பொங்கலோ பொங்கல்

"பொங்கலோ பொங்கல்" என்று
"பொங்கல்" பண்டிகையை இன்று பலரும் "அடுக்கு மாடியில்" தான்
கொண்டாடுகின்றோம்
இது காலத்தின் கட்டாயம்....!!

ஆனால்....
கிராமத்தில் கொண்டாடிய
"பொங்கல் நினைவுகள்"
மனதிலே பொங்கி வருவதை
தடை போட முடியாமல்
தவிக்கும் தவிப்பு இருக்கே....ம்ம்
என்னவென்று சொல்வது

"பொங்கல்" என்றவுடன் கிராமத்து
"பொங்கல்" நினைவுகள்
எந்தன் நெஞ்சினில்
அலையென வீசியது

கிராமத்து வீதியெங்கும்
கிராமத்து பெண்கள்
ஒற்றுமையுடன் ஒன்றுக்கூடி
சாணம் தெளித்து
வண்ண கோலம் போட்டு
மாவிலை தோரணம் கட்டி
புதுபானையை அலங்கரித்து
அதிலே புத்தரிசியிட்டு
அடுப்பின் இரு பக்கங்களிலும்
காவல் தெய்வம் போல்
செங்கரும்பு காத்து நிற்க

பெண்கள் கோலாட்டம்,
கும்மியாட்டம் என்று பாடி மகிழ
ஆண்களும் சிலம்பாட்டம்,
கரகாட்டம் என்று ஆடி மகிழ

பொங்க பானையில்
"பொங்கல்" பொங்கும் போது
"பொங்கலோ பொங்கல்"
"பொங்கலோ பொங்கல்"
என்று சிறுவர்களும்
சிறுமியர்களும் கூவி மகிழ
"பொங்கல்" கொண்டாட்டம்
அடடா அற்புதம்... அற்புதம்...!!

இன்றைய தலைமுறைக்கோ
இந்த நிகழ்வுகள் எட்டாக்கனி
அவர்களுக்கு நம் நாட்டின்
பாரம்பரிய பண்டிகைகளின்
அருமை பெருமைகளை கற்பித்து
சிதையாமல் காக்க வேண்டும்

எந்தன் வசந்த கால "பொங்கல்" நினைவலையில் இருந்து
ஆனந்த கண்ணீரில் மிதந்து
வெளியில் வந்தேன்

சோற்றில் நாம் கை வைத்து மகிழ
சேற்றில் கால் வைத்த உழவர்களை
இந்த "பொங்கல்" நன்னாளில்
இருகரம் கூப்பி வணங்கிடுவோம்

"பொங்கல்" திருநாளை போற்றி மகிழ்ந்திடுவோம்...!!
எல்லோருக்கும்
இனிய "பொங்கல்" வாழ்த்துக்கள்
அனைவரும் வாழ்க நலமுடன்....!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (13-Jan-23, 3:32 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : pongalo pongal
பார்வை : 2165

மேலே