391 பகைவர்க்குச் செய்யும் உதவிக்குப் பேரின்பம் பயன் - கைம்மாறு கருதா உதவி 9
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
விளம் மா தேமா அரையடிக்கு
(விளம் வருமிடங்களில் மாங்காய்ச்சீர் அருகி வரலாம்)
நள்ளுநர் தமக்கும் என்றும்
..நன்றெமக் கியற்று வோர்க்கும்
உள்ளுவந் தியற்று கின்ற
..உதவிதான் அரிய தன்று
புள்ளுவம் இழைக்கா நின்ற
..பொருந்தலர்க் காற்று நன்றி
விள்ளும்வீட் டின்பந் தன்னை
..விளைக்கின்ற வித்தாம் நெஞ்சே. 9
- கைம்மாறு கருதா உதவி, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”நெஞ்சே! நண்பர்க்கும், நமக்கு எப்பொழுதும் நன்மையே செய்வோர்க்கும் மனம் மகிழ்ந்து செய்யும் உதவி மட்டும்தான் சிறந்தது என்பதல்ல.
நமக்கு வஞ்சகம் செய்யும் பகைவர்க்குச் செய்யும் நன்மை புகழ்ந்து சொல்லப்படுகின்ற வீடு பெறும் இன்பத்தை நமக்குத் தருவதற்குக் காரணமாகும்” என்கிறார் இப்பாடலாசிரியர்.
நள்ளுநர் - நண்பர். புள்ளுவம் - வஞ்சகம்.
விள்ளும் - சொல்லும். வித்து - காரணம்.