அகமும் நாடும்

தமிழ் நாடென்றப் பெயர்
தகா தென்று
புதியப் புயல் ஒன்று
மையம் கொண்டிருக்கிறது இன்று

நாட்டிற்குள் நாடு
கூடா தென்று ஒரு
கூக்குரல் கேட்கிறது

இதனால்
பைங்காநாடு ஒரத்தநாடு
கொடநாடு வளநாடு
கூறைநாடு மக்களெல்லாம்
ஊரின் பெயருக்கு
ஊறு வந்திடுமோ என்று
உறக்கமின்றி தவிக்கின்றனர்!

ஊரின் பெயர் மட்டுமின்றி
வாய் சொல்லாய் வழங்கி வரும்
கொங்கு நாடு செட்டி நாடெல்லாம்
எப்படி மாறும் என்று
எதுவும் புரியவில்லை

நாட்டிற்குள் நாடு கூடாதென்பதால்
" மாநாடு" நடத்த மாற்றுப் பெயர் தேடி
அகராதிகளை அலசுகின்றனர்
அரசியல்வாதிகள்!

ஸ்தான் என்றால் நாடென்று
பன்னாட்டு மொழி சில பகரும்
பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான்
உஸ்பெஸ்கிஸ்தான் கசக்கிஸ்தான்
நாடுகள் இயங்குவதையும் நாமறிவோம்

பிரிவினை வேண்டிய நமது
பஞ்சாப் சீக்கியர் கூட
காலிஸ்தான் கேட்டுத்தான் போராடினர்

இன்றும் கூட
இந்தியாவை இந்துஸ்தான் என்று
மாற்றிட நினைப்பவர் உண்டு
இந்துஸ்தானுக்குள் இன்னொரு ஸ்தானாய்
ராஜஸ்தான் எப்படி இயங்கும்?


ராஷ்டிரம் என்றால்
தேசம் என்றே இந்தி சொல்லும்
அப்படியென்றால்
இந்திய ராஷ்டிரத்தில்
மஹா ராஷ்டிரத்தின் பெயர்
மாற்றி அமைக்கப்பட வேண்டாமா?

ஊழலோடு லஞ்சம்
உயர்ந்து நிற்கும் விலைவாசி
சாதி மத சண்டைகள்
கொல்ல வரும் கரோனா
சீனாக்காரன் சீண்டல்கள்

இப்படி
அடுக்கடுக்காய் வரும்
அளப்பறிய துன்பங்களால்
அல்லல்படும் நமது
சிந்தனையை சிதறடிக்க
பெயர் மாற்ற பிரச்சனையை
பெரிதாக்கித் தந்த
பெரியோருக்கு வணக்கம்

இன்னும் இரண்டு திங்கள்
ஊடக வாய்களில்
ஊறிடும் இப்பொரி

பின்னர் என்ன?
பல மொழி பேசும் தமிழ் நாட்டில்
தமிழுக்கு மட்டும்
வாழ்த்து ஏனென்று
இன்னொருவர் கேட்க
அதையும் விவாதித்து விவாதித்து
அல்லல் அனைத்தையும் மறந்து
ஆனந்தப் படட்டும் அகமும் நாடும்

எழுதியவர் : கொ.வை.அரங்கநாதன் (11-Jan-23, 10:53 pm)
சேர்த்தது : கொவைஅரங்கநாதன்
பார்வை : 211

மேலே