392 அளவிலார் உதவியால் உயிர் வாழும் - கைம்மாறு கருதா உதவி 10

எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
மா விளம் விளம் மா அரையடிக்கு
(விளம் வருமிடங்களில் மாங்காய்ச்சீர் அருகி வரலாம்)

ஊட்டி நீர்கறி யுடையணி விறகில்
..உரிய யாவையும் நாம்பெறு வான்பல்
நாட்டில் காட்டில்பொற் சுரங்கத்தில் கடலின்
..அகத்தி லெண்ணிறந் தவர்நமக் குழைப்பார்
சூட்டி வைகலும் ஆயிரம் பேர்தம்
..துணையி லாதுயி ருயல்நமக் கரிதாம்
ஆட்டி யித்தனை பேர்பணி கொளுநாம்
..அன்பி லாதிருப் பதுதகா துளமே. 10

- கைம்மாறு கருதா உதவி, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

நெஞ்சே! உணவு, தண்ணீர், காய்கறி, ஆடை, அணிகலன் விறகு முதலிய வீட்டுக்கு இன்றியமையாத எல்லாப் பொருட்களையும் நாம் பெறுவதற்காக பல நாட்டிலும், காட்டிலும், சுரங்கங்களிலும், கடலின் உள்ளேயும் எண்ணிலாதவர்கள் நமக்காக உழைக்கிறார்கள்.

நம் தூண்டுதலால் நாளெல்லாம் உழைக்கும் ஆயிரக்கணக்கானவர் துணையின்றி நாம் உயிர் பிழைக்க முடியாது.

இத்தனை மக்களும் அலைந்து செய்யும் வேலையைக் கொள்ளும் நாம் அவர்களிடம் அன்பில்லாதிருப்பது முறையாகாது” என்கிறார் இப்பாடலாசிரியர்.

ஊட்டி - உணவு. இல் - வீடு. சூட்டி - தூண்டி
பெறுவான் - அடைவதற்கு. ஆட்டி - அலைந்து.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-Jan-23, 5:36 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 20

மேலே