திருவள்ளுவரென எத்தனை பேர் உரைப்பார்கள்?
ஆன்மீக சுவையை தமிழ் கவிதைகளில் வடித்த வள்ளலாரை அனைவரும் அறிவாரோ?
வாழ்வே மாயம் எனும் பட்டினத்தாரின் வாழ்க்கைத் தத்துவத்தை உணர்வாரோ?
ஆங்கிலம் உலகமொழி, கற்பது தவறல்ல ஆயினும் நாம் தமிழன்னையின் சுற்றம்!
நமது தாய்மொழியை முறையே கற்காமல், எழுதாமல், பேசாமல் இருப்பது பெரும் குற்றம்!
தமிழைத் தாய்மொழியாகக் கொண்டோர் தமிழை மதிக்காமல் இருப்பதால் தமிழன்னைக்கு சீற்றம்!

பள்ளியில் பிள்ளைகள் ஆங்கிலத்தில் மட்டுமே உரையாடவேண்டும், இது ஒரு மடமை!
வீட்டில் பிள்ளைகள் தமிழில் மட்டுமே அளவளாவவேண்டும், இது பெற்றோரின் கடமை!
தாய்மொழியில் பயில்வது, தமிழ் மொழியில் பழகுவது ஒவ்வொருவரின் தனி உரிமை!
தெள்ளு தமிழ்மொழியை சிறப்பாகக் கற்றுத்தேர்வதில்தானே நமக்குப் பெருமை!

ஆழ்வார்கள், நாயன்மார்கள் இயற்றிய பாமாலைகள் தமிழ் மொழி சூடிய வெற்றி மாலைகள்!
மீனாட்சி சுந்தரம் பிள்ளை மீட்டு எடுத்த பழமையான தமிழ் நூல்கள் அழியவிருந்த அரிய ஓலைகள்!
கோபாலகிருஷ்ண பாரதிக்குப்பின் தோன்றி மறைந்த உயர்ந்த தமிழ் எழுத்தாளர்கள் பலர்!
புதுமைப்பித்தன், கல்கி கிருஷ்ணமூர்த்தி, ஜெயகாந்தன், கண்ணதாசன் போன்றோர் அதில் சிலர்!

வேறு மாநிலம் வேறு நாடு சென்றபோதும் நம் வீரத்தமிழை இடைவிடாது முழங்குங்கள்!
எங்கிருந்தபோதும் தமிழை கற்கவும் ரசிக்கவும் பரப்பவும் உறுதிகொள்ளுங்கள்!
தொழில்சார்த்தல் இல்லாத தருணங்களில் தமிழில் அதிகம் அளவளாவி மகிழுங்கள்!
'தமிழ் எனது தாய்மொழி தமிழ் எனது கண்கள்' எனும் லட்சியத்துடன் வாழுங்கள்!

கணிதமோ கணினியோ பள்ளியோ அலுவலகமோ வீட்டிலோ வீதியிலோ தமிழைக் கையாளுங்கள், தமிழில் கொஞ்சுங்கள் தமிழில் கெஞ்சுங்கள் ஒருவரையொருவர் மிஞ்சுங்கள்!
தாய்மொழியை காக்க நாம் பாடுபடவில்லையெனில் காலமும் மதிக்காது நம்மை!
கன்னித்தமிழை காதலிப்போம், முத்தமிழை வளர்ப்போம், தமிழுடன் இணைவோம், அதுவே தமிழுக்கு நன்மை, நமக்கும் நன்மை!

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (9-Jan-23, 11:17 am)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 69

மேலே